மொரோக்கோவின் சவாலை சமாளித்த பிரான்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

277
FIFA World cup 2022

மொரோக்கோவை 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த அணியின் கனவை முடிவுக்குக் கொண்டுவந்த நடப்புச் சம்பியன் பிரான்ஸ் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

கட்டாரின் அல் பைத் அரங்கில் இலங்கை நேரப்படி வியாழக்கிழமை (15) அதிகாலை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியின் ஐந்தாவது நிமிடத்திலேயே தியோ ஹெர்னான்டஸ் கோல் பெற்றது பிரான்ஸை வலுப்பெறச் செய்தது.

மொரோக்கோ கோல்கம்பத்திற்கு அருகில் தள்ளுமுள்ளு ஏற்பட தன்னிடம் வந்த பந்தை ஹெர்னாண்டஸ் கோலாக மாற்றினார். இதன்மூலம் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் 1958க்குப் பின்னர் வேகமாக கோல் பெற்றவராக ஹெர்னாண்டஸ் பதிவானார்.

>> தனது எதிர்கால திட்டம் குறித்து கருத்து வெளியிட்ட லியனோல் மெஸ்ஸி

மறுபுறம் இம்முறை உலகக் கிண்ணத்தில் மொரோக்கோ எதிரணிக்கு விட்டுக்கொடுத்த முதல் கோலாகவும் இது இருந்தது.

மொரோக்கோ அணித்த தலைவர் ரொமன் சைஸ் 20 ஆவது நிமிடத்தில் உபாதை காரணமாக வெளியேறியது மற்றும் கடைசி நிமிடத்தில் நயேப் அகுவார்ட் மாற்றப்பட்டது அந்த அணிக்கு பின்னடைவாக இருந்தது.

என்னும் முதல் பாதியின் கடைசி நிமிடங்களில் மொரோக்கோ அணி பிரான்ஸின் கோல் பகுதியை அடிக்கடி ஆக்கிரமித்து பதில் கோல் திருப்ப கடுமையாகப் போராடியது. குறிப்பாக ஜாவத் எல் யாமின் பிரான்ஸ் பெனால்டி எல்லை பகுதியில் உதைத்த பைசிகள் கிக் கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

இரண்டாவது பாதியிலும் பதில் கோல் திருப்பும் மொரோக்கோவின் அவசரம் தெரிந்தது. ஹகிம் செயச் மற்றும் சொபியான் பவுபல் இடம் பந்து கிடைக்கும் தருணங்களில் பிரான்ஸ் பெனால்டி பகுதியை அபாயகரமான முறையில் ஆக்கிரமித்தனர்.

>> மெஸ்ஸியின் சாகசத்தால் ஆர்ஜன்டீனா இறுதிப் போட்டியில்

76ஆவது நிமிடத்தின்போது அப்தர்ரசாக் ஹம்தல்லா பிரான்சின் வலையை நோக்கி பல தடவைக் உதைத்தபோதும் ஒன்று கூட கோலாக மாறவில்லை.

எனினும் பிரான்ஸ் மொரோக்கொவின் எதிர்பார்ப்பை 79ஆவது நிமிடத்தில் முழுமையாக சிதறடித்தது. மொரோக்கோ பொனல்டி பகுதிக்குள் ம்பப்பே கடத்தி வந்த பந்தை கோலோ முவானி கோலாக மாற்றினார்.

ஒஸ்மான் ட்ம்பெலேவுக்கு பதில் மைதானம் வந்து வெறுமனே 44 விநாடிகளிலேயே அவர் அந்த கோலை பதிவு செய்தார். இது உலகக் கிண்ண வரலாற்றில் பதில் வீரராக வந்து பெறப்பட்ட இரண்டாவது வேகமான கோலாக இருந்தது.

இரண்டு கோல்களால் பின்தங்கியபோதும் கடைசி நிமிடங்களிலும் மொரோக்கோ வெற்றிக்காக போராடியதை காண முடிந்தது.

>> ThePapare சம்பியன் கிண்ணம் சென் ஜோசப் கல்லூரி வசம்

இதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி 1978 மற்றும் 1986இன் உலக சம்பியனான லியோனல் மெஸ்ஸியின் ஆர்ஜன்டீனாவை எதிர்கொள்ளவுள்ளது.

1962இல் பிரேசிலுக்குப் பின்னர் உலகக் கிண்ணத்தை தொடர்ச்சியாக வெல்லும் எதிர்பார்ப்புடனேயே பிரான்ஸ் இறுதிப் போட்டியில் களமிறங்கவுள்ளது.

முன்னதாக முதல் ஆபிரிக்க மற்றும் அரபு நாடாக உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறிய மொரோக்கோ அணி உலகக் கிண்ணத்தின் மூன்றாவது இடத்தை பிடிப்பதற்காக வரும் சனிக்கிழமை (17) குரோசிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<