ஆசிய கிண்ணத்தில் ஆறாவது நாடாக இணையும் ஹொங்கொங் கிரிக்கெட் அணி

587

ஆசியக் கிண்ணத்தில் விளையாடப் போகும் ஆறாவது அணி எது என்பதனை தீர்மானிப்பதற்காக ஆசிய கிரிக்கெட் வாரியத்தினால் (ACC) ஒழுங்கு செய்யப்பட்ட ஆசியக் கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தினை டக்வத் லூயிஸ் முறையில் 2 விக்கெட்டுக்களால் ஹொங்கொங் கிரிக்கெட் அணி வீழ்த்தியுள்ளது.

இதன் மூலம் ஹொங்கொங் அணி இம்மாதம் 15ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பாகவுள்ள ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பலப்பரீட்சை நடாத்தும் ஆறாவது அணியாகவும்  மாறுகின்றது.

ஆசிய கிண்ணத்தில் கோஹ்லிக்கு ஓய்வு; இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மா

14ஆவது தடவையாக இம்முறை நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடருக்காக (ஒரு நாள்) இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து கிரிக்கெட் அணிகள் ஏற்கனவே நேரடியாக தகுதி பெற்ற  நிலையில் ஆறாவது அணியினை தெரிவு செய்யும் இந்த தகுதிகாண் தொடர் கடந்த மாதம் 29ஆம் திகதி மலேசியாவில் ஆரம்பமாகியிருந்தது.

இந்த தகுதிகாண் தொடரில் ஆசியாவில் கிரிக்கெட் விளையாட்டு விருத்தியடைந்து வரும் ஐக்கிய அரபு இராச்சியம், ஹொங்கொங், ஓமான், நேபாளம், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய ஆறு நாடுகளின் கிரிக்கெட்  அணிகள் பங்கேற்றிருந்தன.  

தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளுக்கு வழங்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் புள்ளிகள் அட்டவணையில் நான்கு வெற்றிகளுடன் முதலிடம் பிடித்த ஐக்கிய அரபு இராச்சிய அணியும், இரண்டாவது இடம் பிடித்த ஹொங்கொங் அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

இதன்படி கோலாலம்பூர் கின்ரா அகடமி ஓவல் மைதானத்தில் இன்று (6) இறுதிப் போட்டி ஆரம்பமாகியது. தீர்மானமிக்க போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஹொங்கொங் அணியின் தலைவர் அன்சுமான் ராத் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வழங்கினார்.

சகிப் அல் ஹசன் ஆசிய போட்டியில் விளையாடுவது சந்தேகம்

இதன்படி முதலில் துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி நல்ல ஆரம்பத்தை  காட்டியிருந்த போதிலும், ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு மிகவும் நீண்ட நேரத்திற்கு காணப்பட்டதால் போட்டியின் ஓவர்கள் அணிக்கு 24 ஆக டக்வத் லூயிஸ் முறையில் குறைக்கப்பட்டன.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 24 ஓவர்களில் ஐக்கிய அரபு இராச்சிய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. ஐக்கிய அரபு இராச்சிய அணியின் துடுப்பாட்டம் சார்பாக அதிரடி காட்டிய அஷ்பாக் அஹமட் 6 சிக்ஸர்கள், 9 பெளண்டரிகள் அடங்கலாக 51 பந்துகளுக்கு 79 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

இதேநேரம் ஹொங்கொங் அணியின் பந்துவீச்சு சார்பாக வேகப்பந்து வீச்சாளரான அய்ஷாஸ் கான் 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், நதீம் அஹ்மட் 3 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 179 ஓட்டங்கள் என்கிற டக்வத் லூயிஸ் முறையிலான இலக்கை 24 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஹொங்கொங் அணி, ஆரம்பத்தில் தடுமாற்றத்தை காட்டியிருந்தது.

ஆசிய கிண்ணமும் லசித் மாலிங்கவின் அசத்தல் பந்து வீச்சும்

எனினும், மத்திய வரிசை வீரர்களின் அதிரடி கலந்த துடுப்பாட்ட பங்களிப்பினால் ஹொங்கொங் அணி 23.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கினை அடைந்தது.

ஹொங்கொங் அணியின் வெற்றிக்காக நிசாகத் கான் 20 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்களுடன் முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்ததோடு, கிரிஸ்டோபர் கார்டர் உம் 33 ஓட்டங்களுடன் உதவியிருந்தார்.

ஐக்கிய அரபு இராச்சிய அணியின் பந்துவீச்சு சார்பாக மொஹமட் நவீட் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதிலும் அது அவரது அணியின் வெற்றிக்கு போதுமாக இருக்கவில்லை.

ஐக்கிய அரபு இராச்சியத்துடனான வெற்றியுடன் ஆசியக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றிருக்கும் ஹொங்கொங் அணி தமது முதல் போட்டியில் இம்மாதம் 16 ஆம் திகதி பாகிஸ்தான் அணியினை எதிர் கொள்கின்றது.

போட்டிச் சுருக்கம்

ஐக்கிய அரபு இராச்சியம் – 176/9 (24) அஸ்பாக் அஹமட் 79 (51), அய்ஷாஸ் கான் 28/5 (5), நதீம் அஹ்மட் 28/3 (3)

ஹொங்கொங் – 179/8 (23.3) நிசகாத் கான் 38(20), கிரிஸ்டோபர் கார்டர் 33(32), மொஹமட் நவீட் 47/2 (5)

முடிவு – ஹொங்கொங் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி (டக்வத் லூயிஸ் முறையில்)

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க