வனிந்துவின் சாதனைப் பந்துவீச்சோடு இலங்கை மீண்டும் அசத்தல் வெற்றி

305

ICC உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி தமது இரண்டாவது லீக் போட்டியில் ஓமானை 10 விக்கெட்டுக்களால் வீழ்த்தி அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது. 

ஆசியக் கிண்ணம்; பாகிஸ்தான் மீண்டும் இலங்கைக்கு எதிர்ப்பு

மேலும் இலங்கை இந்த வெற்றியுடன் ICC உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் குழு B இல் தொடர்ச்சியாக இரண்டு அசத்தல் வெற்றிகளுடன் முதல் இடத்தினையும் பெற்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை ஓமான் வீரர்களுக்கு வழங்கியிருந்தார்.

இப்போட்டிக்கான இலங்கை குழாம் அனுபவ வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீர உபாதையில் இருந்து மீளாததன் காரணமாக மாற்றங்களின்றி களமிறங்க, ஓமான் அணியும் இதற்கு முன்னர் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தமது வெற்றி ஓட்டத்தை தொடரும் பொருட்டு மாற்றங்களின்றி களமிறங்கியிருந்தது. 

இலங்கை குழாம்

பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, லஹிரு குமார

ஓமான் குழாம்

கஷியாப் ப்ராஜபாதி, ஜடின்தர் சிங், ஆகில் இல்யாஸ், சீசான் மக்சூத் (தலைவர்), மொஹமட் நதீம், அயான் கான், சொஹைப் கான், நஷீம் குஷி, ஜேய் ஓடேட்ரா, பய்யாஸ் பட், பிலால் கான்

இலங்கைக்கு சவால் கொடுக்குமா ஓமான்?

பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஓமான் அணி லஹிரு குமாரவின் அபார வேகத்தினால் தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. அணியின் ஆரம்பவீரராக களம் வந்த கஷியாப் ப்ராஜபாதி ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அணித்தலைவர் சீசான் மக்சூத் (1) மற்றும் முன்வரிசை வீரர் ஆகிப் இல்யாஸ் (6) ஆகியோரும் லஹிரு குமாரவின் பந்துவீச்சில் தத்தமது விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தனர்.

இதனால் தமது நான்காவது விக்கெட்டின் பின்னர் சற்று நிதானமாகவே துடுப்பாடிய ஓமான் கிரிக்கெட் அணி ஐந்தாம் விக்கெட்டுக்காக ஜடின்தர் சிங் மற்றும் அயான் கான் ஆகியோரின் அரைச்சத (52) இணைப்பாட்டத்தோடு சற்று நிதானமாக போட்டியில் முன்னேறத் தொடங்கியது. எனினும் இந்த இணைப்பாட்டத்தினை வனிந்து ஹஸரங்க ஜடின்தர் சிங்கின் விக்கெட்டினை கைப்பற்றி நிறைவுக்கு கொண்டு வந்தார். ஜடின்தர் சிங் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஓய்வறை சென்றார்.

ஜடின்தர் சிங்கின் ஆட்டமிழப்பினை தொடர்ந்து அவர் ஆட்டமிழந்த போட்டியின் 21ஆவது ஓவரில் மேலும் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி வனிந்து ஹஸரங்க ஓமானுக்கு மேலும் நெருக்கடி வழங்கினார். இதனால் மேலும் சரிவுக்கு உள்ளான ஓமான் குறித்த சரிவில் இருந்து மீள முடியாமல் 30.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களையே போட்டியின் முதல் இன்னிங்ஸில் எடுத்தது. அத்துடன் இது ஓமான் அணி ஒருநாள் போட்டிகளில் பெற்ற குறைவான ஓட்ட எண்ணிக்கையாகவும் மாறியது.

ஓமான் அணியின் துடுப்பாட்டத்தில் அயான் கான் 60 பந்துகளுக்கு 41 ஓட்டங்கள் எடுத்து தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாற இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க வெறும் 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார். அத்துடன் வனிந்து ஹஸரங்க தொடர்ச்சியாக இரு முறை ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுக்களை சாய்த்த சந்தர்ப்பமாக இது மாறியது. அத்துடன் வனிந்து ஹஸரங்க இதன் மூலம் மணிக்கட்டு சுழல்வீரராக ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து 5 விக்கெட்டுக்களை சாய்த்த முதல் வீரராகவும் சாதனை செய்திருந்தார்.

தென்னாபிரிக்கா A அணிக்கெதிரான தொடரை வென்றது இலங்கை

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 99 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி போட்டியின் வெற்றி இலக்கை வெறும் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இப்போட்டியில் அரைச்சதம் விளாசிய திமுத் கருணாரட்ன ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய நான்காவது தொடர் அரைச்சதத்துடன் 51 பந்துகளில் 8 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களை எடுத்தார். மறுமுனையில் பெதும் நிஸ்ஸங்க 37 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகன் விருது இலங்கையின் சுழல்வீரர் வனிந்து ஹஸரங்கவிற்கு வழங்கப்பட்டிருந்தது. இனி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் இலங்கை அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை (25) அயர்லாந்து வீரர்களை எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<