ஜெர்மனி, பெல்ஜியம் வெளியேற்றம்; நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது ஜப்பான், மொரோக்கோ

FIFA World cup 2022

286

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பெரும் அதிர்ச்சியாக ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் அணிகள் ஆரம்ப சுற்றுடனேயே வெளியேறின. மொரோக்கோ மற்றும் ஜப்பான் அணிகள் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளன. உலகக் கிண்ணத்தில் பெரும் அதிர்ச்சிகளை தந்த 12ஆம் நாள் நடைபெற்ற நான்கு போட்டிகளின் முடிவுகள் வருமாறு,

 ஜெர்மனிக்கு அதிர்ச்சி

கொஸ்டாரிகாவுக்கு எதிரான E குழுவுக்கான போட்டியில் 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியபோதும் நான்கு முறை உலக சம்பியனான ஜெர்மனி ஆரம்ப சுற்றிலேயே உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியது.

பிரான்ஸ் அதிர்ச்சித் தோல்வி; மேலும் 4 அணிகள் அடுத்த சுற்றில்

இதே குழுவில் நடந்த மற்றப் போட்டியில் ஜப்பான் அணி ஸ்பெயினை வீழ்த்தியதை அடுத்தே ஜெர்மனிக்கு இந்த நிலை ஏற்பட்டது.

அல் பைத் அரங்கில் இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை (02) அதிகாலை நடைபெற்ற போட்டியின் முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தபோதும் கொஸ்டாரிக்கா இரண்டாவது பாதியில் இரண்டு கோல்களை பெற்று முன்னேறியதால் ஜெர்மனி நெருக்கடியை சந்தித்திருந்தது.

இதில் 70ஆவது நிமிடத்தில் கொஸ்டரிக்கா பெற்ற கோல் ஜெர்மனி வழங்கிய ஓன் கோலாக மாறியது. எனினும் ஜெர்மனி கடைசி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று கோல்களை பெற்று போட்டியில் வெற்றியீட்ட முடிந்தது.

இதன்படி ஜெர்மனி தொடர்ச்சியாக இரண்டாவது உலகக் கிண்ணத்திலும் முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. ஜெர்மனி E குழுவில் மூன்றாவது இடத்தையே பிடித்தது.

இந்தப் போட்டியில் ஸ்டபனி பிரப்பார்ட் நடுவராகவும் நியுசா பக் மற்றும் கரன் டயஸ் துணை நடுவர்களாகவும் செயற்பட்டு ஆடவர் உலகக் கிண்ண வரலாற்றில் முழுமையாக பெண்கள் நடுவர்களாக செயற்பட்ட முதல் ஆட்டமாக பதிவானது.

 ஜப்பான் முன்னேறியது

ஸ்பெயினுக்கு எதிராக 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய ஜப்பான் அணி உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த ஸ்பெயின் E குழுவில் ஜெர்மனியுடன் 4 புள்ளிகளை பகிர்ந்துகொண்டபோதும் கோல் வித்தியாசத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

கலீபா சர்வதேச அரங்கில் இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை (02) அதிகாலை நடந்த போட்டியின் 11ஆவது நிமிடத்திலேயே அல்வாரோ மொரடா தலையால் முட்டி பெற்ற கோல் மூலம் ஸ்பெயின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது.

உலகக் கிண்ண நொக் அவுட்; இங்கிலாந்து–செனகல், நெதர்லாந்து–அமெரிக்கா மோதல்

ஏற்கனவே ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஜப்பானுக்கு அடுத்த சுற்று போட்டிக்கு முன்னேற இந்த ஆட்டத்தை சமநிலை செய்தால் போதும் என்ற நிலையில் ஜப்பான் அணி ரிட்சு டவோ மூலம் 48 ஆவது நிமிடத்தில் பதில் கோல் திருப்பியது.

ஸ்பெயின் சுதாகரிப்பதற்கு முன்னரே மூன்று நிமிடங்களில் இரண்டாவது கோலையும் ஜப்பான் புகுத்தியது. எதிரணி கோல் கம்பத்திற்கு மிக அருகில் காரு மிடாமோ பரிமாற்றிய பந்தை அவோ தனகா வலைக்குள் தட்டிவிட்டு கோலாக மாற்றினார்.

எனினும் இந்த கோல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மிடாமோ பந்தை பெறுவதற்கு முன் அது எல்லைக்கு வெளியில் செல்லவில்லை என்பதை வீடியோ ஆய்வு அதிகாரிகள் உறுதிப்படுத்த இரண்டு நிமிடங்களை எடுத்துக்கொண்டனர்.

இந்த வெற்றியுடன் ஜப்பான் அணி E குழுவில் முதலிடத்தை பெற்று நொக் அவுட் சுற்றுக்கு முன்னெறியது. ஜப்பான் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறுவது இது நான்காவது முறையாகும். எனினும் அந்த அணி அதற்கு மேல் முன்னேற்றம் கண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி ஜப்பான் அணி நொக் அவுட் சுற்றில் எதிர்வரும் திங்கட்கிழமை (05) குரோஷியாவை எதிர்கொள்ளவுள்ளதோடு அதே தினம் ஸ்பெயின் அணி காலிறுதிக்காக மொரோக்கோவுடன் பலப்பரீட்சை நடத்தும்.

 வெளியேறியது பெல்ஜியம்

குரோஷியாவுக்கு எதிரான F குழுவுக்கான போட்டியை கோலின்றி சமநிலை செய்ததை அடுத்து உலகின் இரண்டாம் நிலை அணியான பெல்ஜியம் உலகக் கிண்ணத்தின் ஆரம்ப சுற்றுடன் வெளியேறியது.

பெல்ஜியம் மக்களால் தமது “பொற்கால கால்பந்து அணி” என்று அழைக்கப்பட்ட பெல்ஜியம் அணி அஹமது பின் அலி அரங்கில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற போட்டியில் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

போர்த்துக்கல், பிரேசில் உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றில்

இரு அணிகளும் இலக்கை நோக்கி ஒரு உதையைக் கூட செலுத்தாத நிலையில் முதல் பாதி ஆட்டம் முடிவுற்றது. இரண்டாவது பாதியில் பதில் வீரராக வந்த ரெமெலு லுகாகு குரோஷியாவுக்கு எதிரான தாக்குதல் ஆட்டத்தை ஆடியபோதும் அவரால் ஒரு கோலை கூட செலுத்த முடியாமல்போனது.

இதன்போது அவர் நான்கு வாய்ப்புகளை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்தப் போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய நெருக்கடியுடன் களமிறங்கிய பெல்ஜியம் F குழுவில் 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

கடந்த முறை உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய குரோஷியா இந்தப் போட்டியை சமநிலை செய்ததன் மூலம் தனது குழுவில் ஐந்து புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பெற்று நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

 நொக் அவுட் சுற்றில் மொரோக்கோ

கனடாவுக்கு எதிராக 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டிய மொரோக்கோ அணி F குழுவில் முதலாம் இடத்தை பிடித்து 36 ஆண்டுகளில் முதல் முறையாக உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.

மொரோக்கோ வரலாற்று வெற்றி; ஸ்பெயினை சமன் செய்தது ஜெர்மனி

கடைசியாக 1986 ஆம் ஆண்டு 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறிய மொரோக்கோ இம்முறை கடந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குரோஷியா, உலகின் இரண்டாம் நிலை அணியான பெல்ஜியத்தை பின்தள்ளியமை குறிப்பிடத்தக்கது.

அல் துமாமா அரங்கில் வியாழக்கிழமை (01) நடந்த போட்டியின் நான்காவது நிமிடத்திலேயே ஹகிம் சியெச் மொரோக்கோவுக்காக முதல் கோலை புகுத்தினார். கனடா கோல் காப்பாளரின் பெரும் தவறால் அவரால் வெற்று வலைக்குள் பந்தை செலுத்த முடிந்தது.

தொடர்ந்து 23ஆவது நிமிடத்தில் யூசப் அந்நசிரி மொரோக்கோவுக்காக இரண்டாவது கோலை பெற்றார். நயெப் அகுவெர்ட்டின் ஓன் கொலினால் முதல் பாதி முடிவதற்குள் கனடாவால் கோல் ஒன்றை பதிவு செய்ய முடிந்தது.

இரண்டாவது பாதியில் கோல்கள் பெறப்படாத நிலையில் மொரோக்கோவால் வெற்றியை உறுதி செய்ய முடிந்தது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<