நியூசிலாந்து அணிக்கு திரும்பும் கேன் வில்லியம்சன்

ICC ODI World Cup 2023

126

இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் காயத்திலிருந்து மீண்டுள்ள கேன் வில்லியம்சன் இடம்பெறுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.  

ICCயின் 13ஆவது ஒருநாள் உலகக் கிண்ண தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தமது இறுதிக் குழாத்தை தயார்செய்து வருகின்றன 

இந்த நிலையில், இம்முறை ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்படுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்த ஆண்டு IPL தொடரின் முதல் லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியில் விளையாடிய கேன் வில்லியம்சனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் IPL தொடரிலிருந்து விலகினார். அதன்பின் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். IPL தொடர் மட்டுமல்லாது நியூசிலாந்துக்காகவும் அவரால் விளையாட முடியாத சூழல் உருவானது. காயத்திலிருந்து குணமடைந்து வரும் கேன் வில்லியம்சன் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்தது 

மேலும், காயத்திலிருந்து குணமடைந்து வரும் கேன் வில்லியம்சனுக்கு உலகக் கிண்ண அணியில் இடம்பிடிக்க நியூசிலாந்து அணி நிர்வாகம் இரண்டு வாரங்கள் அவகாசம் கொடுத்திருந்தது 

இந்த நிலையில், இம்முறை ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் இடம்பெறுவார் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியுள்ளார் 

இதுகுறித்து பேசிய கேரி ஸ்டெட், ”கேன் வில்லியம்சன் தனது காயத்திலிருந்து மீள தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு எங்களுடைய மருத்துவக் குழுவினரும் உதவிசெய்து வருகின்றனர். இதனால் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதில் எந்த சிரமமும் இருக்காது. அவரை உலகக் கிண்ணத் தொடருக்கான நியூசிலாந்து அணியில் தேர்ந்தெடுப்பதில் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது 

அதற்காக அவர் தயாராக கால அவகாசம் வைத்துள்ளார். அதனால் அவரை விரைவாக திரும்பி வர கட்டாயப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் ஏற்கனவே கூறியது போல், அவர் நீண்ட காலத்திற்கு நியூசிலாந்துக்காக கிரிக்கெட் விளையாட விரும்புவது மிகவும் நல்லது. ஏனெனில் உலகக் கிண்ணம் ஒரு குறுகிய போட்டித் தொடர் அல்ல. முதல் போட்டிக்கு முன்னதாக அடுத்த மாதம் அவரது முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.   

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான நியூசிலாந்து அணி செப்டம்பர் 11ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<