அவுஸ்திரேலிய அணியில் இருந்து வெளியேறும் பிரபல வீரர்கள்

362

தென்னாபிரிக்கா தொடருக்கான அவுஸ்திரேலிய அணியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயம் காரணமாக விளகியுள்ளனர். 

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 3 T20i போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர் எதிர்வரும் 30ம் திகதி முதல் செப்டம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறுகிறது 

இந்த நிலையில், இந்த தொடருக்கான அவுஸ்திரேலியா அணியில் இருந்து காயத்தால் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகிய இருவரும் விலகுவதாக அறிவித்துள்ளனர். ஸ்மித்திற்கு இடது மணிக்கட்டில் தசைநாரில் காயம் எற்பட்டுள்ளது. அது குணமடைய இன்னும் நான்கு வாரங்கள் எடுக்கும் என தெரிகிறது. அதனால் அவர் தென்னாபிரிக்காவுடனான தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.   

அதேவேளை, வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடர் முடிவடைந்ததில் இருந்து இடுப்பு வலியால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவரும் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். 

இதனிடையே, ஸ்மித் மற்றும் ஸ்டார்க் இருவரும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு முன் அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது   

இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா தொடருக்கான T20i அணியில் ஸ்மித்துக்கு பதிலாக ஆஷ்டன் டர்னர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேநேரம், ஒருநாள் அணியில் ஸ்மித் மற்றும் ஸ்டார்க் ஆகிய இருவருக்கும் பதிலாக மார்னஸ் லபுசேன் மற்றும் ஸ்பென்சர் ஜொன்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டின் போது களத்தடுப்பு செய்யும் போது இடது மணிக்கட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் பட் கம்மின்ஸுக்கு தென்னாபிரிக்காவுக்கு எதிரான T20i தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவருக்குப் பதிலாக சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் தலைவராக நியமிக்கப்பட்டு இருந்தார் 

இந்த நிலையில், பட் கம்மின்ஸ் இந்த தொடரின் இறுதியில் தான் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. இதனால் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலியா அணிக்கும் மிட்செல் மார்ஷ்ஷை தலைவராக நியமிக்க அந்நாட்டு தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர் 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<