கத்துக்குட்டிகளாக சென்று வித்தை காண்பித்த இலங்கை இளம் அணி 

0
SRI LANKA CRICKET

”ஒருநாள் தொடரை அடுத்து இலங்கைக்கு எதிரான T20 தொடரிலும் பாகிஸ்தான் இலகு வெற்றி.” இது பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20i தொடரின் பின்னர் நாளிதழ்கள் வெளியிட்டிருக்க வேண்டும் என பலரும் எதிர்பார்த்திருந்த செய்தி. ஆனால், நடந்தது வேறு. 

எந்தவொரு (சர்வதேச) T20 போட்டிகளிலும் ஆடாத வீரர்களை உள்ளடக்கிய இளம் இலங்கை கிரிக்கெட் அணி, உலகில் முதல்நிலை T20 அணியான பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் வைத்து 3-0 என வைட்வொஷ் செய்தது.

பாகிஸ்தானை வென்ற இலங்கை அணிக்கு 145,000 டொலர்கள் பணப்பரிசு

பாகிஸ்தான் அணியுடனான T20i கிரிக்கெட் தொடரை வெல்லக்….

இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் சிலர் பாதுகாப்பு காரணங்களை காட்டி பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் அணியில் இணைய மறுத்தனர். இதனால், இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணிக்கு பாகிஸ்தானில் தோல்வியை தவிர வேறு எதுவும் எஞ்சாது என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக இருந்தது. (இலங்கை சிரேஷ்ட வீரர்கள் பலரை கொண்டிருக்கும் போதே அண்மைக்காலமாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் சிறந்த பதிவை காட்ட தவறியிருந்தது. இதில் அனுபவமற்ற வீரர்கள் என்றால்? வெற்றியினை நினைத்தும் பார்க்கத் தேவையில்லை தானே?) அவர்கள் நினைத்ததற்கு அமைவாக லஹிரு திரிமான்ன தலைமையிலான இலங்கை அணி தமது பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் முதலாவதாக இடம்பெற்ற ஒருநாள் தொடரினை ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட 2-0 என இழந்தது. 

இனி T20 போட்டிகள் 

மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் ஆரம்பமானது. போட்டிகள் அனைத்தும் லாஹூரில். இலங்கை அணி 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்ற லாஹூர் (கடாபி) மைதானம். அப்போது, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கும், பாகிஸ்தானை T20 தொடரில் எதிர்கொள்ள காத்திருந்த இளம் இலங்கை அணிக்கும் ஒரே ஒற்றுமை. இரண்டுமே கத்துக்குட்டிகள்.   

பாகிஸ்தான் தொடரில், இலங்கை T20 அணியின் தலைவர் தசுன் ஷானக்க. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் சிலவற்றில் தலைவராக செயற்பட்டதைவிட வேறு எந்த அனுபவமும் ஷானக்கவிற்கு கிடையாது. இலங்கை அணி வீரர்களான ஒசத பெர்ணாந்து, பானுக்க ராஜபக்ஷ, மினோத் பானுக்க போன்றோர் T20 சர்வதேச போட்டிகள் எதிலும் விளையாடிய அனுபவத்தையே கொண்டிருக்கவில்லை. மொத்தமாக கூறினால், பாகிஸ்தானை எதிர்கொள்ளச் சென்ற இலங்கை அணி, தானாக பொறியில் மாட்டிக்கொள்ளச் சென்ற எலி.   

பாகிஸ்தானை நோக்கும் போது, அவர்களின் தரமே வேறு. தொடர் வெற்றிகளுடன் T20யில் பாகிஸ்தானை உலகின் முதல் நிலை அணியாக மாற்றிய ஆளுமை கொண்ட அணித்தலைவர் சர்பராஸ் அஹமட். சற்று கவனம் தளர்ந்தாலும், கால் விரல்களை நொறுக்கும் அளவுக்கு மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் யோக்கர் பந்துகளை வீசும் ஆற்றல் கொண்ட வஹாப் ரியாஸ் மற்றும் மொஹமட் ஹஸ்னைன் ஜோடி. மணிக்கட்டு சுழல் மூலம் மாயாஜாலம் செய்யக்கூடிய சதாப் கான் மற்றும் 50 இற்கு கிட்டவான துடுப்பாட்ட சராசரி கொண்டிருக்கும் பாபர் அசாம் என தன்னை T20 அரசானாக காட்டுவதற்குரிய அனைத்து ஆற்றல்களையும் கொண்டிருந்தது பாகிஸ்தான். 

அதிகமான இளம் வீரர்களுடன் ஆஸி. செல்லும் இலங்கை T20i குழாம்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இம்மாதம் நடைபெறவுள்ள மூன்று….

இவ்வாறான நிலையில் T20 தொடரின் முதல் போட்டி ஆரம்பமாகின்றது. பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி தாம் தோல்வியடைந்த ஒருநாள் தொடரில் இருந்து சில பாடங்களை கற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் இனிமேல் தோல்வியடையக்கூடாது என்று ஒரு சபதம் எடுத்திருக்க வேண்டும். அந்தவகையில், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் T20 போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் அற்புதமாக அமைந்தது. 

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் சதம் பெற்ற தனுஷ்க குணத்திலக்க அதே ஆட்டத்தை T20 தொடரின் முதல் போட்டிக்கும் கொண்டு வந்தார். இதனால், இலங்கை அணிக்கு அட்டகாசமான ஒரு ஆரம்பம் கிடைக்கின்றது. தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பெளண்டரி எல்லைகளுக்கு அப்பால் பந்தினை அடிக்கும் குணத்திலக்கவுக்கு அவிஷ்கவும் கரம்கொடுக்க மிகச்சிறந்த தொடக்கத்தை இலங்கை அணி பெற்றுக் கொள்கின்றது.  

இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் முதல் T20 போட்டியில் சற்று மோசமான களத்தடுப்பினை காட்டியிருந்த போதிலும், இலங்கை அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றதற்கு முழுக்க காரணம் தனுஷ்க குணத்திலக்க மாத்திரமே. முதல் T20 போட்டியின் பின்னரான ஊடக சந்திப்பில் பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளரான மிஸ்பா உல் ஹக், குணத்திலக்க இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்கார செய்த விடயம் ஒன்றை தனக்கு நினைவூட்டுகின்றார் எனத் தெரிவித்திருந்தார்.

தனுஷ்க குணத்திலக்க சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர், இலங்கை வீரர்கள் விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்த போதிலும் ஓட்டங்கள் சேர்ப்பதிலும், இணைப்பாட்டங்கள் உருவாக்குதிலும் மிகவும் பொறுப்பாகவே நடந்து கொண்டனர். இதுதவிர தனது கன்னி சர்வதேச போட்டியாக மாற்றிய பானுக்க ராஜபக்ஷ தன்மீது தேர்வாளர்கள் நம்பிக்கை வைக்கும்படி, ஒரு ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

பின்னர், இலங்கை அணி T20 தொடரின் முதல்  போட்டியில் சவாலான ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

முதல் நிலை T20 அணியை வீழ்த்தி சாதித்த இளம் இலங்கை அணி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று….

பாகிஸ்தானின் பந்துவீச்சினை பொறுத்தவரையில், இலங்கை அணிக்கு மொஹமட் ஹஸ்னைன் மட்டுமே சற்று நெருக்கடியாக இருந்தார். இலங்கை அணி அச்சப்பட்டிருக்க வேண்டிய பந்துவீச்சாளர்களான சதாப் கான், வஹாப் ரியாஸ் போன்றவர்களினால் எந்த சிக்கலும் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. சதாப் கான் 2017ஆம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் இலங்கையுடன் மோதிய பாகிஸ்தான் குழாத்தில் இடம்பெற்றதோடு, இலங்கை அணி குறித்த தொடரில் வைட்வொஷ் தோல்விபெற, தனது சுழல் மூலம் பிரதான காரணமாகவும் இருந்திருந்தார். ஆனால், இலங்கை வீரர்களுக்கோ சதாப் கான் பற்றி எந்தக்கவலையும் இல்லை.  

T20 போட்டிகளில் முதல்நிலை அணியொன்றாக கருதப்படும் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிபெற, துடுப்பாட்டத்தில் மாத்திரம் ஜொலித்தது போதாது. மீதமாக உள்ள பந்துவீச்சு, களத்தடுப்பு என இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயற்பட வேண்டும். எனவே, இலங்கை அணிக்கு அடுத்த இலக்கு தாம் பெற்ற சவாலான ஓட்டங்களுக்குள் பாகிஸ்தானை கட்டுப்படுத்தி எப்படி வெற்றி பெறுவது என்பதாகும். 

தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக பாபர் அசாமும், உமர் அக்மலும் களம் வந்தனர். இதில், பாபர் அசாம் அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்தின் உள்ளூர் T20 தொடரில் காட்டிய அதே சிறப்பான ஆட்டத்துடன் இலங்கை வீரர்களை எதிர்கொள்ள, உமர் அக்மலும் உள்ளூர் போட்டிகளில் ஜொலித்த அதே அனுபவத்துடன் சவால் தர தயாராகியிருந்தார். 

இவ்வாறான நிலையில் இலங்கை அணிக்கு இந்த இரண்டு வீரர்களினதும், இணைப்பாட்டத்தை தகர்ப்பதே பாரிய பொறுப்பாக இருக்கின்றது. இலங்கை அணி எதிர்பார்த்த அந்த சிறந்த ஆரம்பத்தை நுவான் பிரதீப் போட்டியின் இரண்டாவது ஓவரில் பெற்றுக்கொடுத்தார். ஒரு உறுதியான ஆரம்பத்தை காட்டிய பாபர் அசாம் வெறும் 13 ஓட்டங்களுடன் மைானத்தை விட்டு வெளியேற பாகிஸ்தான் அணியின் நம்பிக்கையும் குறைந்தது.  

இதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஒரு கட்டத்தில் 76 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் தடுமாற்றமான நிலையினை அடைந்தது. பின்னர், தன்னம்பிக்கை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினை சரியான தருணம் ஒன்றை வைத்து இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் துவம்சம் செய்தனர். இதன்போது, சரியான நேரத்தில் சரியான பந்துவீச்சாளர்கள் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக்க மூலம் உபயோகம் செய்யப்பட்டிருந்தனர். இதனால், பாகிஸ்தான் 101 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் படுதோல்வியடைந்தது. எனவே, இலங்கை அணியும் T20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுக்கொண்டது. 

ThePapare Tamil weekly sports roundup – Episode 98

லசித் மாலிங்க தலைமையில் அவுஸ்திரேலியா செல்லவுள்ள….

யானைக்கும் அடி சறுக்கும் என ஒரு முதுமொழி உண்டு. இந்த முதுமொழிக்கு அமைவாகவே இலங்கை அணி பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரின் முதல் போட்டியில் பெற்ற வெற்றி பார்க்கப்பட்டது. எனினும், அது தவறு என்பதை இலங்கை அணி தொடரின் இரண்டாவது போட்டி மூலம் நிரூபணம் செய்தது. இரண்டாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்து பாகிஸ்தான் T20 தொடரினை சமநிலை செய்யும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பு. 

இரண்டாவது T20 போட்டியில் இலங்கை, முதல்போட்டி போன்றே முதலில் துடுப்பாடியது. போட்டியில் இலங்கை அணி தடுமாற்றமான ஆரம்பத்தைக் காட்டியது. இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான தனுஷ்க குணத்திலக்க மற்றும் அவிஷ்க பெர்ணாந்து ஆகியோர் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெளியேறினர். இதனால், இலங்கை அணியினை தூக்கி நிறுத்தும் பொறுப்பு புதிய வீரர்களான பானுக்க ராஜபக்ஷ மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோருக்கு கிடைக்கின்றது. 

பானுக்க ராஜபக்ஷ ”இலங்கை அணியில் ஆட நான் 10 வருடங்கள் தவமிருந்தேன்” என கூறியிருக்கின்றார். அதற்கு அமைவாக, பாகிஸ்தான் அணியுடனான T20 தொடரின் தனக்கு கிடைத்த வாய்ப்பினையும் பானுக்க ராஜபக்ஷ உபயோகம் செய்திருந்தார். பானுக்க களம் வந்து ஆரம்பத்தில் பிடியெடுப்பு வாய்ப்பு ஒன்று நழுவிய நிலையில், அதனை தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பாக பயன்படுத்தி கிடைத்த திசைகளில் எல்லாம் சிக்ஸர் மழை பொழிந்ததோடு, தனது இரும்புக்கரங்கள் மூலம் இலங்கையின் தேர்வாளர்களுக்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்பதையும் காட்டினார். 

பாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக டி20 தொடரை வென்ற இலங்கை

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற….

அச்சமற்ற துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய பானுக்க ராஜபக்ஷ, தனது கன்னி அரைச்சதத்தோடு வெறும் 48 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பெற்றார். இதுதவிர, பானுக்க ராஜபக்ஷ பாகிஸ்தான் அணிக்கு எதிராக T20 போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள் பெற்ற இலங்கையராகவும் சாதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

பானுக்க ராஜபக்ஷ மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோரின் சிறந்த ஆட்டத்தோடு, இலங்கை கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 182 ஓட்டங்களை குவித்துக்கொண்டது. இந்த மொத்த ஓட்டங்களை பெற்ற இலங்கை அணிக்கு பானுக்க ராஜபக்ஷ மட்டுமில்லாது மத்திய வரிசை வீரர்களும் தமது பொறுப்புக்காக சிறந்த பங்களிப்பினை வழங்கியிருந்தனர். 

பின்னர், இலங்கை அணியின் வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணிக்கு இளம் சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹஸரங்க, மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்தார். இந்த நெருக்கடி காரணமாக மிகவும் அனுபவம் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 52 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இந்நிலையில், இமாத் வஸீம் தனது அதிரடியான துடுப்பாட்டம் மூலம் இலங்கை அணிக்கு அழுத்தம் தந்திருந்தார். எனினும், இந்நிலையில் பந்துவீச்சு மாற்றங்களையும், களத்தடுப்பு மாற்றங்களையும் மேற்கொண்ட இலங்கை அணி, இமாத் வஸீமின் விக்கெட்டினை கைப்பற்றியதோடு, பாகிஸ்தான் அணியினையும் வீழ்த்தி போட்டியில் வெற்றியினை சுவைத்தது.  

பாகிஸ்தானில் இலங்கை அணி செயற்பட்டவிதம் சிறப்பாக இருக்கின்றது – ருமேஷ் ரத்நாயக்க

உலகின் முதல் நிலை T20 அணியான பாகிஸ்தானுக்கு எதிராக….

இவ்வெற்றி மூலம் இலங்கை அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக T20 தொடர் ஒன்றை முதல்தடவையாக கைப்பற்றி புதிய சாதனை ஒன்றினையும் பதிவு செய்தது. சங்கக்கார, மஹேல ஜயவர்தன போன்ற அனுபவம் கொண்ட வீரர்கள் இருந்த போதிலும் இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு எதிராக T20 தொடர் ஒன்றை வெற்றி கொள்ளாத நிலையில் இலங்கையின் இரண்டாம் நிலை அணியின் இந்த தொடர் வெற்றி மிகப் பெரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.  

T20 தொடரினை கைப்பற்றிய போதிலும், இலங்கை அணிக்கு எதிரான தொடரின் கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி ஒன்றினை பெற்று ஆறுதல் வெற்றியுடன் தொடரினை நிறைவு செய்ய எத்தனித்திருந்தது. 

இதற்காக, பாகிஸ்தான் அணி தீட்டிய திட்டங்களும் வெற்றியளித்தன. T20 தொடரின் முதல் போட்டியிலும், இரண்டாவது போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடியாக இருந்த விடயம் இலங்கை அணி முதல் இன்னிங்ஸ்களில் பெற்ற மொத்த ஓட்டங்கள். எனவே, மூன்றாவது போட்டியில் சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி இலங்கை அணியினை 147 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்தியது. எனினும், ஒசத பெர்ணாந்து இப்போட்டியின் மூலம் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தார்.  

ஆஸி. தொடருக்கு இலங்கை வீரர்களைத் தெரிவு செய்வதில் தலையிடி

பாகிஸ்தானுக்கு எதிரான T20i தொடரில் பானுக ராஜபக்ஷ….

இவ்வாறாக இளம் வீரர்களுடன் இலங்கை அணி, பெற்றுக்கொண்ட T20 தொடர் வெற்றி இலங்கையின் சிரேஷ்ட வீரர்களுக்கு முன்னுதாரணமாக அமைவதுடன், அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள T20 உலகக் கிண்ணத்திற்கு தயாராக இலங்கை ஒரு அணியை உருவாக்குவதற்கான அடித்தளத்தினையும் இட்டிருக்கின்றது.  

இன்னும், பாகிஸ்தானை வென்ற இலங்கை அணியில் இளம் வீரர்கள் பலர் திறமையினை நிரூபித்திருக்கும் காரணத்தினால் சிரேஷ்ட வீரர்களுக்கும், இளம் வீரர்களுக்கும் இடையில் அணியில் போட்டித்தன்மை அதிகரித்திருக்கின்றது. இது இலங்கை அணி, எதிர்காலத்தில் சிறந்த போட்டி முடிவுகளை பெறவும் உதவும். 

 மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க