இவ்வாரம் ஆரம்பமாகும் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடர்

871

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் 2018ஆம் ஆண்டின் எப்.ஏ. கிண்ண சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நாடெங்கிலும் இருந்து மொத்தம் 715 அணிகள் இம்முறை தொடரில் பங்கேற்பதோடு வட மாகாணத்தில் மாத்திரம் அதிகபட்சமாக 196 அணிகள் இடம்பெறுகின்றன.

இலங்கையின் மிகப் பழைமையான கழகங்களுக்கு இடையிலான நொக் அவுட் தொடரான எப்.ஏ. கிண்ணம் 56ஆவது தடவையாக இம்முறை நடைபெறவுள்ளது. தொடரின் முதல் நாளான எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

கொழும்பு கால்பந்து லீக் சார்பில் ஓல்ட் ரோயலிஸ்ட் விளையாட்டுக் கழகம் கொலொன்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி கொழும்பு CR & FC மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு கால்பந்து லீக் சார்பில் லைட் ஹவுஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் நியூ க்ரீன் லைட் விளையாட்டுக் கழகம் முதல் நாளில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி மட்டக்களப்பு வெபர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (22) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தேசிய கால்பந்து அணியில் மேலும் 3 வீரர்கள் இணைப்பு

ஆரம்பத்தில் லீக் மட்டத்தில் நடைபெறும் போட்டிகள் பின்னர் மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் நடைபெற்று இறுதி மட்ட போட்டிகளுக்கு அணிகள் தேர்வு செய்யப்படவுள்ளன. இதன்படி லீக் மட்டத்தில் 60 லீக்குகள் தேர்வு போட்டிகளில் பங்கேற்கும். இதன்போது ஒவ்வொரு லீக்குகளுக்குள்ளும் போட்டிகள் நடைபெறும்.

இதில் அதிகபட்சமாக மன்னார் கால்பந்து லீக்கில் 36 கழகங்கள் களமிறங்கியுள்ளன. தவிர, வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி கால்பந்து லீக்குகளில் தலா 33 அணிகளும், பரித்தித்துறையில் 19 அணிகள், வவுனியா 15 அணிகள், வலிகாமம் 18 அணிகள், வடமராச்சி 14 அணிகள், முல்லைத்தீவு 14 அணிகள் மற்றும் மடுமாந்தை 14 அணிகளும் பங்கேற்கின்றன.

கடந்த முறை கடைசி சுற்றுக்கு தேர்வாகி இருந்த யாழ்ப்பாணம் கால்பந்து லீக்கின் புனித நிகொலஸ் விளையாட்டுக் கழகம், சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் பாடும் மீன் விளையாட்டுக் கழகம் ஆகிய மூன்று அணிகளும் இம்முறை தொடரின் இறுதிக் கட்ட சுற்றுக்கு நேரடித் தகுதி பெற்றுள்ளன.

மறுபுறம் கிழக்கு மாகாணத்தில் இருந்தும் இம்முறை எப்.ஏ. கிண்ணத்தில் எட்டு கால்பந்து லீக் அடிப்படையில் ஆரம்ப சுற்றில் போட்டியிடுகின்றன. இதன்படி அந்த மாகாணத்தில் இருந்து 109 கழகங்கள் பங்கேற்கின்றன. இதில் அம்பாறையில் இருந்து அதிகபட்சமாக 21 அணிகள் லீக் மட்ட போட்டிகளில் விளையாடும்.

நகர கால்பந்து லீக்கில் உள்ள 16 அணிகளில் அதிகபட்சமாக பலம் மிக்க கொழும்பு கால்பந்து கழகம், சௌண்டர்ஸ், ஜாவா லேன், ரினௌன் அணிகள் இறுதிச் சுற்றுக்கு நேரடி தகுதி பெற்றுள்ளன.

லீக் மட்ட போட்டிகளில் ஒவ்வொரு லீக்கிலும் சம்பியனாகும் அணிகள் மாவட்ட மற்றும் மாகாண மட்ட போட்டிகளுக்கு தகுதிபெறும். லீக் மட்டத்தில் சம்பியனாகும் அணிக்கு மாவட்ட மற்றும் மாகாண மட்ட போட்டிக்கு தத்தமது லீக்கில் இருந்து மாத்திரம் வீரர்களை பதிவு செய்வதற்கு அனுமதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நடைபெறும் மாவட்ட மற்றும் மாகாண மட்ட போட்டிகளில் தேர்வாகும் 60 லீக் சம்பியன்களும் போட்டியிடவுள்ளன. இதன் மூலம் 32 அணிகள் இறுதிக் கட்ட போட்டிக்கு தகுதி பெறும்.

சாப் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் மாலைதீவுகளுடன் மோதவுள்ள இலங்கை

2017 எப்.ஏ. கிண்ண சம்பியனான இராணுவப்படை விளையாட்டுக் கழகத்துடன் அந்த தொடரின் இறுதிச் சுற்றுக்கு தேர்வான 32 அணிகளும் இம்முறை இறுதிக் கட்ட போட்டிக்கு நேரடி தகுதி பெற்றுள்ளன. இந்த 32 அணிகள் மற்றும் மாவட்ட மற்றும் மாகாண போட்டிகளில் இருந்து தேர்வாகும் 32 அணிகளுக்கும் இடையிலான இறுதிக் கட்ட போட்டிகள் குலுக்கல் முறையில் நடத்தப்படவுள்ளன.

எப்.ஏ. கிண்ண சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு இலங்கை குடியுரிமை அல்லாதோர் மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு கழகமும் பதிவு செய்யும் 25 வீரர்களில் இலங்கை பாதுகாப்பு படைகள் (இராணுவம், கடற்படை, விமானப்படை), பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் நிரந்தர அல்லது தற்காலிக (தன்னார்வ அடிப்படை) வீரர்கள் மூவரை அதிகபட்சமாக பதிவு செய்ய முடியும்.

கடந்த எப்.ஏ. கிண்ண இறுதிப் போட்டியில் இராணுவப்படை விளையாட்டுக் கழகம் ஜவா லேன் அணியை 5-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சம்பியனானமை குறிப்பிடத்தக்கது.