“T20I தொடரை வெற்றிக்கொள்ள முடியும்” – அவிஷ்க நம்பிக்கை

India tour of Sri Lanka 2021

673

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற மனத்திடத்துடன், T20I தொடரில் சிறந்த சவாலை இந்திய அணிக்கு கொடுத்து வெற்றிபெற முடியும் என இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுற்றுலா இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே, அவிஷ்க பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

ஆறுதல் வெற்றியுடன் ஒருநாள் தொடரினை நிறைவு செய்த இலங்கை

நாம் அனைவரும் எதிர்பார்த்திருந்த வெற்றி இது. நாம் வெற்றிபெற்றாலும், தோல்வியடைந்தாலும் தொடர்ந்து ஒன்றிணைந்து உள்ளோம். அடுத்து எமக்கு T20I தொடர் உள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்கு சிறந்த சவாலை கொடுத்தால், சிலநேரங்களில் எம்மால் தொடரை வெற்றிக்கொள்ளவும் முடியும் என நினைக்கிறேன் என்றார்.

நேற்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாக அவிஷ்க பெர்னாண்டோவின் துடுப்பாட்டம் அமைந்திருந்தது. இவர், நிதானமாக துடுப்பெடுத்தாடி 98 பந்துகளில் 76 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். ஓட்டங்களை வேகமாக குவிக்கும் இவர், நேற்றைய போட்டியில் நிதானமாக துடுப்பெடுத்தாடியமை தொடர்பிலும் குறிப்பிட்டார்.

நாம் இளம் அணியுடன் விளையாடுகின்றோம். பவர் ப்ளே ஓவர்களில் எப்போதும் போன்று ஓட்டங்களை என்னால் குவிக்க முடியும். அதன் பின்னர், எவ்வாறு துடுப்பெடுத்தாட வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்கவேண்டும்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்படுகின்றவர் என்ற ரீதியில், எவ்வாறு நீண்ட இன்னிங்ஸ்களை ஆடுவது என்பதை திட்டமிடவேண்டும். இந்த தொடரில் நான் நினைத்ததை போன்று, அணிக்காக ஓட்டங்களை பெறமுடிந்தது. குறிப்பாக பவர் ப்ளே ஓவர்களுக்கு பின்னர், ஆறு அல்லது நான்கு ஓட்டங்களுக்கு செல்லவில்லை என்றார்.

இதேவேளை பானுக ராஜபக்ஷவின் துடுப்பாட்டம் மற்றும் அவருடன் மேற்கொண்ட சத இணைப்பாட்டம் தொடர்பிலும் அவிஷ்க பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

பானுக ராஜபக்ஷ அவருடைய பாணியில் துடுப்பெடுத்தாடினார். எனவே, எனக்கு வேகமாக ஓட்டங்களை பெறவேண்டிய சூழ்நிலை இல்லை. அவர் ஒவ்வொரு ஓவர்களுக்கும் பௌண்டரிகளை பெறுவதால், அவருக்கு துடுப்பாட்ட முனையை வழங்குவதற்கு தீர்மானித்தேன். அவர் சிறப்பாக துடுப்பெடுத்தானார். துடுப்பாட்ட முனையை மாற்றிக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததால், நல்ல இணைப்பாட்டம் ஒன்றை பெறமுடிந்தது என சுட்டிக்காட்டினார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், T20I தொடர் நாளைய தினம் (25) ஆரம்பமாகவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…