ThePapare சம்பியன் கிண்ணம் சென் ஜோசப் கல்லூரி வசம்

402

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் 2022 தொடரின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை 5 – 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட சென் ஜோசப் கல்லூரி அணியினர் சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டனர்.

ஏற்கனவே இடம்பெற்ற ஒரு அரையிறுதிப் போட்டியில் சென் ஜோசப் வீரர்கள் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியை 1-0 என வெற்றி கொண்டும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர்கள் 5-1 என்ற கோல்கள் கணக்கில் கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியை வீழ்த்தியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகினர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (13) மாலை கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெற்ற இறுதிப் போட்டி ஆரம்பமாகி முதல் 4 நிமிடங்களுக்குள் யாழ் வீரர்கள் போட்டியின் முதல் கோலைப் பெற்றனர். மத்திய களத்தில் இருந்து வழங்கப்பட்ட பந்தை பெற்ற செபஸ்டி அருல், பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி அணியை முன்னிலைப் படுத்தினார்.

எனினும், சிறந்த பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்ட சென் ஜோசப் வீரர்களுக்கு எதிரணியின் ஒரு திசையில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பின்போது உள்வந்த பந்தை பெதும் கிம்ஹான் ஹெடர் செய்து போட்டியை சமப்படுத்தினார்.

மீண்டும் முதல் பாதி நிறைவுரும் தருவாயில் மத்திய களத்தில் இருந்து தேஷான் துஷ்மிக்க வழங்கிய பந்துப் பரிமாற்றத்தை பெற்ற பெதும் கிம்ஹான், பந்தை கோல் எல்லைவரை கொண்டு சென்று கோல் காப்பாளரையும் தாண்டி பந்தை வேகமாக கோலுக்குள் செலுத்தினார்.

எனவே, முதல் பாதி நிறைவின்போது சென் ஜோசப் வீர்கள் 2-1 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றனர்.

தொடர்ந்த இரண்டாம் பாதியிலும் வேகத்தைக் குறைக்காமல் ஆடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு நிஷான்த் அடுத்த கோலைப் பெற்றுக் கொடுக்க, அவ்வணி போட்டியை சமப்படுத்தியது.

எனினும், போட்டியின் இறுதி 10 நிமிடங்களும் அனைவரையும் ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்தது. சென் ஜோசப் வீரர்கள் அடுத்தடுத்து மூன்று மேலதிக கோல்களை இறுதி 10 நிமிடங்களில் பெற, போட்டி நிறைவில் 5-2 என்ற கோல்கள் கணக்கில் சென் ஜோசப் வீரர்கள் வெற்றி பெற்று தொடரின் சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டனர்.

இதேவேளை, செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியை 5-0 என இலகுவாக வீழ்த்திய யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மூன்றாம் இடத்தைப் பெற்றது.

தொடரில் வழங்கப்பட்ட விருதுகள்

தங்க பாதணி – அண்டன் ஜெரோம் (புனித பத்திரிசியார் கல்லூரி)

தங்க கையுறை – ஆர்ணல்ட் (புனித பத்திரிசியார் கல்லூரி)

இறுதிப் போட்டியின் சிறந்த வீரர் – தேஷான் துஷ்மிக (சென் ஜோசப் கல்லூரி)

தொடரின் சிறந்த வீரர் – பெதும் கிம்ஹான் தேஷான் துஷ்மிக (சென் ஜோசப் கல்லூரி)  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<