அனைத்து கிரிக்கெட் இரசிகர்களாலும் எதிர்பார்க்கப்பட்டிருக்கும், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் காலியில் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.  

தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடனான சுற்றுப் பயணத்தில் இருக்கும் இந்திய அணி அத்தொடரினை முடித்துக்கொண்ட பின்னர், விராட் கோலி தலைமையில் இலங்கை அணியுடனான தொடரில் பங்கேற்க இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும்.

கிரிக்கெட்டிற்கு முன்னறே நட்பு கொண்டிருந்த திக்வெல்ல மற்றும் தனுஷ்க

இந்த சுற்றுப் பயணத்தின் மூலம் இந்தியா 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு T-20 போட்டி ஆகியவற்றில் மோதும். இதில், முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகும்.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஓகஸ்ட் மாத நடுப்பகுதி வரை நடைபெறவுள்ளன. இதனை அடுத்து, இந்திய அணி அதே மாதத்தில் 20 ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோதும்.  

ஒரு நாள் போட்டிகள் யாவும் செப்டம்பர் மாதத்தின் ஆரம்பம் வரை பகலிரவுப் போட்டிகளாக நடைபெறவுள்ளன. தொடர்ந்து, செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள T-20 போட்டியுடன் இந்தியா, இலங்கை அணியுடனான சுற்றுப் பயணத்தினை முடித்துக்கொள்கின்றது.

இலங்கை அணியினை அவர்களது சொந்த மண்ணில் வைத்து இறுதியாக  2015 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சந்தித்த இந்தியா அதனை 2-1 என கைப்பற்றியிருந்தது.

அதேபோன்று, தற்போது ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் தொடரில் பங்கேற்று வரும் இலங்கை அணியினை 2014ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றிருந்த ஒரு நாள் தொடரில் எதிர்கொண்ட இந்திய அணி  அத்தொடரினையும் 5-0 என கைப்பற்றி இலங்கை அணியை வைட் வொஷ் செய்திருந்தது.

எனினும், அண்மையில் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் குழு நிலை ஆட்டமொன்றின் போது மிகவும் சவாலான இலக்கினை விரட்டிய இலங்கை வீரர்கள் இந்திய அணியினை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தி சாதனை வெற்றி ஒன்றினை பதிவு செய்திருந்தனர்.

T-20 போட்டிகளை எடுத்து நோக்கும் போது, இரு தரப்பினரும் இறுதியாக இந்தியாவில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்த 3 போட்டிகள் கொண்ட T-20 தொடரில் சந்திருந்தனர். அப்போது, தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணி அத்தொடரினையும் 2-1 என இந்தியாவிடம் பறிகொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

இலங்கை வீரர்கள் அனைவருக்கும் அபராதம்

இந்திய அணியுடன் நடைபெறவுள்ள இத்தொடர் மூலம், காயத்திலிருக்கும் அதிரடித் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா கிரிக்கெட் போட்டிகளில் மறுபிரவேசத்தினை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக இந்தியாவுடனான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் விளையாடியிருந்த குசல், 47 ஓட்டங்களினைப் பெற்று திறமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த போது கால் உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.

இத்தொடரின் மூன்று வகையான போட்டிகளுக்கும் இலங்கை அணியின் தலைவராக அஞ்செலோ மெதிவ்ஸ் செயற்படுவார் என நம்பப்படுகின்றது.

போட்டித் தொடர் அட்டவணை

டெஸ்ட் போட்டிகள்

முதலாவது டெஸ்ட் போட்டி – ஜூலை 26 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை – காலி சர்வதேச மைதானம்

இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஓகஸ்ட் 03 ஆம் திகதி தொடக்கம் 07 ஆம் திகதி வரை – SSC மைதானம், கொழும்பு

மூன்றாவது டெஸ்ட் போட்டி – ஓகஸ்ட் 12 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை – பல்லேகல சர்வதேச மைதானம், கண்டி

ஒரு நாள் போட்டிகள்

முதலாவது ஒரு நாள் போட்டி – ஒகஸ்ட் 20 ஆம் திகதி – ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானம், தம்புள்ளை

இரண்டாவது ஒரு நாள் போட்டி – ஒகஸ்ட் 24 ஆம் திகதி – பல்லேகல சர்வதேச மைதானம், கண்டி

மூன்றாவது ஒரு நாள் போட்டி – ஒகஸ்ட் 27 ஆம் திகதி – பல்லேகல சர்வதேச மைதானம், கண்டி

நான்காவது ஒரு நாள் போட்டி – ஒகஸ்ட் 31 ஆம் திகதி – ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானம், கொழும்பு

ஐந்தாவது ஒரு நாள் போட்டி – செப்டம்பர் 3 ஆம் திகதி – ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானம், கொழும்பு

T-20 போட்டி

ஒரேயொரு T-20 போட்டி – செப்டம்பர் 6 ஆம் திகதி – ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானம், கொழும்பு