PSG ஐ விட்டு வெளியேறும் கவானி, தியாகோ சில்வா

264

எடிசன் கவானி மற்றும் தியாகோ சில்வா இருவரும் இந்தப் பருவத்துடன் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) கால்பந்து அணியில் இருந்து வெளியேறவுள்ளனர்.   

உருகுவே முன்கள வீரரான 33 வயதுடைய கவானி PSG அணிக்காக 200 சாதனை கோல்களை பெற்றிருப்பதோடு, பிரேசில் பின்கள வீரரான 35 வயதுடைய சில்வா அந்தக் கழகத்தின் தலைவராக உள்ளார்.  

கொரோனாவை கேலி செய்த அலிக்கு போட்டித் தடை

“இந்த வீரர்கள் கழகத்தின் வரலாற்றில் தமது இடத்தை பெற்றவர்கள் என்ற வகையில் இது கடினமான முடிவாக இருந்தது” என்று கழகத்தின் விளையாட்டு பணிப்பாளர் லியனார்டோ தெரிவித்தார். 

“இந்தக் கதைகள் மிக அழகானது. ஆனால் நாம் முடிவுக்கு வந்திருக்கிறோம்” என்றும் பிரான்ஸ் நாட்டு சஞ்சிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதில் அவர் மேலும் கூறியதாவது, “நாம் தர்க்க ரீதியான முடிவு ஒன்றை எடுத்துள்ளோம். சிலவேளை நாம் தவறாக இருக்கலாம், அது பற்றி எனக்குத் தெரியாது. தற்போது சம்பியன்ஸ் லீக் காணும் தூரத்தில் உள்ளது. ஓகஸ்ட் மாதம் இறுதி வரை அவர்களுடன் போட்டிகளை தொடருவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். அது எப்படி என்பது பற்றி தெளிவில்லை” என்றார். 

இந்த இரு வீரர்களினதும் ஒப்பந்தம் வரும் ஜூன் 30 ஆம் திகதி காலாவதியாகவுள்ளது. கொவிட்-19 காரணமாக பிரான்ஸின் லீக் 1 தொடர் கடந்த ஏப்ரல் மாதம் ரத்துச் செய்யப்பட்டது. எனினும் ஒரு குறுகிய போட்டித் தொடராக மூடிய அரங்கில் சம்பியன் லீக் போட்டிகள் வரும் ஓகஸ்ட் மாதம் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வரும் ஜூன் 22 ஆம் திகதி பயிற்சிகளை ஆரம்பிக்கவிருப்பதோடு அந்த அணி கடந்த மார்ச் மாதம் பொருசியா டோர்ட்முண்ட் அணியை தோற்கடித்து ஏற்கனவே ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதனைத் தொடர்ந்தே கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக போட்டிகள் இடைநிறுத்தப்பட்டன.   

ஸ்பெயின் கழகமான அட்லடிகோ மெட்ரிட் மீது ஆர்வம் காட்டும் கவானி PSG இல் இருந்து வெளியேறுவதற்கு கடந்த ஜனவரியிலேயே அனுமதி கோரி இருந்தார். மன்செஸ்டர் யுனைடட் மற்றும் செல்சி கழகங்களுடனும் தொடர்புபடுத்தி அவரது பெயர் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

இந்நிலையில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகம் முன்கள வீரரான மவுரோ இகார்டியை 60 மில்லியன் யூரோவுக்கு இன்டர் மிலான் கழகத்தில் இருந்து ஒப்பந்தம் செய்திருந்தது. 

இதில் முன்னணி வீரர்களான நெய்மார் மற்றும் கைலியன் ம்பப்பே அடுத்த பருவத்திலும் அணியில் நிலைத்திருப்பது குறித்து கேட்கப்பட்டபோது, “வேறு விதமாக எமக்கு எதுவும் கூற முடியாது. அவர்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தக் காலம் இருப்பதோடு, அவர்களுடனான எதிர்காலம் பற்றி நாம் அதிகம் சிந்தித்து வருகிறோம். நாம் முன்னோக்கிச் செல்ல விரும்புகிறோம்” என்று லியனார்டோ தெரிவித்தார்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<