உலகக் கிண்ணத்தை நடத்தும் கட்டார் ஆரம்பப் போட்டியில் தோல்வி

83

உலகக் கிண்ண கால்பந்து 2022 தொடரில் போட்டியை நடத்தும் கட்டார் ஆரம்பப் போட்டியில் ஈக்வடோரிடம் ஏமாற்றம் தரும் தோல்வியை சந்தித்தது.

அல் பைத் அரங்கில் நடைபெற்ற (20) ஆரம்பப் போட்டியின் 16ஆவது நிமிடத்திலேயே ஈக்வடோர் தனது முதல் கோலை புகுத்தியது. கட்டார் கோல்காப்பாளரின் தவறால் கிடைத்த பெனால்டி கிக்கை இன்னர் வலன்சியா கோலாக மாற்றினார். பின்னர் வலன்சியா 31 ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி மற்றொரு கோலை புகுத்த கட்டார் ரசிகர்கள் நிரம்பிய அரங்கு அமைதி கண்டது.

அல் அக்ஸாவை வீழ்த்தி யாழ் மத்தி இறுதிப் போட்டிக்கு தெரிவு

முன்னதாக, போட்டியின் ஆரம்பத்திலேயே வலன்சியா தலையால் முட்டி கோல் புகுத்தியபோதும் அது ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போட்டியில் ஈக்வடோர் ஆதிக்கம் செலுத்திய நிலையில் அரங்கில் இருந்த ரசிகர்கள் பலர் போட்டியின் பாதி நேரத்திலேயே வெளியேறியதோடு மீண்டும் போட்டியை காண திரும்பவில்லை. இதனால் இரண்டாவது பாதி ஆட்டம் பாதி காலியான அரங்கிலேயே நடைபெற்றது.

உலகக் கிண்ண போட்டியை நடத்தும் அணி என்பதால் இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதி பெற்ற கட்டார் உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் முதல் தொடர் இதுவாக இருந்தது.

இதன்படி போட்டியை நடத்தும் நாடு ஒன்று உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த முதல் சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.

வண்ணமயமான ஆரம்பம்

கட்டார் மற்றும் ஈக்வடோர் அணிகளுக்கு இடையிலான ஆரம்பப் போட்டி முன்னர் உலகக் கிண்ண போட்டி அட்டவணையில் இடம்பெறவில்லை. போட்டியை நடத்தும் அணி என்ற வகையில் கடந்த ஓகஸ்ட் மாதமே கட்டாருக்கு அரம்பப் போட்டி வழங்கப்பட்டது. போட்டியை நடத்தும் அணி ஆரம்பப் போட்டியில் ஆடும் வழக்கம் 2006 தொடக்கம் உலகக் கிண்ணத்தில் நீடித்து வருகிறது.

கட்டார் மற்றும் ஈக்வடோர் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டிக்கு 90 நிமிடங்களுக்கு முன்னதாக அல் பைத் அரங்கில் வண்ணமயமான ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. அமெரிக்க நடிகர் பிரீமன், கட்டார் நாட்டு யூடியுப் நட்சத்திரம் கானிம் அல் முப்தி இந்த நிகழ்வில் இடம்பெற்றதோடு, தொடரின் பாடலை தென் கொரிய பாடகர் ஜங் கூக் உடன் இணைந்து கட்டார் பாடகர் பஹத் அல் குபைசி பாடினர்.

போராடித் தோற்றது புனித பத்திரிசியார்; சென் ஜோசப் இறுதிப் போட்டியில்

சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் மற்றும் எகிப்து, துருக்கி மற்றும் அல்ஜீரிய ஜனாதிபதிகள், அதேபோன்று ஐ.நா செயலாளர் நாயகம் உட்பட பல உலகத் தலைவர்களும் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். 30 நிமிடங்கள் நீடித்த பிஃபா உலகக் கிண்ணத்தை உத்தியோகபூர்வமான ஆரம்பிக்கும் ஆரம்ப நிகழ்வு பிரமாண்ட வானவேடிக்கையுடன் முடிவுக்கு வந்தது.

மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடு ஒன்றில் முதல் முறை நடைபெறும் இந்த உலகக் கிண்ணம் பல பல சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுக்கு பின்னரே ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<