இலங்கை வரும் இங்கிலாந்து டெஸ்ட் குழாமில் மூன்று புதுமுக வீரர்கள்

217

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து குழாமில் ஓய்வு பெற்ற அலஸ்டயர் குக்கிற்கு பதில் புதுமுக வீரர் ரோரி பேர்ன்ஸ் அழைக்கப்பட்டுள்ளார்.

இம்முறை இங்கிலாந்து கௌண்டி சம்பியன் கிண்ணத்தை வென்ற சர்ரே அணியின் தலைவரான 28 வயது பேர்ன்ஸ், 69.42 ஓட்ட சராசரியுடன் தொடரின் அதிகூடிய ஓட்டங்களாக 1,319 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை வரும் இங்கிலாந்து ஒருநாள் குழாம் அறிவிப்பு

கென்ட் அணியின் துடுப்பாட்ட வீரரான ஜோ டென்லி மற்றும் வொர்விக்ஷயர் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ஸ்டோனும் முதல் முறை இங்கிலாந்து டெஸ்ட் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

32 வயதுடைய டென்லி இதற்கு முன்னர் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ஒன்பது ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஐந்து டி-20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.

இந்த பருவத்தில் கென்ட் அணி இரண்டாவது பிரிவில் இருந்து முன்னேற்றம் காண மூன்று சதங்களை பெற்றதோடு மொத்தம் 798 ஓட்டங்களை குவித்தார். இதன் ஓட்ட சராசரி 36.27 ஆகும். சுழல் பந்துவீச்சாளராகவும் செயற்படும் அவர் இந்த ஆண்டில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது பந்துவீச்சு சராசரி 18.90 ஆகும்.

கடந்த புதன்கிழமை (19) அறிவிக்கப்பட்ட இலங்கையுடனான ஒருநாள் குழாமில் இடம்பிடித்த 24 வயதுடைய ஸ்டோன் இந்த பருவத்தில் வோர்விக்ஷயர் அணிக்காக 12.27 பந்துவீச்சு சராசரியுடன் 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக தனது கன்னி டெஸ்ட் போட்டியில் ஆடிய பின்னர் இடது கை சுழல் பந்துவீச்சாளர் ஜக் லீச் முதல் முறை இங்கிலாந்து அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் தவிர 16 பேர் கொண்ட இங்கிலாந்து குழாமில் மொயீன் அலி மற்றும் ஆதில் ரஷீத் ஏனைய விசேட சுழல் பந்துவீச்சாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் ஓட்டங்களை பெற்றவரான இடது கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அலஸ்டயர் குக் அண்மையில் முடிந்த இந்தியாவுடனான டெஸ்ட் தொடருடன் தனது 12 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வை முடித்துக் கொண்டார். அவர் ஓவலில் நடந்த விடைபெறும் டெஸ்ட்டில் சதம் ஒன்றை பெற்று இங்கிலாந்து அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான இடைவெளியை விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் கீடன் ஜென்னிங்ஸுடன் பேர்ன் இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கத் தயாராகும் டில்ஷான்

”இதற்கு முன்னர் நான் ஒருபோதும் இலங்கையில் விளையாடியதில்லை. இது எனக்கு புதிதாக இருக்கும். தொடர்ந்து திறமையை வெளிப்படுத்த எதிர்பார்த்துள்ளேன்” என்று ரோரி பேர்ன்ஸ் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடருக்கு முன்னர் இரு பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகும்.

இங்கிலாந்து குழாம்: ஜோ ரூட் (தலைவர்), மொயீன் அலி, ஜிம்மி அண்டர்ஸன், ஜொன்னி பெயார்ஸ்டோ, ரொரி பேர்ன்ஸ், ஸ்டுவட் பிரோட், ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், ஜோ டென்லி, கீடன் ஜென்னிங்ஸ், ஜெக் லீச், ஒலி பொப், ஆதில் ரஷீத், பென் ஸ்டொக்ஸ், ஒலி ஸ்டோன், கிறிக்ஸ் வோக்ஸ்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<