உலக பாரா மெய்வல்லுனரில் தங்கப் பதக்கத்தை தவறவிட்ட தினேஷ்

World Para Athletics Championship 2023

108

பிரான்ஸில் நடைபெற்று வருகின்ற உலக பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பங்குகொண்ட தினேஷ் பிரியன்த வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.  

இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் பாராலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு தினேஷ் பிரியன்தவிற்கு கிடைத்தது.   

நேற்று (16) நடைபெற்ற ஆண்களுக்கான F46 ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட தினேஷ் பிரியன்த தனது 4ஆவது முயற்சியில் 65.38 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார். இந்த தூரப் பெறுதியானது இந்த ஆண்டின் அவரது தனிப்பட்ட சிறந்த தூரப் பெறுதியாகவும் பதிவாகியது 

எவ்வாறாயினும், 3 சென்றி மீட்டரினால் தங்கப் பதக்கம் வெல்கின்ற வாய்ப்பை அவர் தவறவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

இந்திய வீரர்களான அஜித் சிங்க் 65.41 மீட்டர் தூரத்தை எறிந்து புதிய உலக பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், ரின்கு 65.38 மீட்டர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தனர். 

முன்னதாக, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரிலும் தினேஷ் பிரியன்த வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இதன்மூலம் உலக பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தனது தொடர்ச்சியான 3ஆவது பதக்கத்தை வென்று அசத்தினார் 

கடந்த 2021இல் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்கில் 67.79 மீட்டர் தூரத்தை எறிந்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.    

இதேவேளை, ஆண்களுக்கான T46 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பிரதீப் சோமசிறி 7ஆவது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தார். போட்டியை நிறைவுசெய்ய 4 நிமிடங்கள் 0.50 செக்கன்களை எடுத்துக் கொண்ட அவர், குறித்த போட்டியில் தனது தனிப்பட்ட சிறந்த நேரப் பெறுமதியையும் பதிவு செய்தார். 

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<