இலங்கை வீரர்கள் அனைவருக்கும் அபராதம்

4971

ஹம்பந்தோட்டையில் நடைபெற்று முடிந்திருக்கும் ஜிம்பாப்வே அணியுடனான மூன்றாவது ஒரு நாள் போட்டியில், மந்த கதியில் ஓவர்களை வீசி போட்டியினை தாமதப்படுத்திய குற்றச்சாட்டினால், இலங்கை அணி வீரர்கள் அனைவரும் தமது போட்டிச் சம்பளத்தில் ஒரு தொகையை தண்டப்பணமாக செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

போட்டியின் நடுவரான கிரிஸ் ப்ரோட் அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான தரப்பு, அனைத்து ஓவர்களும் வீச கொடுக்கப்பட்ட நேர அவகாசத்திற்குள் ஒரு ஓவர் குறைவாக வீசியிருந்தாக கூறி இலங்கை மீதான  குற்றச்சாட்டினை நிரூபித்திருந்தார்.  

ஹமில்டன் மசகட்சாவின் அதிரடிக்கு பதில் கொடுத்த திக்வெல்ல மற்றும் குணதிலக்க

இதன் காரணமாக அஞ்சலோ மெதிவ்சிற்கு போட்டிச் சம்பளத்தில் 20% ஐ அபராதமாகவும் இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் அனைவரும் 10% ஐ அபராதமாகவும் செலுத்த வேண்டி உள்ளது. அதோடு, மெதிவ்ஸ் தலைமையிலான இலங்கை அணி எதிர்வரும் 12 மாதங்களிற்குள் இவ்வாறான குற்றமொன்றினை மீண்டும் செய்யும் பட்சத்தில், அது இரண்டாம் குற்றமாக கருதப்பட்டு மெதிவ்ஸ் போட்டித் தடையினை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.  

இதற்கு முன்னதாக, இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டிருந்த உபுல் தரங்க சம்பியன் கிண்ணத்தில் தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் மந்த கதியில் ஓவர்கள் வீசி இரண்டு போட்டிகளில் விளையாட தடையினைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ நாங்கள் எமக்கு ஓவர்கள் வீச அளிக்கப்பட்டிருந்த நேரத்திற்குள் ஒரு ஓவர் குறைவாக வீசியிருந்தோம். அந்நேரத்தில், போட்டி நடுவரும் அபாரதம் பற்றி எமக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இது பற்றி நாம் விரிவாக கலந்துரையாடியுள்ளோம். இனி வரும் போட்டிகளில் இவ்வாறானதொரு தவறு இடம்பெறாது என நம்புகின்றேன். “ என மெதிவ்ஸ் போட்டியின் பின்னர் குறிப்பிட்டிருந்தார்.