பிரான்ஸ் அதிர்ச்சித் தோல்வி; மேலும் 4 அணிகள் அடுத்த சுற்றில்

FIFA World cup 2022

225

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் 11 ஆவது நாளான கடந்த புதன்கிழமை (30) C மற்றும் D குழுவுக்கான கடைசி போட்டிகள் நடைபெற்றன. இதன்மூலம் நொக் அவுட் போட்டிகளுக்கு ஆர்ஜன்டீனா, போலந்து, அவுஸ்திரேலிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. பிரான்ஸ் அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தாலும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு……   

போலந்துக்கு எதிராக ஆர்ஜன்டீனா ஆதிக்கம்

போலந்துக்கு எதிரான தமது உலகக் கிண்ண இறுதி குழுநிலை போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய ஆர்ஜன்டீனா C குழுவில் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டு நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதன்படி இலங்கை நேரப்படி வரும் ஞாயிற்றுக்கிழமை (04) அதிகாலை நடைபெறும் 16 அணிகள் சுற்றுப் போட்டியில் ஆர்ஜன்டீன அணி அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

கட்டாரின் 974 அரங்கில் கட்டாய வெற்றியை எதிர்பார்த்து இலங்கை நேரப்படி வியாழக்கிழமை (01) அதிகாலை களமிறங்கிய ஆர்ஜன்டீன அணி முதல் பாதியில் பெனால்டி வாய்ப்பை தவறவிட்டது.

போலந்து கோல்காப்பளரும் மெஸ்ஸியும் மோதிக் கொண்டதை அடுத்தே 39ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனாவுக்கு பொனால்டி வாய்ப்பு கிட்டியது. எனினும் மெஸ்ஸி உதைத்த பந்தை போலந்து கோல் காப்பாளர் தடுத்தார்.

முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தபோதும் ஆர்ஜன்டீனா முழு ஆதிக்கம் செலுத்தியது. இதனால் இரண்டாம் பாதி ஆரம்பித்த விரைவிலேயே மக் அலிஸ்டரின் கோல் மூலம் ஆர்ஜன்டீனா முன்னிலை பெற்றதோடு தொடர்ந்து 67ஆவது நிமிடத்தில் ஜூலியன் அல்வெரஸ் ஆர்ஜன்டீனா சார்பில் இரண்டாவது கோலையும் பெற்றார்.

மெஸ்ஸி உலகக் கிண்ணத்தில் ஆடும் 22ஆவது போட்டி இதுவாகும். இதன்மூலம் ஆர்ஜன்டீனா சார்பில் உலகக் கிண்ணத்தில் அதிக போட்டிகளில் ஆடிய நட்சத்திரம் டியாகோ மரடோனாவின் சாதனையை அவர் முறியடித்தார்.

போலந்து இந்தப் போட்டியில் தோல்வியுற்றபோதும் C குழுவில் மெக்சிகோவிடம் 4 புள்ளிகளை பகிர்ந்துகொண்ட நிலையில் குறைவான சிவப்பு மற்றும் மஞ்சள் அட்டைகளை பெற்ற அடிப்படையில் அந்த அணி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.

இதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நொக் அவுட் போட்டியில் போலந்து நடப்புச் சம்பியன் பிரான்ஸை எதிர்கொள்ளவுள்ளது.

வென்றும் வெளியேறியது மெக்சிகோ

சவூதி அரேபியாவுக்கு எதிரான C குழு போட்டியில் மெக்சிகோ அணி 2–1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியபோதும் அந்த அணியால் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியாமல்போனது.

லுசைல் அரங்கில் இலங்கை நேரப்படி வியாழக்கிழமை (01) அதிகாலை நடைபெற்ற போட்டியில் ஹென்ரி மார்டின் (47) மற்றும் லுவிஸ் சாவேஸின் (52) கோல்கள் மூலம் மெக்சிகோ அணி இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

மேலதிக நேரத்தில் சவூதி அரேபியா கோல் திருப்பியபோதும் மெக்சிகோவின் வெற்றி உறுதியானது.

எனினும் சம காலத்தில் நடந்த ஆர்ஜன்டீன மற்றும் போலந்து போட்டியில் போலந்து 0-2 என தோற்ற நிலையில் C குழுவில் இரண்டாவது அணியாக நொக் அவுட் சுற்றுக்கு முன்னெறுவதில் போலந்து மற்றும் மெக்சிகோவுக்கு இடையே இழுபறி ஏற்பட்டது. இரு அணிகளும் சரியாக 4 புள்ளிகளை பெற்றிருந்ததோடு விட்டுக்கொடுத்த கோல், பெற்ற கோல் மற்றும் கோல் வித்தியாசம் அனைத்தும் சமமாக இருந்ததால் நியாயமான ஆட்ட முறை அடிப்படையில் மெக்சிகோ அடுத்த சுற்றுக்கு முன்னேறும் தகுதியை இழந்தது.

இதில் மெக்சிகோ ஏழு மஞ்சள் அட்டைகளை பெற்ற நிலையில் போலந்து அதனை விட குறைவாக ஐந்து மஞ்சள் அட்டைகளை பெற்றது அந்த அணிக்கு சாதகமாக அமைந்தது.

மெக்சிகோ உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்று நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறாதது 1978க்கு பின்னர் இது முதல் முறையாகும்.

டென்மார்க்கிற்கு அதிர்ச்சி கொடுத்த ஆஸி.

டென்மார்க்கிற்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் பெரும் வெற்றியை ஈட்டிய அவுஸ்திரேலிய அணி 16 ஆண்டுகளில் முதல் முறையாக உலகக் கிண்ணத்தின் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.

அல் ஜனூப் அரங்கில் D குழுவுக்காக புதன்கிழமை (30) நடந்த போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற வெற்றி கட்டாயம் என்ற நிலையில் டென்மார்க் அணி ஆரம்பம் தொட்டு தாக்குதல் ஆட்டத்தை முன்னேடுத்தது. எனினும் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் பெற முடியவில்லை.

போட்டி சரியாக ஒரு மணி நேரத்தை தொடும்போது டென்மார்க் அணி எதிரணியின் எல்லையில் பந்தை தவறவிட ஆஸி. வீரர் மத்தியு லெக்கியின் காலுக்கு பந்து கிடைத்தது. அப்போது டென்மார்க் பக்கம் வீரர்கள் இருக்காத நிலையில் வேகமாக பந்தை எடுத்துச் சென்ற அவர் கோலாக மாற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலி அணி D குழுவில் பிரான்ஸுக்கு அடுத்து 6 புள்ளிகளைப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. உலகத் தரவரிசையில் 10ஆம் இடத்தில் இருக்கும் டென்மார்க் வெறும் ஒரு புள்ளியுடன் அந்தக் குழுவில் கடைசி இடத்தை பெற்று வெளியேறியுள்ளது.

அவுஸ்திரேலிய அணி இதற்கு முன்னர் 2006ஆம் ஆண்டே உலகக் கிண்ணத்தில் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.

பிரான்ஸை வீழ்த்தியும் ஏமாற்றம் கண்ட துனீசியா

பிரான்ஸில் பிறந்த வஹ்பி கஸ்ரியின் ஒற்றை கோலால் நடப்புச் சம்பியன் பிரான்ஸுக்கு அதிர்ச்சி கொடுத்த துனீசிய அணி உலகக் கிண்ணத்தின் தனது கடைசி குழுநிலை போட்டியில் வெற்றியீட்டியது.

எனினும் அவுஸ்திரேலிய அணி டென்மார்க்கை வீழ்த்தியதால் துனீசியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் தகுதியை இழந்தது.

கட்டாரின் கல்வி நகர அரங்கில் புதன்கிழமை (30) நடந்த D குழுவுக்கான மற்றைய போட்டியாகவே இந்த ஆட்டம் நடைபெற்றது. எனினும் பிரான்ஸ் ஏற்கனவே நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் ஒன்பது மாற்றங்களுடனேயே களமிறங்கியது.

முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவுற்ற நிலையில் 58ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் கோலெல்லையில் அந்த அணியின் பின்கள வீரர்கள் சூழ்ந்திருக்கும்போது கஸ்ரி அபார கோல் ஒன்றை புகுத்தினார்.

பிரான்ஸ் அணி கடைசி நேரத்திலேயே பதில் கோல் திருப்பும் முயற்சியாக தனது துருப்புச் சீட்டுகளான கிலியன் ம்பாப்பே மற்றும் கிரீஸ்மனை களமிறக்கியது. இதன்போது அன்டொய்னி கிரீஸ்மான் கடைசி நேரத்தில் பதில் கோல் திருப்பியபோதும் அது பின்னர் ஓப் சைட் கோல் என நிராகரிக்கப்பட்டதை அடுத்து துனீசியாவின் வெற்றி உறுதியானது.

துனீஷியா ஆறு உலகக் கிண்ணத் தொடர்களில் பங்கேற்று பெறும் மூன்றாவது வெற்றி இதுவாகும். அந்த அணி மற்றும் அரங்கில் இருந்த அதரவாளர்கள் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய நம்பிக்கையோடு ஆரம்பத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோதும் டென்மார்க் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சம காலத்தில் நடந்த போட்டியில் தமக்கு பாதகமான முடிவு கிடைத்திருப்பதை அறிந்து ஏமாற்றம் அடைந்தனர்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<