IPL போட்டிகளில் சிறந்த பந்துவீச்சினைப் பதிவு செய்த வனிந்து

1177

இன்று (08) நடைபெற்று முடிந்திருக்கும் இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் 54ஆவது போட்டியில் வனிந்து ஹஸரங்கவின் அபார பந்துவீச்சோடு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியினை 67 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது.

இங்கிலாந்தில் அசத்தும் இளம் துடுப்பாட்ட வீரர்கள்

மேலும் இந்த வெற்றி றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு தொடரில் 7ஆவது வெற்றியாக அமைந்திருப்பதுடன், றோயல் செலஞ்சர்ஸ் அணியும் இந்த வெற்றியுடன் தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திற்கும் முன்னேறியிருக்கின்றது.

இரு அணிகளும் மோதிய போட்டி மும்பை வங்கடே மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற றோயல் செலஞ்சர்ஸ் அணி, முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்ததோடு 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களை எடுத்தது.

றோயல் செலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் அணித்தலைவர் டூ பிளேசிஸ் 50 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மறுமுனையில், ரஜாட் பட்டிதார் 38 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்களை எடுக்க, இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. சன்ரைஸர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் ஜகதீஷ சுஜித் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 193 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய சன்ரைஸர்ஸ் அணி ஆரம்பத்தில் இருந்து தடுமாற்றம் காட்டியதோடு, வனிந்து ஹஸரங்கவின் பந்துவீச்சினால் சன்ரைஸர்ஸ் அணி மிகவும் நெருக்கடியான நிலைக்குச் சென்றிருந்தது.

சமரியின் அதிரடி வீண்; பேல்கோன்ஸ் அணிக்கு முதல் தோல்வி

இறுதியில் 19.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி வெறும் 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் துடுப்பாட்டத்தோடு ராகுல் திரிபாதி 37 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களைப் பெற்று போராட்டம் காட்டியிருந்தார்.

மறுமுனையில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியினை நெருக்கடிக்கு உள்ளாக்கிய வனிந்து ஹஸரங்க வெறும் 18 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்ததோடு, IPL போட்டிகளில் தன்னுடைய சிறந்த பந்துவீச்சு பிரதியினையும் பதிவு செய்திருந்தார். வனிந்து ஹஸரங்கவோடு ஜோஸ் ஹேசல்வூடும் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இன்றைய போட்டியில் கைப்பற்றிய 5 விக்கெட்டுக்களோடு மொத்தமாக 21 விக்கெட்டுக்களை 2022ஆம் ஆண்டுக்கான IPL தொடரில் கைப்பற்றியிருக்கும் வனிந்து ஹஸரங்க, IPL தொடர் ஒன்றின் குறிப்பிட்ட பருவத்தில் (Season) ஒன்றில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வெளிநாட்டு பந்துவீச்சாளராகவும் சாதனை படைத்திருக்கின்றார்.

இதேநேரம் வனிந்து ஹஸரங்க IPL பருவகாலம் ஒன்றில் அதிக விக்கெட்டுக்களை (15) கைப்பற்றிய இலங்கைப் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் சாதனையினை முறியடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் வனிந்து ஹஸரங்க தான் கைப்பற்றிய 5 விக்கெட்டுக்களுக்காக எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<