போர்த்துக்கல், பிரேசில் உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றில்

1368

புரூனோ பெர்னாண்டஸின் இரட்டை கோலுடன் உருகுவேயுக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய போர்த்துக்கல் அணியும், சுவிட்சர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்ட பிரேசில் அணியும் பிபா உலகக் கிண்ணத்தின் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.

நவம்பர் 28ஆம் திகதி இடம்பெற்ற போட்டிகளின் சுருக்கத்தை பார்ப்போம்.

பெர்னாண்டஸின் இரட்டை கோலுடன் போர்த்துக்கல் வெற்றி

லுசைல் அரங்கில் இலங்கை நேரப்படி செவ்வாய் (29) அதிகாலை நடைபெற்ற H குழுவுக்கான போட்டியின் முதல் பாதியில் போர்த்துக்கல் 70 வீதம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும் உருகுவேயின் ரொட்ரிகோ பென்டன்கியு 32 ஆவது நிமிடத்தில் மேற்கொண்ட கோல் முயற்சி தவறியது.

எனினும் 54ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைடட் மத்திய கள வீரர் பெர்னாண்டஸ் இழுபறியை முடிவுக்குக் கொண்டுவந்து போர்த்துக்கல்லை முன்னிலை பெறச் செய்தார்.

பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து அவர் உதைத்த பந்து உயரச் சென்று ரொனால்டோவின் தலையில் பட்டும் படாமலும் கோலாக மாறியது. இதன்போது ஆரம்பத்தில் ரொனால்டோவே கோலுக்காக கொண்டாடியபோதும் 10 நிமிடங்களின் பின் அது பெர்னாண்டோவின் கோல் என பிஃபா அறிவித்தது.

தொடர்ந்து பெனால்டி பகுதியில் உருகுவே வீரர் மரியோ கிமனஸ்ஸின் கையில் பந்து பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மேலதிக நேரத்தில் போர்த்துக்கல்லுக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை பெர்னாண்டஸ் கோலாக மாற்றினார்.

போர்த்துக்கல் உலகக் கிண்ண தொடரில் இரு குழுநிலை போட்டிகளில் தொடர்ச்சியாக வெல்வது இது மூன்றாவது முறையாகவும். கடந்த இரு சந்தர்ப்பங்களிலும் அந்த அணி அரையிறுதி வரை முன்னேறியது.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த உருகுவே அணி தனது குழுவில் ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. எனினும் அந்த அணி வெள்ளிக்கிழமை (02) நடைபெறும் கானா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியீட்டி போர்த்துக்கல் தென் கொரியாவை வீழ்த்தினால் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற முடியும்.

நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்

கசிமிரோவின் கடைசி நேர கோலின் உதவியோடு சுவிட்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரேசில் அணி உலகக் கிண்ண 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.

கட்டாரின் 974 அரங்கில் திங்கட்கிழமை (28) நடந்த போட்டியில் கணுக்கால் காயத்துக்கு உள்ளாகி இருக்கும் நட்சத்திர வீரர் நெய்மார் இன்றியே பிரேசில் அணி களமிறங்கியது. அந்த அணி முதல் பாதியில் மந்தமாகவே ஆடியது.

எனினும் 66ஆவது நிமிடத்தில் வின்சியஸ் ஜூனியர் பந்தை எதிரணி கோல் பகுதிக்குள் எடுத்துச் சென்று சுவிஸ் கோல் காப்பளர் யான் சொம்மரை கடந்த போதும் அது ஓப் சைட் என அனுமதிக்கப்படவில்லை.

எவ்வாறாயினும் போட்டியின் 83ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைடட் மத்திய கள வீரரான கசிமிரோ பிரேசிலுக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். கோனர் திசையில் இருந்து வினிசியஸ் பரிமாற்றிய பந்தை ரொட்ரிகோ முன்னோக்கி தட்டிவிட மின்னல் வேகத்தில் கசிமிரோ கோலை நோக்கி செலுத்தினார்.

சுவிட்சர்லாந்து இந்தப் போட்டியில் எதிரணிக்கு அதிக கோல்களை விட்டுக்கொடுக்காத போதும் பிரேசிலுக்கு ஈடுகொடுத்து ஆடத் தவறியது.

பிரேசில் அணி உலகக் கிண்ண தொடர்களில் 1998 தொடக்கம் குழுநிலை போட்டிகளில் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல் இரு போட்டியிலும் வெற்றியீட்டி இருக்கும் பிரேசில் G குழுவில் ஆறு புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து நடப்புச் சம்பியன் பிரான்ஸுக்கு அடுத்து நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

பரபரப்பான கெமரூன்செர்பிய போட்டி 6 கோல்களுடன் சமன்

கெமரூன் மற்றும் செர்பிய அணிகளுக்கு இடையிலான பரபரப்பான உலகக் கிண்ண G குழு போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

அல் ஜனூப் அரங்கில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற போட்டியில் கெமரூன் அணி 29ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தி முன்னிலை பெற்றபோதும் செர்பியா முதல் பாதியின் மேலதிக நேரத்தில் அடுத்தடுத்து இரு கோல்களை பெற்றது.

பின்னர் 53ஆவது நிமிடத்தில் செர்பியா மற்றொரு கோலையும் புகுத்த அந்த அணி 3-1 என வலுவான முன்னிலையை பெற்றது.

என்றாலும் கெமரூன் வீரர்கள் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். 64ஆவது நிமிடத்தில் மேலதிக வீரராக அழைக்கப்பட்ட வின்சன் அபூபக்கர் கோல் புகுத்த அது ஆரம்பத்தில் ஓப்சைட் என அழைக்கப்பட்டபோதும் வீடியோ நடுவர் உதவியோடு கோல் என உறுதி செய்யப்பட்டது.

இரண்டு நிமிடங்கள் கழித்து பந்தை கடத்தி வந்த அபூபக்கர் அதனை எரிக் மக்சிமிடம் வழங்க அவர் அதனை கோலாக மாற்றினார்.

கெமரூன் அணி உலகக் கிண்ணத்தில் தொடர்ச்சியாக எட்டுப் போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையிலேயே இந்தப் போட்டியை சமநிலை செய்துள்ளது.

தற்போது G குழுவில் தலா ஒரு புள்ளியை பெற்றிருக்கும் இந்த இரு அணிகளும் வரும் வெள்ளிக்கிழமை (02) நடைபெறும் கடைசி குழுநிலை போட்டியில் வெற்றியீட்டினாலேயே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் கொரியாவை வீழ்த்தியது கானா

திருப்பங்கள் மற்றும் பரபரப்புடன் நடைபெற்ற உலகக் கிண்ண H குழு போட்டியில் தென் கொரியாவுக்கு எதிராக கானா 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

கட்டாரின் கல்வி நகர அரங்கில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற போட்டியில் மொஹமது சலிசா மற்றும் மொஹமது குத்தூஸின் கோல்கள் மூலம் கானா முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது.

எனினும் இரண்டாவது பாதியில் மூன்று நிமிட இடைவெளிக்குள் சோ குயி சுங் தலையால் முட்டி தென் கொரியாவுக்காக இரண்டு கோல்களை பெற்று 61 ஆவது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.

எனினும் அஜெக்ஸ் அணியின் முன்கள வீரரான மொஹமது குத்தூஸ் 68 ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை புகுத்தி கானாவின் வெற்றியை உறுதி செய்தார். எதிரணி பெனல்டி பகுதியில் யாரும் கவனிக்காமல் இருந்த குத்தூஸிடம் பந்து வந்தபோது அந்த வாய்ப்பை பயன்படுத்தியே கோல் திருப்பினார்.

உலகத் தரவரிசையில் 61 ஆவது இடத்தில் இருக்கும் கானா இம்முறை உலகக் கிண்ணத்தில் மிகக் கீழ் நிலையைக் கொண்ட அணியாக உள்ளது. எனினும் அந்த அணி தனது குழுவில் 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தென் கொரியா ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் இருக்கும் நிலையில் அந்த அணி தனது கடைசி குழுநிலை போட்டியில் தனது குழுவின் பலம்மிக்க அணியான போர்த்துக்கல்லை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (02) எதிர்கொள்ளவுள்ளது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<