பங்களாதேஷ் வீரர்களுக்கு பயிற்சிகளை ஆரம்பிக்க BCB மறுப்பு!

85
Bangladesh cricketers

சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சிகளை மீண்டும் ஆரம்பிக்க பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் அனுமதி கோரிய போதும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பாதுகாப்பு காரணமாக அதனை நிராகரித்துள்ளது.

>> இங்கிலாந்துக்கு எதிரான மே.இ.தீவுகள் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் அணியின் அனுபவ வீரர்களில் ஒருவரான முஷ்பிகூர் ரஹீமும் இந்த கோரிக்கையை விடுத்திருந்த நிலையில், மைதானத்தில் போதுமான வசதிகளை மேற்கொள்ளாத காரணத்தால் கிரிக்கெட் சபை அவரின் கோரிக்கையை ஏற்கவில்லை.

முஷ்பிகூர் ரஹீமின் கோரிக்கை தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷாமுடீன் சவுத்ரி குறிப்பிடுகையில், 

“முஷ்பிகூர் ரஹீம் எம்மை தொடர்புக்கொண்டு அவரது தனிப்பட்ட பயிற்சிகளை மைதானத்தில் ஆரம்பிக்க வேண்டும் என கேட்டார். ஆனால், நாம் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு, வீட்டில் பயிற்சிகளை தொடருமாறு கூறினோம். பயிற்சி என்பது முக்கியம்.  ஆனால், வீரர்களின் பாதுகாப்பு அதைவிட முக்கியம். 

இவரை போன்று ஏனைய சில வீரர்களும் பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால், அனைவருக்கும் இதே பதிலைதான் நாம் கூறினோம். நாம் சுகாதார பாதுகாப்பு வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதனை இதுவரையும் நிறைவுசெய்யவில்லை” என்றார். 

பங்களாதேஷ் அரசாங்கம் கடந்த 31ம் திகதி ஊரடங்கை தளர்த்தியிருந்தது. கொவிட்-19 வைரஸ் காரணமாக பங்களாதேஷில் 746 பேர் உயிரிழந்துள்ளதுடன், 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“நாம் இப்போதுள்ள நிலைமை குறித்து ஆலோசிக்க வேண்டும். நாம் எமது நடவடிக்கைகளை திடீரென ஆரம்பிக்க முடியாது. ஏனைய பல நாடுகள் தங்களுடைய வழக்கமான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. நாமும் அதேபோன்று ஆரம்பிப்போம். ஆனால், அதற்கான தினத்தை சரியாக குறிப்பிட முடியாது. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். நடவடிக்கைகள் முழுமையடையும் பட்சத்தில் பயிற்சிகளை ஆரம்பிக்க முடியும். 

நாட்டின் நிலைமைகளை ஆராய்ந்த பின்னர், நாம் வீரர்களுக்கு அழைப்பு விடுப்போம். அதனை வீரர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். வீரர்களின் சுகாதாரத்தில் நாம் விளையாட முடியாது. பங்களாதேஷ் கிரிக்கெட்டின் முக்கியமான துறுப்புச்சீட்டு வீரர்கள் தான். ஐசிசியின் அறிவுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு அமைய ஏனைய சில நாடுகள் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளன. எனவே, கிரிக்கெட்டை மீண்டும் கொண்டுவருவதற்கு முன்னர், அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்” என நிஷாமுடீன் சவுத்ரி மேலும் குறிப்பிட்டார்.

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<