ஆஸி. தொடருக்கு இலங்கை வீரர்களைத் தெரிவு செய்வதில் தலையிடி

73

பாகிஸ்தானுக்கு எதிரான T20i தொடரில் பானுக ராஜபக்ஷ, மினோத் பானுக மற்றும் வனிந்து ஹசரங்க உள்ளிட்ட இளம் வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த இலங்கை தேர்வுக் குழுவின் தலைவர் அசந்த டி மெல், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெறவுள்ள T20i தொடருக்கு வீரர்களைத் தெரிவு செய்வது தலையிடியைக் கொடுக்கும் என குறிப்பிட்டார்.  

பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த புதன்கழமை லாகூரில் நடைபெற்ற 3ஆவதும், இறுதியுமான T20i போட்டியில் 15 ஓட்டங்களால் வெற்றியீட்டிய தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணி, 3 – 0 என T20 தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்தது

இலங்கையில் T20 லீக் தொடரொன்று இல்லாமை கவலையளிக்கிறது – தசுன் ஷானக்க

இலங்கையைப் பொறுத்தமட்டில் வெளிநாட்டு T20 லீக் தொடர்களில் லசித் மாலிங்க, திசர …..

இதன்படி, கடந்த 2 வாரங்களாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இலங்கை அணி, நேற்று (10) மாலை நாடு திரும்பியதுடன், அவர்களுக்கான விசேட வரவேற்பு நிகழ்வொன்று இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைமையத்தில் இடம்பெற்றது

இதன்போது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அணியில் இடம்பிடித்த புதுமுக வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தியது தொடர்பில் பேசிய அசந்த டி மெல்,

”தேர்வுக் குழுவின் தலைவராக தற்போது எனக்கு மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. பானுக ராஜபக்ஷ, ஓசத பெர்னாண்டோ மற்றும் மினோத் பானுக ஆகிய 3 வீரர்களும் இந்தத் தொடரில் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டனர்.

அதிலும் குறிப்பாக, மினோத் பானுகவின் ஆட்டத்தை இதற்குமுன் நான் கண்டதில்லை. ஆனால், அவராலும் சிக்ஸர் விளாச முடியும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டினார். ஒருநாள் தொடரில் அவர் சற்று மெதுவாக ஓட்டங்களைக் குவித்தாலும், T20 தொடரில் ஒருசில சிக்ஸர்களை அடித்தார். எனினும், துரதிஷ்டவசமாக அவர் ரன்அவுட் ஆனார்.  

இதேநேரம், இந்தத் தொடரில் நிரோஷன் டிக்வெல்ல இடம்பெற்றிருந்தால் மினோத் பானுகவுக்கு விளையாடுகின்ற வாய்ப்பு கிடைத்திருக்காது. எனவே, மினோத் பானுகவும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டார்.

அதேபோல தான் ஓசத பெர்னாண்டோவும் தனது முதல் T20i போட்டியில் அரைச் சதமடித்து தனது திறமையை நிருபித்துக் காட்டினார். எனவே மினோத் பானுக, பானுக ராஜபக்ஷ மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தேர்வாளர்களுக்கு தலையிடியைக் கொடுத்துள்ளனர்” என்றார்

இந்த நிலையில், பானுக ராஜபக்ஷவுக்கு அணியில் வாய்ப்புக் கொடுப்பதற்கு ஏன் 10 வருடங்கள் சென்றது என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்

பானுக ராஜபக்ஷவை எடுத்துக் கொண்டால் அவர் உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் விளையாடுவதை நான் பார்த்துள்ளேன். எனவே, அவருக்கும் அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நினைத்தோம். அவரும் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக செய்து முடித்தார்

நான் கடந்த நவம்பர் மாதம் தான் தேர்வுக் குழுவின் தலைவராகப் பெறுப்பேற்றேன். அவர் மாகாண அணிகளுக்கிடையிலான போட்டியில் 96 ஓட்டங்களைக் குவித்தார். அதன் காரணமாக அவருக்கு நாங்கள் இந்திய A அணியுடன் நடைபெற்ற தொடரில் வாய்ப்பு கொடுத்தோம். அங்கு சென்று முதலிரண்டு போட்டிகளிலும் அவரால் பிரகாசிக்க முடியாமல் போனாலும், அதன்பிறகு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தியிருந்தார். ஆனாலும், அடுத்த இன்னிங்ஸ்களில் அவர் ஓட்டங்களைக் குவிக்கவில்லை

Photo Album : Sri Lanka tour of Pakistan 2019 – Post Series Media Briefing

அதேபோல, பாகிஸ்தான் அணியுடனான 2ஆவது T20i போட்டியில் நாங்கள் 182 ஓட்டங்களைக் குவித்தோம். அதில் 42 ஓட்டமின்றிய பந்துகளையும் சந்தித்தோம். ஆனால் பானுக ராஜபக்ஷ 6 சிக்ஸர்களை விளாசினார். இவ்வாறு அவர் பாடசாலைக் காலத்திலும் சிக்ஸர்களை அடித்திருந்தார்.  

எனவே, எங்களைப் பொறுத்தமட்டில் இது நல்ல விடயமாகும். ஏனெனில் எமக்கு தற்போது சிறந்த அணியொன்று உள்ளது. திறமையான வீரர்கள் தமது வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இலங்கை அணி தற்போது கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருப்பதனை உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவடைந்த பிறகு நான் சொன்னேன்

எனவே இதே உத்வேகத்துடன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று விளையாடினால் அந்தத் தொடரையும் எம்மால் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என தெரிவித்தார்.

இலங்கை அணியில் தசுன் ஷானக்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய இரு வீரர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பாடமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,  

இம்முறை இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் தசுன் ஷானக்கவுக்கு விளையாடுகின்ற வாய்ப்பு அதிக இருந்தாலும், அவருக்கு ஏற்பட்ட தோற்பட்டை உபாதை குணமடையாததால் அணியில் இணைத்துக் கொள்ள முடியாமல் போனது. எனினும், அவருடைய திறமையை நாம் நன்கு அறிந்து வைத்துள்ளோம்.

ஒற்றுமையும், தன்னம்பிக்கையுமே இலங்கை அணியின் வெற்றிக்கு காரணம்

ஒற்றுமையும், தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்காலம் என்பதை பாகிஸ்தான்….

அதேபோல, தசுன் ஷானக்க இலங்கை அணிக்காக விளையாட வேண்டுமானால் 6ஆம் இலக்கத்தில் ஒரு துடுப்பாட்ட வீரராக அல்லது 7ஆவது இலக்கத்தில் துடுப்பாட்ட வீரராகவும், பந்துவீச்சாளராகவும் விளையாட வேண்டும் என அவருக்கு நான் சொல்லியிருக்கின்றேன். தற்போது அவர் தனது வகிபாகத்தை நன்கு அறிந்து வைத்துள்ளார்.

அவர் துடுப்பெடுத்தாடுகின்ற நுணுக்கத்தைப் பார்க்கும்போது அவருக்கு 6ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாட முடியும். அதேபோல, அவருக்கு 5 அல்லது 6 ஓவர்கள் பந்துவீச முடியுமானால் அணியின் சமபலத்துக்கு சாதகத்தைக் கொடுக்கும்” என தெரிவித்தார்

இந்த நிலையில், T20i தொடர் முழுவதிலும் அபார திறமையினை வெளிப்படுத்தியிருந்த இளம் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்த அசந்த டி மெல், அண்மைக்காலங்களில் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த ஒரேயொரு வீரர் எனவும் தெரிவித்தார்

”அண்மைக்காலங்களில் நான் கண்ட சிறந்த வீரர்களில் வனிந்து ஹசரங்கவை குறிப்பிடலாம். அவர் பந்துவீச்சைப் போல துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பிலும் திறமையினை வெளிப்படுத்தி எங்களை பிரம்மிக்கு வைத்தார். எனவே இந்த வருடத்தில் நான் கண்ட வீரர்களில் அவர் மிகவும் முன்னேற்றம் கண்ட வீரராக உள்ளார் என குறிப்பிட்டார்

இதேநேரம், பாகிஸ்தானுடனான சுற்றுப்பயணத்தில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுடனான T20i தொடரில் வாய்ப்பு வழங்கப்படுமா என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அசந்த டி மெல்

உண்மையில் இந்தத் தொடருக்கு வீரர்களைத் தேர்வு செய்வதென்பது எனக்கு தலையிடியைக் கொடுக்கும் என நம்புகிறேன். மினோத் பானுக, பானுக ராஜபக்ஷ, ஒசத பெர்னாண்டோ ஆகிய மூவரும் தமது கன்னிப் போட்டிகளில் விளையாடியிருந்தனர். தமக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே அவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி உலகின் முதல்நிலை அணியை வீழ்த்தினர்

எனவே, இவ்வாறான திறமைமிக்க இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தமையையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்த அணியை ஒருபோதும் நான் இரண்டாம் நிலை அணியாக கருதவில்லை. எனவே, அணியில் இடம்பெற்று விளையாடிய ஒவ்வொரு வீரரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை மகிழ்ச்சியளிக்கிறது

அதேபோல, நான் ஏற்கனவே கூறியது போல பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகிக் கொண்ட சிரேஷ்ட வீரர்கள் பெரும்பாலானோருக்கு இலங்கை அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது. தங்களது அபார திறமைகளை இந்த வீரர்கள் எமக்கு காட்டினர். அத்துடன், 3ஆவது T20i போட்டியிலும் நாங்கள் ஐந்து மாற்றங்களை செய்தும் வெற்றியீ;ட்டினோம் என அவர் கூறினார். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<