நியூசிலாந்து பயிற்சியாளரின் பதவிக்காலம் 3 வருடங்களுக்கு நீட்டிப்பு

99

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் கேரி ஸ்டீட்டின் பதவிக்காலம் 2023 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (02) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அந்நாட்டின் முன்னாள் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் கேரி ஸ்டீட் செயற்பட்டு வருகிறார்

அவரது பதவிக்காலம் இவ்வருடத்துடன் முடிவடையும் நிலையில், 2023 உலகக் கிண்ணத் தொடர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

48 வயதான கேரி ஸ்டீட், 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

எல்.பி.எல். தொடரில் பங்கேற்கும் முதல் அணி அறிமுகம்

இவரது தலைமையில் நியூசிலாந்து அணி வெளிநாட்டு மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், இலங்கைக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் பௌண்டரி அடிப்படையில் தோல்வியை சந்தித்தது

மறுபுறத்தில் சொந்த மண்ணில் பங்காளதேஷ், இங்கிலாந்து, இந்தியா, இலங்கை அணிகளுக்கு எதிராக தொடரை வென்றது.

எனவே, உலக டெஸ்ட் தரவரிசையில் 2ஆவது இடத்திற்கும், ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 3ஆவது இடத்திற்கும் அந்த அணி முன்னேறியது

இதன்மூலம் அவரது பதவிக்காலம் 2023 உலகக் கிண்ணத் தொடர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரிச்சட்சனுக்கு பதிலாக RCB அணியில் அடம் ஸம்பா

இந்த நிலையில், தனது பதவிக்காலம் நீடிக்கப்பட்டமை தொடர்பில் கேரி ஸ்டீட் கருத்து தெரிவிக்கையில்

“நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக என்னை மீண்டும் தேர்வு செய்தமையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்காலத்தில் நாங்கள் முக்கியமான பல போட்டித் தொடர்களில் களமிறங்கவுள்ளோம். அந்தத் தொடர்களில் விளையாடுவதற்கு எமது வீரர்கள் ஆர்வத்துடன் உள்ளார்கள்” என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கொவிட் – 19 வைரஸினால் இதுவரை எந்தவொரு சர்வதேச தொடர்களிலும் விளையாடாத நியூசிலாந்து அணி, எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளை சொந்த மண்ணில் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<