சத்திர சிகிச்சையின் பின்னர் இந்திய அணிக்கு திரும்பிய ஹார்டிக் பாண்டியா

60

சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடன் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடருக்கான விராட் கோஹ்லி தலைமையிலான 15 பேர் அடங்கிய இந்திய குழாம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ளது. 

தென்னாபிரிக்க அணியானது கடந்த வருடம் (2019) செப்டம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகிய இரு தொடர்களில் விளையாடியிருந்தது. இந்நிலையில் குறித்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடர் அடுத்த வருடத்திற்கு (2020) பிற்போடப்பட்டிருந்தது. 

இரண்டு முக்கிய வீரர்களின் உபாதைகளினால் அவதியுறும் இலங்கை அணி

பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று (06) நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய…

அதன் அடிப்படையில் பிற்போடப்பட்ட 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் எதிர்வரும் வியாழக்கிழமை (12) தர்மசாலாவில் ஆரம்பமாகிறது. இந்நிலையில் குறித்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடருக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையானது பல மாற்றங்களுடன் கூடிய இந்திய குழாமை தற்போது வெளியிட்டுள்ளது. 

இந்திய அணி இறுதியாக ஒருநாள் சர்வதேச தொடர் ஒன்றில் நியூசிலாந்து அணியுடன் எதிரணியினரின் மண்ணில் விளையாடியிருந்தது. குறித்த தொடரில் பங்கேற்ற குழாமிலிருந்து 5 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த ஒருநாள் சர்வதேச தொடரை இந்திய  அணி வைட்-வொஷ் அடிப்படையில் 0-3 என இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இறுதியாக கடந்த செப்டம்பர் மாதம் தென்னாபிரிக்க அணியுடன் நடைபெற்ற டி20 சர்வதேச போட்டியில் விளையாடிய நிலையில் உபாதைக்கு முகங்கொடுத்ததன் காரணமாக பல சர்வதேச தொடர்களை இழந்துவந்த அதிரடி சகலதுறை வீரர் ஹார்டிக் பாண்டியா சத்திர சிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் தற்போது முழுமையாக குணமடைந்த நிலையில் நீண்ட இடைவெளியின் பின்னர் இந்திய குழாமில் இடம்பெற்றுள்ளார். 

இந்திய அணியின் முக்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இடதுகை துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் கடந்த ஜனவரியில் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியின் போது தோள்பட்டை உபாதைக்குள்ளாகியிருந்தார். அதன் காரணமாக நியூசிலாந்து அணியுடனான தொடரை முழுமையாக இழந்திருந்தார். 

உள்ளூர் போட்டிகளில் அசத்தும் தினேஷ் சந்திமால்

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் பிரிவு A உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான…

இந்நிலையில் தற்போது அவர் குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். அத்துடன் உபாதைக்குள்ளாகியிருந்த இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான புவ்னேஸ்வர் குமாரும் உபாதையிலிருந்து மீண்டு 3 மாதங்களின் பின்னர் இந்திய குழாமிற்கு திரும்பியுள்ளார். 

இந்திய அணியின் உபதலைவரும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான ரோஹிட் சர்மா இறுதியாக நியூசிலாந்து அணியுடனான தொடரின் போது உபாதைக்குள்ளானதன் அடிப்படையில் தற்போது தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். இதன் காரணமாக கடந்த வருடம் (2019) ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட இளம் துடுப்பாட்ட வீரர் சுப்மன் கில் மீண்டும் இந்திய ஒருநாள் குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார். 

மேற்கூறப்பட்ட வீரர்களின் மீள்வருகை காரணமாக நியூசிலாந்து தொடரில் விளையாடிய பல வீரர்கள் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சகலதுறை வீரர் ஹார்டிக் பாண்டியாவின் வருகை காரணமாக மற்றுமொரு சகலதுறை வீரர் சிவம் துபே குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். புவ்னேஸ்வர் குமாரின் வருகையால் நியூசிலாந்து தொடரில் பிரகாசிக்கத்தவறிய மொஹமட் ஷமி மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் இறுதியாக நிறைவுக்குவந்த நியூசிலாந்து அணியுடனான தொடரில் ஒருநாள் அறிமுகம் பெற்று தொடரில் 3 இன்னிங்சுகளிலும் பிரகாசிக்கத்தவறிய மயங்க் அகர்வாலும் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

நியூசிலாந்துடனான ஒருநாள் குழாமில் இடம்பெற்றிருந்த ரிஷப் பண்ட் இரண்டாவது விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக தொடர்ந்தும் குழாமில் நீடிக்கின்றார். அத்துடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரரின் வெற்றிடத்துக்காக கடந்த நியூசிலாந்து தொடரில் ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட 20 வயதுடைய இளம் துடுப்பாட்ட வீரர் பிரித்வி ஷாவ் தொடர்ந்தும் ஒருநாள் குழாமில் நீடிக்கின்றார். 

தென்னாபிரிக்க தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய ஒருநாள் குழாம் 

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ஷிகர் தவான், பிரித்வி ஷாவ், கே.எல் ராகுல், மணீஷ் பாண்டே, ஷிரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவ்னேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்பிரிட் பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், சுப்மன் கில்

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் அட்டவணை. (அனைத்து போட்டிகளும் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளன)

  • 12 மார்ச் – முதலாவது போட்டி – தர்மசாலா 
  • 15 மார்ச் – இரண்டாவது போட்டி – லக்னோவ்
  • 18 மார்ச் – மூன்றாவது போட்டி – கொல்கத்தா 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<