தேசிய கால்பந்து அணியில் மேலும் 3 வீரர்கள் இணைப்பு

400
3 more players

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு தெரிவாகிய வீரர்களின் விபரம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது ஷரித்த ரத்னாயக்க, அசிகுர் ரஹ்மான் மற்றும் சஜித் குமார ஆகிய 3 அனுபவ வீரர்கள் குறித்த குழாமில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரு மாத காலங்களிலும் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற தேர்வுகளின் பின்னர், தேசிய கால்பந்து அணியின் A குழாமிற்கு 30 வீரர்களும் B குழாமிற்கு 18 வீரர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இந்த இரு குழாமிலும் இதற்கு முன்னர் தேசிய அணியில் இடம்பெறாத அதிகமான புதுமுக இளம் வீரர்கள் உள்ளடங்கப்பட்டிருந்தனர்.  

புதுமுக வீரர்களுடன் இலங்கை தேசிய கால்பந்து அணி

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களை..

எவ்வாறிருப்பினும், குறித்த குழாமில் முக்கியமான சில வீரர்களின் பெயர் தவறவிடப்பட்டுள்ளதாகவும், அனுபவம் குறைந்த வீரர்களே அதிகம் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் கால்பந்து ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்திருந்தனர். எனினும் இளம் வீரர்களைக் கொண்ட ஒரு குழாமை நீண்ட கால இலக்குடன் கொண்டு செல்வதே பயிற்றுவிப்பாளர் நிசாம் பக்கீர் அலியின் திட்டமாக உள்ளது.

இந்நிலையில், இலங்கை இராணுவப்படை அணி வீரர்களான அசிகுர் ரஹ்மான், சஜித் குமார ஆகியோருடன் கொழும்பு கால்பந்து அணியில் புதிதாக இணைந்த பெலிகன்ஸ் அணியின் முன்னாளர் வீரர் ஷரித்த ரத்னாயக்கவும் தேசிய அணியின் A குழாமிற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த வீரர்கள் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டமை குறித்து ThePapare.com இற்கு கருத்து தெரிவித்த இலங்கை தேசிய கால்பந்து அணியின் முகாமையாளர் சுனில் சேனவீர்,

”அசிகுர் ரஹ்மான், சஜித் குமார மற்றும் ஷரித்த ரத்னாயக்க ஆகிய வீரர்களை நாம் புதிதாக தேசிய அணிக்குள் உள்வாங்கியுள்ளோம். எமது தேர்வுகளின் பின்னர் குறித்த வீரர்கள் தேசிய அணிக்கு பெயரிடப்பட்ட போதும், அவர்களது ஒழுக்க விடயங்கள் குறித்து சில முறைப்பாடுகள் இருந்தமையினால் இவ்வீரர்களை நாம் நிலுவையில் (Pending) வைத்திருந்தோம்.  

பின்னர் கால்பந்து சம்மேளனத்துடன் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் நிறைவாக இந்த 3 வீரர்களும் தற்பொழுது தேசிய அணிக்கு பெயரிடப்பட்டுள்ளனர்” என்றார்.   

சாப் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் மாலைதீவுகளுடன் மோதவுள்ள இலங்கை

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள தெற்காசிய..

இதில் இராணுவப்படை அணியின் பின்கள வீரரான அசிகுர் ரஹ்மான் இதற்கு முன்னர் தேசிய அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்டவராக உள்ளார். இறுதியாக இலங்கை அணி பங்கு கொண்ட காம்போடிய அணியுடனான நட்பு ரீதியிலான போட்டி மற்றும் ஒற்றுமைக் கிண்ணத் தொடர் (Solidarity cup) என்பவற்றில் விளையாடிய இவர், இலங்கை தேசிய அணிக்காக கோல்களையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.  

இராணுவப்படை அணியின் மற்றொரு வீரரான சஜித் குமாரவும் இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய மற்றொரு வீரராக உள்ளார். 25 வயதுடைய இவர், டயலொக் சம்பியன்ஸ் லீக் மற்றும் FA கிண்ணப் போட்டித் தொடர்களில் தனது அணிக்காக அதிக கோல்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் முன்னிலையில் இருந்த ஒருவர்.

கொழும்பு கால்பந்துக் கழகத்தில் இணையும் ஷரித்த

குருநாகல் பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகத்தின்…

புதிதாக இணைக்கப்பட்டுள்ள அடுத்த வீரரான ஷரித்த ரத்னாயக்க, இலங்கையில் உள்ள சிறந்த பின்கள வீரர்களில் ஒருவர். 26 வயதுடைய ஷரித்த பின்களத்தின் வலுதுபுறத்தில் ஆடும் வீரராக இருந்தாலும், அவர் இறுதியாக ஆடிய பெலிகன்ஸ் மற்றும் கிறிஸ்டல் பெலஸ் அணிகளுக்காக பின்களத்தின் மத்தியிலேயே ஆடியிருந்தார். இவரும் இலங்கை தேசிய அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்ட வீரராகவே உள்ளார்.   

தற்பொழுது தெரிவு செய்யப்பட்டுள்ள 3 வீரர்களும் நீண்ட காலம் தேசிய அணியில் அங்கத்துவம் பெற்றவர்களாக இருக்கின்றமை, இலங்கை அணியை மேலும் பலப்படுத்த உதவும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்களுக்கான பயிற்சிகள் இந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜுன் மாதத்தில் இருந்து வெளிநாடுகளிலும் இவர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<