டெஸ்ட் தரவரிசையில் திமுத் கருணாரத்னவுக்கு மிகப்பெரிய முன்னேற்றம்

1534

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) நேற்று (15) வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலில், தென்னாபிரிக்க  அணிக்கெதிராக காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் அரைச் சதத்தை விளாசிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன தனது வாழ்நாளின் சிறந்த முன்னேற்றத்துடன் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

மூன்று நாட்களுக்குள்ளேயே தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியினை முடித்த இலங்கை

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள்…

காலியில் நடைபெற்ற இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி மற்றும் ஜமைக்காவில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகியவை கடந்த சனிக்கிழமை (14) நிறைவுக்கு வந்த நிலையில், புதிய டெஸ்ட் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதில் தென்னாபிரிக்க அணிக்கெதிரான காலி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சார்பில் நேர்த்தியான ஓட்டக்குவிப்பில் ஈடுபட்ட ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 158 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 60 ஓட்டங்களையும் பெற்றார்.

இதனால் அவர், டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 21 இடங்கள் முன்னேறி முதன்முறையாக பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.  அத்துடன் திமுத் கருணாரத்ன ஐசிசியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் இலங்கை அணியின் அதிகூடிய நிலையை பிடித்துள்ள இரண்டாவது வீரராகவும் பதிவாகியுள்ளார். இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் 740 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளதுடன், இவருக்கு அடுத்தப்படியாக திமுத் கருணாரத்ன 720 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஐசிசியின் தடைக்கு முகங்கொடுத்துள்ள தினேஷ் சந்திமால் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடப் போவதில்லை. இதனால், கருணாரத்ன இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதல் டெஸ்ட் போட்டியைப் போன்று சிறந்த  உத்வேகத்துடன் அடுத்த போட்டியிலும் ஓட்டங்களை குவிப்பாராயின், டெஸ்ட் தரவரிசையில் சந்திமாலை பின்தள்ளி, முன்னேறக்கூடிய வாய்ப்புள்ளது. அத்துடன், இலங்கை அணி சார்பில் அதிகூடிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் நிலையை பிடித்தவர் என்ற பெருமையையும் பெற்றுக்கொள்வார்.

சந்திமால், ஹதுருசிங்க, குருசிங்கவுக்கு ஐ.சி.சியினால் போட்டித் தடை

இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால்…

திமுத் கருணாரத்னவுடன், இலங்கை அணி சார்பில் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் எந்தவித முன்னேற்றங்களும் இல்லாத போதும், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சோபிக்கத் தவறிய குசல் மெண்டிஸ் 12வது இடத்திலிருந்து 7 இடங்கள் பின்தள்ளப்பட்டு 19வது இடத்தை பிடித்துள்ளார். காலி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 24 ஓட்டங்களை பெற்றிருந்த மெண்டிஸ், இரண்டாவது இன்னிங்ஸில் ஓட்டங்களின்றி ஏமாற்றியதனாலேயே இந்த பின்னடைவை சந்தித்துள்ளார்.

இலங்கை அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் திமுத் கருணாரத்ன முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், பந்து வீச்சாளர் வரிசையில் ரங்கன ஹேரத் இரண்டு இடங்கள் முன்னேற்றத்துடன் 10வது இடத்திலிருந்து 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவர் தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அத்துடன் இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த டில்ருவான் பெரேரா, பந்து வீச்சாளர்கள் வரிசையில் 7 இடங்கள் முன்னேறி, 25வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முன்னேற்றத்தை கண்டுள்ள டில்ருவான் பெரேரா, சகலதுறை வீரர்கள் பட்டியலிலும் 10வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

நான் ஒருபோதும் தூஸ்ரா பந்துவீசமாட்டேன் – தில்ருவன் பெரேரா

காலி டெஸ்ட் போட்டியின் முதலிரண்டு நாட்களிலும்..

அத்துடன், பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றுவதற்கு அணித்தலைவர் என்ற ரீதியிலிருந்து சிறப்பாக செயற்பட்ட ஜேசன் ஹோல்டர் சகலதுறை வீரர்கள் பட்டியலில் வாழ்நாள் முன்னேற்றத்தை கண்டுள்ளதுடன், டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் வரிசையிலும் முன்னேற்றம் கண்டுள்ளார். அவர் டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் வரிசையில் 13து இடத்தை பிடித்துள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 166 ஓட்டங்களால் வெற்றியை கண்டிருந்தது. இந்த போட்டியில் ஜேசன் ஹோல்டர் முதல் இன்னிங்ஸில் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், இரண்டாவது இன்னிங்ஸில் 59 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதன் காரணமாக 731 புள்ளிகளுடன் பந்து வீச்சாளர் தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி 13வது இடத்துக்கு முன்னேறிய ஹோல்டர், சகலதுறை வீரர்கள் வரிசையில் 354 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 5வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த முக்கிய முன்னேற்றங்களுடன், ஏனைய சில வீரர்களும் தங்களுடைய தரவரிசையில் மாற்றங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.  டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் மேற்கிந்திய தீவுகள் வீரர் கிரைக் ப்ராத்வைட் மூன்று இடங்கள் முன்னேற்றத்துடன் 13வது இடத்தையும், பங்களாதேஷின் சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன் இரண்டு இடங்கள் முன்னேறி 22வது இடத்தையும் பிடித்துள்ளதுடன், தென்னாபிரிக்க அணியின் எய்டன் மர்க்ரம் ஒரு இடம் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார்.

தொடர்ந்து பந்து வீச்சாளர் வரிசையில் ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா மற்றும் ஜேசன் ஹோல்டரை தவிற, பங்களாதேஷ் அணியின் மெஹிடி ஹசன் மூன்று இடங்கள் முன்னேறி 33வது இடத்திற்கு வந்துள்ளார்.

வட மாகாண வீரர் வியாஸ்காந்த் இலங்கை இளையோர் அணியில்

இந்திய இளையோர் அணிக்கெதிராக எதிர்வரும்…

இதேவேளை புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் தரவரிசையில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்தும் முதல் இடத்தை தக்கவைத்துள்ளதுடன், பந்து வீச்சாளர் வரிசையில் தென்னாபிரிக்க அணியின் ககிஸோ றபாடா முதலிடத்தையும், சகலதுறை வீரர்கள் வரிசையில் சகிப் அல் ஹசன் முதலிடத்தையும் தக்கவைத்துள்ளனர்.

மேலும், சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் டெஸ்ட் தரவரிசையில் பங்களாதேஷ் அணி 10 புள்ளிகளை இழந்து 9வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், 5 புள்ளிகளை மேலதிகமாக பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இலங்கை – தென்னாபிரிக்க தொடர் நடைபெற்று வரும் நிலையில், குறித்த இரண்டு அணிகளுக்கான தரவரிசையில் மாற்றங்கள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும் கொழும்பில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெறுமாயின், 2 புள்ளிகளை இழந்தாலும், அந்த அணியால் தரவரிசையில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். எனினும், இலங்கை அணி தொடரை 2-0 என கைப்பற்றினால் தென்னாபிரிக்க அணி புள்ளிகளை இழந்து, இங்கிலாந்து அணியுடன் 97 புள்ளிகளை பகிர்ந்துக்கொள்ள நேரிடும். அத்துடன் தென்னாபிரிக்க அணி டெஸ்ட் தரவரிசையில் பின்னடைவை சந்தித்து 5வது இடத்துக்கு பின்தள்ளப்படக்கூடிய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<