உலகக் கிண்ண நொக் அவுட்; இங்கிலாந்து–செனகல், நெதர்லாந்து–அமெரிக்கா மோதல்

FIFA World cup 2022

155

உலகக் கிண்ண கால்பந்து 2022 தொடரின் ஆரம்ப சுற்றில் அணிகள் மோதும் விறுவிறுப்பான கடைசி போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இதன் A குழுவின் கடைசி இரு போட்டிகளிலும் நெதர்லாந்து மற்றும் செனகல் அணிகள் வெற்றியீட்டியதோடு B குழுவில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அணிகள் வெற்றியீட்டி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு.

ஈரானை வீழ்த்தியது அமெரிக்கா

ஈரானுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய அமெரிக்கா உலகக் கிண்ணத்தின் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.

இதன்மூலம் 2002ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறை காலிறுதிக்கு முன்னேறும் எதிர்பார்ப்புடன் வரும் சனிக்கிழமை (03) நெதர்லாந்துடன் நொக் அவுட் போட்டியில் அமெரிக்கா ஆடவுள்ளது.

அல் துமாம அரங்கில் இலங்கை நேரப்படி புதன்கிழமை (30) அதிகாலை நடைபெற்ற போட்டியின் 38ஆவது நிமிடத்தில் செர்கினோ டெஸ்ட் தலையால் முட்டிய பந்தை எதிரணி கோல் கப்பந்துக்கு அருகில் ஓடிவந்து வலையில் தட்டிவிட்டார் கிறிஸ்டியன் புலுசிக்.

இதன்மூலம் அமெரிக்கா முன்னிலை பெற்றபேற்ற நிலையில் கோல் பெறும் முயற்சியின் போது ஈரான் கோல் காப்பளருடன் மோதியதில் புலுசில் காயமடைந்து வெளியேறினார்.

இந்த வெற்றியுடன் அமெரிக்க B குழுவில் ஐந்து புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது. 3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட ஈரான் உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியது.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் நீடிக்கு பதற்றமான அரசியல் சூழல் காரணமாக இந்தப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னரே ஆட்டம் சூடுபிடித்திருந்தது. ஈரான் 1998இல் பிரான்சில் உலகக் கிண்ணத்தில் அமெரிக்காவை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி வெளியேற்றியதற்கு அமெரிக்கா தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

இங்கிலாந்து முன்னேற்றம்

வேல்ஸ் அணிக்கு எதிரான B குழு போட்டியில் 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி அந்தக் குழுவில் 7 புள்ளிகளுடன் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.

இதன்மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெறும் நொக் அவுட் போட்டியில் இங்கிலாந்து அணி செனகலை எதிர்கொள்ளவுள்ளது.

அஹமது பின் அலி அரங்கில் இலங்கை நேரப்படி புதன்கிழமை (30) அதிகாலை நடைபெற்ற போட்டியின் முதல் பாதியில் கோல்கள் பெறப்படாதபோதும் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து 50, 51 ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை புகுத்தியதோடு 68 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலையும் புகுத்தியது. இதன்போது மர்கஸ் ரஷ்போர்ட் இரட்டை கோல் புகுத்தினார்.

1984 தொடக்கம் இங்கிலாந்தை தோற்கடிக்காத வேல்ஸ் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற நான்கு கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியுடனேயே விளையாடியது. எனினும் எனினும் அந்த அணியால் ஒரு கோல்கூட பெற முடியாத நிலையில் உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியது.

ஈக்வடோரை வீழ்த்தி செனகல் நொக் அவுட் சுற்றில்

ஈக்வடோர் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய செனகல் அணி உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் நொக் அவுட் சுற்றுக்கு தெரிவானது. செனகல் அணி உலகக் கிண்ணத்தில் அடுத்த சுற்றுக்கு தெரிவாவது வரலாற்றில் இது இரண்டாவது முறையாகும்.

கலீபா சர்வதேச அரங்கில செவ்வாய்க்கிழமை பரபரப்பாக நடந்த போட்டியின் 70ஆவது நிமிடத்தில் செனகல் அணித்தலைவர் கலிடோ குலிபாலி அந்த அணிக்கு வெற்றி கோலை புகுத்தினார்.

போட்டியின் முதல் பாதியிலேயே இஸ்மைலா சார் பெனால்டி கோல் பெற்று செனகல் முன்னிலை பெற்றபோதும் 67ஆவது நிமிடத்தில் செனகல் சார்பில் மொயிசஸ் கொய்சிடொ பதில் கோல் திருப்பியதால் விறுவிறுப்பு அதிகரித்தது. எனினும் ஆபிரிக்க சம்பியனான செனகலுக்கு அதன் பின் 3 நிமிடங்களில் வெற்றி கோலை புகுத்த முடிந்தது.

A குழுவுக்கான இந்தப் போட்டியை சமநிலை செய்தாலேயே 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையிலேயே ஈக்வடோர் களமிறங்கியது.

செனகல் அணி இதற்கு முன்னர் 2002 ஆம் ஆண்டு தனது முதலாவது உலகக் கிண்ணத் தொடரிலேயே நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியபோது அந்த அணி காலிறுதி வரை சென்றது.

இந்நிலையில் இம்முறை அந்த அணி தனது நட்சத்திர வீரர் சாடியோ மானே காயம் காரணமாக உலகக் கிண்ணத்தில் அடாத நிலையிலேயே முன்னெற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டார் அணி ஏமாற்றம்

உலகக் கிண்ணத்தை நடத்து கட்டார் அணி தனது கடைசி போட்டியிலும் நெதர்லாந்திடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் தந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றியீட்டிய நெதர்லாந்து A குழுவில் முதலிடத்தை பிடித்தது.

அல் பைத் அரங்கில் செவ்வாய்க்கிழமை (29) நடந்த போட்டியில் கட்டார் அணி ஏற்கனவே உலகக் கிண்ணத்தில் இருந்து ஆரம்ப சுற்றுடனேயே வெளியேறிய நிலையிலேயே ஆடியது. எனினும் 26ஆவது நிமிடத்திலேயே கோடி கக்போ கோல்பெற்று நெதர்லாந்தை முன்னிலை பெறச் செய்தார். நெதர்லாந்தின் மூன்று குழுநிலை போட்டிகளிலும் கோடியே அந்த அணிக்காக முதல் கோலை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே டி ஜொங் மூலம் இரண்டாவது கோலையும் பெற்றது. இதன்மூலம் நெதர்லாந்து அணி உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னெற்றம் கண்டது.

உலகக் கிண்ணத்தில் மூன்று முறை இறுதிப் போட்டிவரை முன்னேறிய நெதர்லாந்து அணி 2014இல் மூன்றாம் இடத்தைப் பிடித்தபோதும் கடந்த முறை 2018 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியை நடத்திய கட்டாரின் தோல்வியானது உலகக் கிண்ணத்தை நடத்தும் அணி ஒன்று ஆரம்ப சுற்றி மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்திக்கும் முதல் சந்தர்ப்பமாக இருந்தது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<