ஆப்கான் A அணியுடனான கடைசிப் போட்டியிலும் இலங்கை தோல்வி

Afghanistan A Tour of Sri Lanka 2024

109
Afghanistan A Tour of Sri Lanka 2024

ஆப்கானிஸ்தான் A அணிக்கு எதிராக நடைபெற்ற 5ஆவது உத்தியோகப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை A அணி தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் இலங்கை A அணி தோல்வியைத் தழுவிய போதிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3க்கு 2 என்ற கணக்கில் இலங்கை A அணி கைப்பற்றி அசத்தியது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் A அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணி 43 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை A அணி சார்பில் பசிந்து சூரியபண்டார மாத்திரம் அரைச் சதம் கடந்து 92 பந்துகளில் 8 பௌண்டறிகளுடன் 70 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார். அவர் தவிர, மினோத் பானுக 24 ஓட்டங்களையும், சொனால் தினூஷ 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் A அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய நவீத் சத்ரான் 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், நன்ஜேலியா கரோட்டி 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து பதிலுக்கு 198 என்ற வெற்றியிலக்கை நோக்கி ஆட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் A அணி 45 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலங்கை A அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

ஆப்கானிஸ்தான் A அணி சார்பாக ரியாஸ் ஹஸன் 74 ஓட்டங்களையும், சஹீதுல்லாஹ் 47 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை A அணி சார்பில் மொஹமட் சிராஸ் 23 ஓட்டங்களுக்கு 2 7விக்கெட்டுக்களையும், துஷான் ஹேமன்த 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

எனவே, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 3 போட்டிகளிலும் இலங்க  A அணியும், கடைசி 2 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் A அணியும் வெற்றியீட்டிய நிலையில், இந்த தொடரை 3-2 என்ற கணக்கில் இலங்கை A அணி கைப்பற்றியது.

இவ்விரு அணிகளுக்கிடையேயான நான்கு நாட்கள் கொண்ட ஒற்றை டெஸ்ட் போட்டி 11ஆம் திகதி கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

 

இலங்கை A அணி 197 (43) பசிந்து சூரியபண்டார 70, மினோத் பானுக 24, சொனால் தினூஷ 21, நவீத் சத்ரான் 4/45, நன்ஜேலியா கரோட்டி 3/31

 

ஆப்கானிஸ்தான் A அணி – 198/5 (45) ரியாஸ் ஹசன் 74*, சஹிதுல்லாஹ் 47, மார்விஷ் ரசூலி 36, நன்ஜேலியா கரோட்டி 27*, மொஹமட் சிராஸ் 2/23, துஷான் ஹேமந்த 2/46

 

முடிவு – ஆப்கானிஸ்தான் A அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<