இந்திய அணியின் நிரந்தர தலைவராகும் ஹர்திக் பாண்டியா?

319

இந்திய ஒருநாள் மற்றும் T20i அணிகளின் புதிய தலைவராக சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியாவை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்;த பிறகு இந்திய T20i அணியின் தலைவர் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். இதனைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவுக்கு அப்பதவி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2021 டிசம்பரில் விராட் கோலியிடம் இருந்து, ஒருநாள் அணியின் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு, ரோஹித் சர்மாவிடம் கொடுக்கப்பட்ட நிலையில், அடுத்து இந்த ஆண்டு ஆரம்பத்தில் டெஸ்ட் அணியின் தலைவர் பதவியும் ரோஹித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது.

எனினும், ரோஹித் சர்மா தலைவராக பொறுப்பேற்ற பிறகு அவ்வபோது காயம் காரணமாகவும், பிட்னஸ் காரணமாகவும் சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக இந்திய அணிக்கு பும்ரா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பாண்ட், கே.எல்.ராகுல், ஷிகர் தவான் போன்ற பலர் அவ்வப்போது தலைவராக நியமிக்கப்பட்டனர். எனவே அண்மைக்காலமாக இந்திய அணியை இவ்வாறு பல தலைவர்கள் வழிநடத்திய காரணத்தால் இந்திய அணிக்கு உறுதியான இறுதிப் பதினொருவர் அணியை கட்டியெழுப்ப முடியாமல் போனது.

இதனால், ஆசியக் கிண்ணத் தொடரில் படுதோல்வி, T20 உலகக் கிண்ணத் தொடர் அரையிறுதியில் படுதோல்வி என அடுத்தடுத்த பெரிய தொடர்களில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்விகளை சந்தித்தது. இதன் காரணமாக அவரது தலைமைத்துவம் மீது பிசிசிஐ கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

இந்த நிலையில், ஐசிசியின் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த இந்தியாவில் நடைபெறுகிறது. அதற்குள் ஒரு நிலையான அணியொன்றை தயார் படுத்தும் முயற்சியில் பிசிசிஐ களமிறங்கியுள்ளது. இதன் பகுதியாக ரோஹித் சர்மாவை தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு இந்திய அணியின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளின் தலைவராக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க பிசிசிஐ கவனம் செலுத்தியுள்ளது.

இதுதொடர்பில் பிசிசிஐ அதிகாரிகள் ஹர்திக் பாண்டியாவிடம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் இறுதி முடிவெடுக்க அவர் சிலநாட்கள் அவகாசம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், ‘ரோஹித் சர்மாவை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், ஒருநாள் மற்றும் T20i அணிகளின் தலைவர் பொறுப்பை ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்க பிசிசிஐ யோசித்து வருகிறது. இந்த யோசனையை ஹர்திக்கிடமும் விவாதித்துள்ளது. ஆனால், அவர் சில நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளார். அவர் சொல்லும் முடிவை பொறுத்தும், புதிய தேர்வுக் குழு அமைக்கப்பட்ட பின்னரும் இந்த விவகாரத்தில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று T20i போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில்; விளையாடுகிறது. முதல் T20i போட்டி ஜனவரி 3ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது இடது கை விரலில் காயம் அடைந்தார். இதனால் அந்த அணியுடனான 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவில்லை. எவ்வாறாயினும், அவர் காயத்தில் இருந்து குணமடைய சில நாட்கள் ஆகலாம் என்று தெரிகிறது.

இதனால் இலங்கைக்கு எதிரான T20i மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைவராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, அண்மையில் நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் T20i அணியின் தலைவர் பதவி பற்றி விவாதிக்கப்படவில்லை. புதிய தேர்வுக்குழு நியமிக்கப்பட்ட பிறகு தான் தலைவர் பதவி தொடர்பில் இறுதி முடிவு எடுக்க முடியும். அத்துடன், இலங்கைக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா காயத்தில் இருந்து குணமடையாவிட்டால் ஹர்திக் பாண்டியாவை தலைவராக நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ‘

இதேவேளை, இந்திய டெஸ்ட் அணிக்கும் பும்ரா, ரிஷப் பாண்ட், கே.எல்.ராகுல் ஆகியோரில் ஒருவரை விரைவில் தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<