தர்ஸ்டன் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி; ஏனைய போட்டிகளிலும் மழை குறுக்கீடு

180
Singer U19 Schools Cricket

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் ஜனாதிபதி கல்லூரியுடனான போட்டியில், தர்ஸ்டன் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக் கொண்டது.

இதேவேளை தர்மாசோக கல்லூரி மற்றும் ராஹுல கல்லூரி அணிகளுக்கிடையிலான போட்டி மழையின் காரணமாக சமநிலையில் நிறைவடைந்தது. இன்று ஆரம்பமான ஏனைய போட்டிகளிலும் மழை குறுக்கிட்டதன் காரணமாக குறைந்தளவு ஓவர்களே வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிக் கல்லூரி எதிரி தர்ஸ்டன் கல்லூரி

‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரின் குழு ‘D’ இற்கான போட்டியொன்றில் ஜனாதிபதிக் கல்லூரியை எதிர்த்து தர்ஸ்டன் கல்லூரி போட்டியிட்டது. முதல் நாள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 66 ஓட்டங்களை பெற்றிருந்த தர்ஸ்டன் கல்லூரி, முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக மேலும் 54 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

அபாரமாக துடுப்பெடுத்தாடிய சரண நாணயக்கார 82 ஓட்டங்கள் குவிக்க, தர்ஸ்டன் கல்லூரி 8 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. ஜனாதிபதி கல்லூரி சார்பில் கவிந்த பீரிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய ஜனாதிபதி கல்லூரி 5 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. துடுப்பாட்டத்தில் சச்சித லியனகே அதிகபட்சமாக 41 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

முன்னர், முதலில் துடுப்பெடுத்தாடிய ஜனாதிபதிக் கல்லூரி 45.1 ஓவர்களில் 119 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பாக ஹஷான் பிரியதர்ஷன அதிகபட்சமாக 34 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் சரண நாணயக்கார, சந்தரு டயஸ் மற்றும் துஷான் மதுஷங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 119 (45.1) – ஹஷான் பிரியதர்ஷன 34, சரண நாணயக்கார 2/17, சந்தரு டயஸ் 2/20, துஷான் மதுஷங்க 2/33

தர்ஸ்டன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 181/8d (45.1) – சரண நாணயக்கார 82, கவிந்த பீரிஸ் 5/45, றிபாஸ் மௌரூஸ் 2/39

ஜனாதிபதி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 105/5 (31.2) – சச்சித லியனகே 41, சந்தரு டயஸ் 2/41

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. தர்ஸ்டன் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.


தர்மாசோக கல்லூரி எதிர் ராஹுல கல்லூரி

இன்று நிறைவுற்ற மற்றுமொரு போட்டியில் தர்மாசோக கல்லூரி மற்றும் ராஹுல கல்லூரி அணிகள் மோதிக் கொண்டன. எனினும், அடை மழை காரணமாக இன்றைய தினம் ஒரு ஓவரேனும் வீச இயலாத நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

நேற்றைய தினம் நாணய சுழற்சியில் வென்ற தர்மாசோக கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக சோபிக்காத போதிலும், தனி ஒருவராக அபாரமான ஆட்டத்தை வெளிக்காட்டிய கவீஷ் குமார 107 ஓட்டங்களைக் குவித்தார். இதன்படி தர்மாசோக கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. சிறப்பாக பந்து வீசிய பசன் சமரதுங்க 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து களமிறங்கிய ராஹுல கல்லூரி நேற்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 4 விக்கெட்டுகளை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. லக்கிந்து சமோத் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களைப் பெற்று களத்திலிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

தர்மாசோக கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 215 (62.3) – கவீஷ் குமார 107, பசன் சமரதுங்க 5/52

ராஹுல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 83/4 (39) – லக்கிந்து சமோத் 34*

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது.


டி மெசனொட் கல்லூரி எதிர் புனித ஜோசப் கல்லூரி

இன்று ஆரம்பமான குழு ‘D’ இற்கான போட்டியொன்றில் டி மெசனொட் கல்லூரியை எதிர்த்து புனித ஜோசப் கல்லூரி போட்டியிட்டது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித ஜோசப் கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி களமிறங்கிய டி மெசனொட் கல்லூரி 47.3 ஓவர்களில் 155 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் நதுன் டில்ஷான் 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன், பந்துவீச்சில் ஹரீன் குரே 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரி 4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 5 ஓட்டங்களை பெற்றிருந்தவேளையில் மழை குறுக்கிட்டதனால், போட்டியின் முதலாவது நாள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட்து.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

டி மெசனொட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 155 (47.3) – நதுன் டில்ஷான் 44, ஹரீன் குரே 5/55, நிபுன் சுமனசிங்க 3/20

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 5/1 (4)


தர்மபால கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி

இத் தொடரின் குழு ‘A’ இற்கான போட்டியொன்றில் தர்மபால கல்லூரியும் புனித பேதுரு கல்லூரியும் மோதிக் கொண்டன. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித பேதுரு கல்லூரி களத்தடுப்பினை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய தர்மபால கல்லூரி 7 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. அவிஷ்க ஹசரிந்த 31 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன், புனித பேதுரு கல்லூரி சார்பாக சதுர ஒபேசேகர 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

தர்மபால கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 116/7 (53) – அவிஷ்க ஹசரிந்த 31, சதுர ஒபேசேகர 3/27, மொஹமட் அமீன் 2/30


திரித்துவக் கல்லூரி எதிர் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி

குழு ‘A’ இற்கான மற்றுமொரு போட்டியில் திரித்துவக் கல்லூரியும் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரியும் மோதிக் கொண்டன.  போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித அந்தோனியார் கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி களமிறங்கிய திரித்துவக் கல்லூரி 8 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களைக் குவித்திருந்த வேளையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ட்ரெவர் பெர்சிவேல் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களைப் பெற்று களத்திலிருந்தார். அதேவேளை புனித அந்தோனியார் கல்லூரி சார்பாக கவிந்து ஹெட்டியாரச்சி 4 விக்கெட்டுகளைப் பெற்றுக் கொடுத்தார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

திரித்துவக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 232/8 (63) – ட்ரெவர் பெர்சிவேல் 44*, ஹசிந்த ஜயசூரிய 37, கவிந்து ஹெட்டியாரச்சி 4/58


பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி

இன்று இடம்பெற்ற குழு ‘A’ இற்கான போட்டியொன்றில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மற்றும் புனித பெனடிக்ட் கல்லூரி அணிகள் மோதிக் கொண்டன. போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி 5 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் போட்டி மழையினால் தடைப்பட்டது.

அற்புதமாக துடுப்பெடுத்தாடிய சனோஜ் தர்ஷிக மற்றும் திலான் இமேஷ் முறையே 104 மற்றும் 76 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காது களத்திலிருந்தனர்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 232/5 (60) – சனோஜ் தர்ஷிக 104*, திலான் இமேஷ் 76*