இலங்கை கால்பந்து குழாத்தில் இளம், சிரேஷ்ட வீரர்கள் இணைப்பு

Mahinda Rajapaksa trophy four nations tournament

165

இந்த மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள நான்கு நாடுகள் பங்கேற்கும் கால்பந்து சுற்றுத் தொடருக்கான 23 வீரர்களைக் கொண்ட இலங்கை தேசிய குழாம் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை, பங்களாதேஷ், மாலைதீவுகள் மற்றும் சீசெல்ஸ் ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணத் தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், அண்மையில் நிறைவுற்ற தெற்காசிய கால்பந்து சம்மேளனக் கிண்ணத்திற்கான (SAFF) தொடரிற்கு பெயரிடப்பட்ட குழாத்தில் இருந்து ஐந்து மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில் இந்த தொடருக்கான புதிய குழாம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

அதன்படி, SAFF தொடருக்கான குழாத்தில் இருந்த ரொஷான் அப்புஹாமி (டிபெண்டர்ஸ்), மொஹமட் முஸ்தாக் (அப் கண்ட்ரி லயன்ஸ்), சுபுன் தனன்ஜய (ரெட் ஸ்டார்ஸ்), ரிப்கான் மொஹமட் (டிபெண்டர்ஸ்) மற்றும் எடிசன் பிகுராடோ ஆகியோர் இந்த குழாத்தில் இணைக்கப்படவில்லை.

இவர்களுக்குப் பதிலாக, ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) 23 வயதின் கீழ் ஆசிய கிண்ணத்திற்கான தகுதிகாண் சுற்றுத் தொடரில் இலங்கை 23 வயதின்கீழ் அணிக்கு விளையாடிய சசன்க டில்ஹார, டேனியல் மெக்ராத் மற்றும் அப்துல் பாசித் ஆகிய வீரர்கள் தேசிய அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, கொழும்பு கால்பந்து கழக வீரரான அஹமட் சஸ்னியுடன் தேசிய அணியின் முன்னாள் வீரரான மொஹமட் ரிப்னாசும் தேசிய அணிக்குத் திரும்பியுள்ளனர். ரிப்னாஸ், கடந்த 2019ஆம் ஆண்டு உபாதைக்கு உள்ளாகியதன் பின்னர் சுமார் ஒரு வருடமாக எந்தவித போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த நிலையில் இறுதியாக சுபர் லீக் போட்டிகளில் ரினௌன் அணிக்காக விளையாடியிருந்தார்.

அதேபோன்று, AFC 23 வயதின் கீழ் ஆசிய கிண்ணத்திற்கான தகுதிகாண் சுற்றுத் தொடரில் இலங்கை இளையோர் அணிக்காக விளையாடாத டிலன் டி சில்வாவும் இந்த தொடருக்கான குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.

முன்னர் போன்றே, அணியின் தலைவராக கோல் காப்பாளர் சுஜான் பெரேராவும் துணைத் தலைவர்களாக கவிந்து இஷான் மற்றும் வசீம் ராசிக் ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கை குழாம்  

சுஜான் பெரேரா (அப் கண்ட்ரி லயன்ஸ்), வசீம் ராசிக் (அப் கண்ட்ரி லயன்ஸ்), கவிந்து இஷான் (அப் கண்ட்ரி லயன்ஸ்), மொஹமட் பசால் (புளூ ஸ்டார்), ஷரித்த ரத்னாயக்க (கொழும்பு), ஷலன சமீர (கொழும்பு), ஹர்ஷ பெர்னாண்டோ (புளூ ஈகல்ஸ்), பிரபாத் றுவன் அருனசிறி (புளூ ஈகல்ஸ்), டக்சன் பியுஸ்லஸ் (TC வி.க), மொஹமட் ரிப்னாஸ் (ரினௌன்), மொஹமட் ஆகிப் (கொழும்பு), ஜூட் சுபன் (ரினௌன்), மார்வின் ஹமில்டன் (பேர்ஜர்ஸ் ஹில் டவுன்), ஷமோத் டில்ஷான் (கொழும்பு), அஹமட் சஸ்னி (கொழும்பு), சசன்க டில்ஹார (டிபெண்டர்ஸ்), அப்துல் பாசித் (கொழும்பு), அசிகுர் ரஹ்மான் (டிபெண்டர்ஸ்), டேனியல் மெக்ராத் (புளூ ஸ்டார்), அமான் பைசர் (ரினௌன்), மொஹமட் சிபான் (அப் கண்ட்ரி லயன்ஸ்), கவீஷ் பெர்னாண்டோ (புளூ ஸ்டார்), டிலன் டி சில்வா (குயின்ஸ் பார்க் ரேன்ஜர்ஸ்)

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் இந்தக் குழாம் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<