ஆசியக் கிண்ணம்; பாகிஸ்தான் மீண்டும் இலங்கைக்கு எதிர்ப்பு

144
PCB chairman Zaka Ashraf against 2023 Asia Cup’s hybrid model

ஆசியக் கிண்ணத் தொடர் கலப்பு வடிவில் (Hybrid Model) நடைபெறுவது பாகிஸ்தானுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநீதி எனவும், ஆசியக் கிண்ணத்தை இலங்கையில் நடத்துவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பினை தெரிவிப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அடுத்த தலைவராக நியமிக்கப்படவுள்ள சகா அஷ்ரப் (Zaka Ashraf) தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இம்முறை ஆசியக் கிண்ணத்தை கலப்பு வடிவில் நடத்துவதற்கான அறிவிப்பை ஆசிய கிரிக்கெட் பேரவை ஏற்கனவே அறிவித்துவிட்டதால் அதில் மீண்டும் தலையிட விரும்பவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானில் 4 போட்டிகளும், இலங்கையில் 9 போட்டிகளும் நடக்கும் என்று ஆசிய கிரிக்கெட் பேரவை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் உட்பட அனைத்து நாடுகளும் ஒப்புதல் கூறியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 8 மாதத்திற்கும் மேலாக இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணம் எங்கு நடக்கும் என்ற இழுபறி நிலை இருந்து வந்தது. ஆசியக் கிண்ணத்தில் பங்கேற்க இந்தியா பாகிஸ்தானிற்கு வரவில்லை என்றால், ஒருநாள் உலகக் கிண்ணத்தில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வராது என்ற விடயத்தில் இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வந்தன.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்மொழிந்த கலப்பு வடிவில் இந்த ஆண்டு ஆசியக் கிண்ணம் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் பேரவை கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. எனவே, ஒரு வழியாக ஆசியக் கிண்ணப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது என ரசிகர்கள் கருதினர்.

இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அடுத்த தலைவராக நியமிக்கப்படவுள்ள சகா அஷ்ரப், இந்த ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடர் கலப்பு வடிவில் நடைபெறுவதற்கு தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

”என்னை பொறுத்தவரை ஆசியக் கிண்ணத்தை கலப்பு வடிவில் நடத்துவதால் பாகிஸ்தானுக்கு எந்தப் பயனும் இல்லை. அதனால் கலப்பு வடிவில் ஆசியக் கிண்ணம் நடத்துவதை நான் விரும்பவில்லை. தொடரை நடத்தும் நாடாக இருக்கும் பாகிஸ்தான், இது குறித்து ஆசிய கிரிக்கெட் பேரவையுடன் இன்னும் ஆலோசனை நடத்தி இருக்கலாம். இலங்கை அதிக போட்டிகளை வழங்கிவிட்டு, நான்கு போட்டிகளை மட்டும் பாகிஸ்தானுக்கு கொடுப்பது நமது நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல.

ஆனால் ஆசியக் கிண்ணத் தொடர் குறித்து அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டுவிட்டன. அதனால் அதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என நான் விரும்பவில்லை. ஏற்கனவே நிர்வாகத்தில் இருந்தவர்கள் எடுத்த முடிவுகளை மதிக்கிறேன். ஆனால் எதிர்காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எது நல்லதோ, அந்த முடிவுகளை மட்டுமே நாங்கள் எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக மிக விரைவில் பொறுப்பேற்கவுள்ள சகா அஷ்ரப் தெரிவித்துள்ள கருத்து மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் இடையே முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கும் இதனால் பாதிப்பு ஏற்படலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

70 வயதான சகா அஷ்ரப், முன்னதாக 2014ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<