தென்னாபிரிக்கா A அணிக்கெதிரான தொடரை வென்றது இலங்கை

South Africa A tour of Sri Lanka 2023

159

தென்னாபிரிக்க A அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது நான்கு நாள் போட்டியை சமப்படுத்தியதன் மூலம் இலங்கை A அணி தொடரை 1-0 என வெற்றிக்கொண்டது.

முதல் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க A அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியின் இறுதி நாளான இன்று (22) போட்டி சமனிலையில் முடிவடைந்த நிலையில், தொடர் இலங்கை அணி வசமானது.

மினோத், பசிந்துவின் அரைச்சதங்களுடன் இலங்கைக்கு முன்னிலை

ஆட்டத்தின் நான்காவதும் இறுதியுமான நாளில் 230 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய இலங்கை A அணிக்காக மினோத் பானுக மற்றும் பசிந்து சூரியபண்டார ஆகியோர் அபாரமான துடுப்பாட்டங்களை வெளிப்படுத்த தொடங்கினர்.

இவர்கள் இருவரும் வேகமாக ஓட்டங்களை குவித்து இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கினர். இதன் பலனாக தங்களுடைய அரைச்சதங்களை சதங்களாகவும் இவர்கள் மாற்றினர்.

தொடர்ந்து மினோத் பானுக 130 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்த நிலையில் இலங்கை அணி ஆட்டத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்தது. அதன்படி இலங்கை அணி 327 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்தியதுடன், பசிந்து சூரியபண்டார ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களை பெற்றார்.

எனவே முதல் இன்னிங்ஸில் 4 ஓட்டங்களால் பின்னடைவை சந்தித்திருந்த இலங்கை அணியானது 324 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயிக்க, தென்னாபிரிக்க அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

தென்னாபிரிக்க A அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், முதல் விக்கெட்டுக்காக அரைச்சத இணைப்பாட்டம் பெறப்பட்டது. இரண்டாவது விக்கெட் தொடர்ந்து வீழ்த்தப்பட்டிருந்த போதும், நேர்த்தியான ஆட்டத்தை தென்னாபிரிக்காவின் துடுப்பாட்ட வீரர்கள் வெளிப்படுத்தியதன் மூலம் அந்த அணி 4 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்தது.

தென்னாபிரிக்க அணிக்காக அதிகபட்சமாக மெதிவ் பிரீட்ஷ்க் 38 ஓட்டங்களையும், டொனி டி ஷோர்ஷி 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள ஆட்டநேரம் நிறுத்தப்படும் போது தென்னாபிரிக்க A அணி 4 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரவீன் ஜயவிக்ரம 2 விக்கெட்டுகளையும், ரமேஷ் மெண்டிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களையும், தென்னாபிரிக்க A அணி 294 ஓட்டங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<