கலப்பு வடிவில் ஆசியக் கிண்ணத்தை நடத்த தயாராகும் பாகிஸ்தான்

Asia Cup 2023

2592

எதிர்வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை கலப்பு வடிவத்தில் (‘hybrid model’) நடத்த ஆசிய கிரிக்கெட் பேரவைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பரிந்துரை செய்துள்ளது.

2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான அரசியல் முறுகல் நிலை காரணமாக குறித்த தொடரில் இந்திய அணி பங்கேற்காது எனவும், இதனால் பொதுவான இடத்தில் ஆசியக் கிண்ணத்தை நடத்த வேண்டும் எனவும்  பிசிசிஐ அறிவித்திருந்தது.

ஆனால் இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மறுப்பு தெரிவித்திருந்ததுடன், இந்திய அணி பாகிஸ்தான் வராவிட்டால் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி அதில் பங்கேற்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து இரு நாடுகளினதும் பங்கேற்புடன் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் ஆசியக் கிண்ணம் எங்கு நடைபெறவுள்ளது என்ற இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், 2023 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை கலப்பு வடிவத்தில் இரு நாடுகளில் நடத்துவதற்கான முன்மொழிவை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆசிய கிரிக்கெட் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளது.

இதன்படி பாகிஸ்தான் தனது ஆசிய கிண்ணப் போட்டிகளை சொந்த மைதானத்தில் ஆடும் என்பதோடு, இந்தியா தனது போட்டிகளை பொதுவான இடத்தில் ஆடும் என்று அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் நஜாம் சேத்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தியாவின் கோவாவில் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி கலந்து கொள்ளவுள்ள நிலையில், பாகிஸ்தானில் ஆசியக் கிண்ணத்தை நடத்துவதற்கான ஒரு முடிவு கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக நஜீம் சேத்தி நம்பிக்கை தெரிவித்தார்.

‘2025 சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறும்போது இந்திய அணி இங்கு வந்து விளையாடும் என்று நம்புகிறோம். அதுவரை ஆசியக் கிண்ணத்துக்கான இந்திய அணி ஆடுகின்ற போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்தவும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இந்தியா சென்று ஆடவும் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எமது அரசு இந்தியாவுடன் விளையாடுவதற்கு எந்தவித தடையையும் போடவில்லை. ஆனால், இப்போதைக்கு பொதுவெளியில் நிலவும் கருத்து எங்களுக்குத் தேவையில்லை. எமக்கு நிதி ரீதியாக சொந்தக் காலில் நிற்க முடியும். ஆகவே இந்தியாவுடன் மரியாதையுடன் கிரிக்கெடடை மட்டும் ஆட விரும்புகிறோம். நாங்கள் தொடர்ச்சியாக ஆசிய கிரிக்கெட் பேரவையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.

ஆசியக் கிண்ணத்தில் இந்தியா ஆடுகின்ற போட்டிகளை நாங்கள் பொதுவான இடத்தில் நடத்த முடிவெடுப்பதுபோல் இந்தியாவும் ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகளின்போது பாகிஸ்தான் போட்டிகளை பொதுவான இடங்களுக்கு மாற்ற வேண்டும். இந்த கலப்பு வடிவத்தை இந்தியாவும் கடைப்பிடிக்கலாமே. எங்கள் நிலைப்பாடு என்னவெனில், எல்லாம் ஒருதலைபட்சமாக ஒரு நாட்டு சார்பாக செல்லக் கூடாது என்பதே.

கடந்த காலங்களில் இங்கு பாதுகாப்பு பிரச்சினைகள் இருந்தது. ஆம், அது உண்மையே. ஆனால் இப்போது இல்லை. இப்போது பாகிஸ்தானில் விளையாடாமல் இருப்பதற்கு இந்தியாவின் சாக்குப் போக்கு என்ன?’ என்று நஜாம் சேத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் முன்மொழியப்பட்டுள்ள இந்தப் பரிந்துரைக்கு ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா, பாகிஸ்தான் இதுவரை பதிலளிக்கவில்லை. இதனிடையே, செலவுகளை குறைப்பதற்காக இம்முறை ஆசியக் கிண்ணத்தை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு ஆசிய கிரிக்கெட் பேரவை விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கை அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்தில் குறித்த தொடரை நடத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆறு அணிகள் பங்கேற்கவுள்ள இம்முறை ஆசியக் கிண்ணத்தில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷுடன் தகுதிகாண் போட்டி மூலம் மேலும் ஓர் அணி தேர்வு செய்யப்படவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<