தனது எதிர்கால திட்டம் குறித்து கருத்து வெளியிட்ட லியனோல் மெஸ்ஸி

241
Retirement Messi announces future plans

அர்ஜென்டின நட்சத்திர கால்பந்து வீரர் லியனோல் மெஸ்ஸி, கால்பந்து போட்டிகளில் தன்னுடைய எதிர்காலத் திட்டம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில் 35 வயது நிரம்பிய மெஸ்ஸி அர்ஜென்டின கால்பந்து அணிக்காக விளையாடும் இறுதிப் போட்டியாக 2022ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இருக்கும் என அவரது எதிர்காலத் திட்டம் குறித்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கின்றது.

>> மெஸ்ஸியின் சாகசத்தால் ஆர்ஜன்டீனா இறுதிப் போட்டியில்

மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டின அணியானது நேற்று (13) நடைபெற்ற 2022ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் குரோசிய அணியினை வீழ்த்தியிருந்ததோடு கால்பந்து உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி ஒன்றில் ஆடும் வாய்ப்பினையும் எட்டு வருடங்களின் பின்னர் பெற்றிருந்தது.

இந்த அரையிறுதிப் போட்டியில் மெஸ்ஸி பெனால்டி வாய்ப்பு ஒன்றின் மூலம் கோலினைப் பெற்றிருந்ததோடு போட்டியில் பெறப்பட்ட ஏனைய இரண்டு கோல்களுக்கும் உதவி செய்திருந்தார்.

அர்ஜென்டின கால்பந்து நட்சத்திரங்களான டியகோ மரடோனா மற்றும் ஜாவியர் மஸ்செரானோ போன்றவர்கள் கால்பந்து உலகக் கிண்ணத் தொடர்களில் நான்கு தடவைகள் மாத்திரம் விளையாடிய நிலையில் மெஸ்ஸி கட்டாரில் நடைபெறும் 2022ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கிண்ணத் தொடரில் விளையாடி, 5 தடவைகள் அர்ஜென்டின அணிக்காக கால்பந்து உலகக் கிண்ணத் தொடர்களில் விளையாடிய வீரர் என்கிற சாதனையினை நிலைநாட்டியிருக்கின்றார்.

அத்துடன் இந்த கால்பந்து உலகக் கிண்ணத் தொடரில் மொத்தமாக 5 கோல்களைப் பெற்றிருக்கும் மெஸ்ஸி கால்பந்து உலகக் கிண்ணப் போட்டிகளில் மொத்தமாக 11 கோல்களுடன் கால்பந்து உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களைப் பெற்ற அர்ஜென்டின வீரர் கேப்ரியல் படிஸ்டாவின் சாதனையினையும் முறியடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> ThePapare சம்பியன் கிண்ணம் சென் ஜோசப் கல்லூரி வசம்

தான் உலகக் கிண்ணத்தின் பின்னர் ஓய்வு பெறுவது குறித்து கருத்து வெளியிட்ட மெஸ்ஸி தனது நாட்டினை உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஒன்றுக்கு கொண்டு வந்தது பெருமையாக இருப்பதாக கூறியிருந்ததோடு, அந்த இறுதிப் போட்டியினையும் சிறந்த வகையில் நிறைவு செய்ய எதிர்பார்த்திருப்பதாக கூறியிருந்தார்.

கால்பந்து உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு இந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டீன அணி பிரான்ஸ் அல்லது மொரோக்கோவினை எதிர்கொள்ளும் எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<