பொட்ஸ்வானா சர்வதேச பெட்மிண்டன் சம்பியன்ஷிப்பில் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்று ஹசாரா விஜேரத்ன மற்றும் ஹசினி அம்பலாங்கொட ஆகிய இருவரும் சாதனை படைத்தனர்.
உலக பெட்மிண்டன் சம்மேளனத்தினால் நடாத்தப்படுகின்ற போட்டியொன்றில் இலங்கை வீரர்கள் இரட்டையர் பெட்மிண்டன் பட்டத்தை வென்றது இதுவே முதல் முறையாகும்.
மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக பெட்மிண்டன் கூட்டமைப்பு தரவரிசையில் 72ஆவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்காவின் ஏமி அக்கர்மன் மற்றும் டெய்ட்ரே லோரன்ஸ் ஜோடியை 21-18 மற்றும் 22-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஹசாரா மற்றும் ஹாசினி ஜோடி இந்த வரலாற்று வெற்றியைப் பெற்றனர்.
- உலகக் கிண்ண கெரம் போட்டியில் ஜொலித்த சஹீட், அனாஸ்
- இலங்கை கெரம் அணியின் அனுசரணையாளராக இலங்கை கிரிக்கெட் சபை
சர்வதேச பெட்மிண்டன் போட்டியில் இலங்கை வீராங்கனைகள் இருவர் பெற்ற அதிகூடிய வெற்றியாக இந்த வெற்றி வரலாற்றில் இடம்பிடித்தது.
சமீபத்தில் சாம்பியாவில் நடைபெற்ற சர்வதேச பெட்மிண்டன் சம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதன் மூலம் ஹசாரா விஜேரத்ன மற்றும் ஹாசினி அம்பலாங்கொடகே ஆகியோர் இந்தப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டனர்.
இதனிடையே, பொட்ஸ்வானா சர்வதேச பெட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடருக்குப் பிறகு, இம்மாதம் 28ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதி வரை நடைபெறும் தென்னாப்பிரிக்க சர்வதேச பெட்மிண்டன் சம்பியன்ஷிப் போட்டியில் ஹசாராவும், ஹாசினியும் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<