பங்களாதேஷ் அணிக்கு பயிற்சியளிக்கத் தயார் – ஹத்துருசிங்க

207

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை மீண்டும் பொறுப்பேற்க தயார் என அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளரான சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

இவர் 2014ஆம் ஆண்டு முதல் 2017 வரை பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டிருந்ததுடன், 2017 டிசம்பர் மாதம் முதல் 2019 ஜுலை மாதம் வரை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டிருந்தார்.

கிரைக் மெக்மிலானை அழைக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

இந்த நிலையில், தற்போது அவுஸ்திரேலியாவின் நிவ் சவுத் வேல்ஸ் அணியின் பயிற்சியாளராக கடமையாற்றி வருகின்ற அவர், பங்களாதேஷின் தி டெய்லி ஸ்டார் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்தால் மீண்டும் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியைப் பொறுப்பேற்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் மேலும் கருத்து தெரிவிக்கையில்

”பங்களாதேஷ் அணிக்கு எனது மனதில் முக்கிய இடமுண்டு. அந்த அணியின் வளர்ச்சியில் நான் எப்போதும் அவதானத்துடன் இருந்து வருகிறேன்

பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு அந்த அணியின் வீரர்களோ அல்லது அந்நாட்டு கிரிக்கெட் சபையின் அதிகாரிகளோ எந்த விதத்திலும் காரணமாக இருக்கவில்லை. அது என்னுடைய தனிப்பட்ட தீர்மானம்

குறிப்பாக, பங்களாதேஷ் நாட்டு இரசிகர்கள், எனக்கு அந்நாட்டு கிரிக்கெட்டுடன் எந்தவொரு தொடர்பும் இல்லை என கூறமுடியாது. நான் எப்போதும் அந்த அணியின் வளர்ச்சியில் மிகவும் அவதானிப்புடன் இருக்கிறேன்” அவர் தெரிவித்தார்

Video – தனியாளாக சாதித்துக் காட்டிய Dinesh Chandimal | Cricket Galatta Epi 33

எதுஎவ்வாறாயினும், பங்களாதேஷ் அணி, 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இம்மாதம் இலங்கை வரவுள்ளது. இதில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக செயற்பட நியூசிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கிரைக் மெக்மிலான் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரரும், பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணியின் பயிற்சியாளரும், அந்த அணிக்கு கடந்த வருடம் இளையோர் உலகக் கிண்ணத்தை வென்று கொடுக்க காரணமாகவும் இருந்த நவீட் நவாஸ் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான தென்னாபிரிக்கா நாட்டைச் சேர்ந்த ரசல் டொமினிங்கோ, பங்களாதேஷில் கொவிட் – 19 வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இலங்கை சுற்றுப்பயணத்துடன் இணைந்து கொள்வாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து பயிற்சியாளரின் பதவிக்காலம் 3 வருடங்களுக்கு நீட்டிப்பு

இதன்படி, தற்போது பங்களாதேஷ் வருகை தந்துள்ள நவீட் நவாஸ், இலங்கை அணியுடனான சுற்றுப்பயணத்தில் மாத்திரம் அந்த அணியின் தற்காலிக பயிற்சியாளராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்ற நவீட் நவாஸ், பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்காக பயிற்சிகளை வழங்குவதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி பங்களாதேஷ் வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…