4 – 0 என தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி

275
sl v asu

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் 137 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. தொடர் முழுவதும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இப்போட்டியிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை போல்டன் முந்திய போட்டிகளில் சிறப்பாக துடுப்பெடுத்தாடியது போன்று இப்போட்டியிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 113 ஓட்டங்களைப் பெற்றார். ஆரம்ப இணைப்பாட்டமாக 48 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரலிய மகளிர் அணியின் முதல் விக்கெட்டான வில்லாணியை ஜயங்கனி கைப்பற்றிய போதும் தொடர்ந்து ஏனைய விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியாமல் போனது.

தொடர்ந்து அவுஸ்திரேலிய மகளிர் அணியின் லென்னிங் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 43 ஓட்டங்களைப் பெற்றார். அவுஸ்திரேலிய மகளிர் அணி 120 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இரண்டாவது விக்கெட்டையும் இழந்தது.

எனினும் பின்னர் இணைந்த பெர்ரி மற்றும் போல்டன் ஜோடி 140 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று அவுஸ்திரேலிய அணி அதிக ஓட்டம் குவிக்க உதவினர். அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட அணியையும் பிரதிநிதித்துவப்படுத்திய பெர்ரி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 77 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன்படி அவுஸ்திரேலிய மகளிர் அணி நியமிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர் முழுவதும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 268 எனும் மாபெரும் ஓட்ட எண்ணிக்கையை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. முன்னைய போட்டிகளில் மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணிக்கு இப்போட்டியும் சவாலாகவே அமைந்தது.

மீண்டும் ஒருமுறை சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்க ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகள் தவறினர். ஹசினி பெரேரா 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும் வீரக்கொடி 33 ஓட்டங்களைப் பெற்று நம்பிக்கை கொடுத்தார். 2ஆவது விக்கெட்டுக்காக ஜயங்கனி உடன் ஜோடி சேர்ந்த வீரக்கொடி 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று இலங்கை அணியை தாங்கி நிறுத்தினர். ஜயங்கனி 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

எனினும் அதன் பின்னர் இலங்கை மகளிர் அணி வீராங்கனைகள் தொடர்ந்து ஆட்டம் இழந்தனர். சற்று நிலைத்து நின்ற குமாரிகாமியும்19 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இலங்கை மகளிர் அணி வெற்றிக்கான முழு வாய்ப்பையும் இழந்தது.

ஏனைய வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை  இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 45.5 ஓவர்களில் 131 ஓட்டங்களுக்கு இலங்கை மகளிர் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவுஸ்திரேலிய மகளிர் அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய பீம்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பறிக்கொண்டதோடு பெர்றேல் 3 விக்கெட்டைக் கைப்பற்றி அவுஸ்திரேலிய மகளிர் அணி போட்டியை வெல்ல உதவினார்.

137 ஓட்டங்களால் இறுதி ஒரு நாள் போட்டியையும் வென்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி தொடரை 4-0 என்று கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையில் T20 போட்டி ஒன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலிய மகளிர் அணி – 262/3(50)

போல்டன் 113, லென்னிங் 43, பெர்ரி 77

ஜயங்கனி 2/48

இலங்கை மகளிர் அணி – 131/10 (45.5)

ப்ரஸாதனி வீரக்கொடி 33, ஜயங்கனி 26, பீம்ஸ் 4/26

பெர்றேல் 3/17

schoolscricketcrawler