நான் ஒருபோதும் தூஸ்ரா பந்துவீசமாட்டேன் – தில்ருவன் பெரேரா

1214

காலி டெஸ்ட் போட்டியின் முதலிரண்டு நாட்களிலும் இரு அணிகளினதும் முதல் இன்னிங்சுகள் நிறைவுக்கு வந்தாலும், இன்னும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக மாறவில்லை. எனினும், அதற்காக நான் ஒருபோதும் தூஸ்ரா பந்துவீசுமாட்டேன் என இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் தில்ருவன் பெரேரா தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக காலியில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி தமது முதல் இன்னிங்ஸில் 126 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதில் இலங்கை அணி சார்பாக அபார பந்துவீச்சை மேற்கொண்ட தில்ருவன் பெரேரா 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார். இதில் அவர் டீன் எல்கர் (8), ஹஷிம் அம்லா (15), குயின்டன் டி கொக் (3) மற்றும் வேர்னன் பிளாந்தர் (18) ஆகிய வீரர்களின் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இறுதியாக கடந்த 2014 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணி இலங்கைக்கு சுற்றப்பயணம் மேற்கொண்டு விளையாடிய டெஸ்ட் தொடரிலும் தில்ருவன் பெரேரா 16 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இந்த நிலையில், போட்டியின் இரண்டாவது நாளான நேற்றைய தினம் (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தில்ருவன் பெரேரா கருத்து வெளியிடுகையில்,

வெற்றியை நோக்கி முன்னேறுகின்றது இலங்கை அணி

சுழல் வீரர்களின் சாகசம் மற்றும் திமுத் கருணாரத்னவின் சிறப்பாட்டம் என்பவற்றுடன், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் …

”வழமையைப் போன்று காலி ஆடுகளத்தில் காணப்படுகின்ற சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான தன்மையை இம்முறை காணமுடியாமல் உள்ளது. இதனால் தான் போட்டியின் முதலிரண்டு நாட்களிலும் துடுப்பாட்ட வீரர்களுக்கு பந்தை எதிர்கொள்ள இலகுவாக இருந்தது. எனினும், போட்டியின் கடைசி மூன்று நாட்களில் இதனைவிட சிறப்பாக சுழல் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகிறேன். ஆனாலும், தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்கள் எனது பந்துக்கு முகங்கொடுக்க தடுமாறியதால் விக்கெட்டுக்களை கைப்பற்ற முடிந்தது” என்றார்.

ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப பந்துவீச்சு பாணியை மாற்றியமைப்பதாகவும், அதற்காக தூஸ்ரா பந்துகளை வீசுவதில்லை எனவும் தில்ருவன் பெரேரா இதன்போது தெரிவித்தார். ரங்கன ஹேரத்துடன் இணைந்துதான் நான் எப்போதும் பந்துவீசுவேன். ஆனாலும் நான் ஒருபோதும் தூஸ்ரா பந்து வீசுவதில்லை. ஏனெனில் தூஸ்ரா பந்துவீசினால் இனிமேலும் கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இந்த ஆடுகளத்தில் இன்னும் அதிகமான ஓட்டங்களைக் குவிப்பதற்கு தான் நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். அதிலும் குறிப்பாக டூ ப்ளெசிஸ் மற்றும் அம்லா ஆகிய வீரர்கள் தொடர்பில் நாம் அதிக அவதானத்துடன் உள்ளோம் என்றார்.

பொதுவாக சுழல் பந்துவீச்சாளர்கள் தூஸ்ரா பந்துவீசும் போது அவர்களது கை 15 பாகைக்கு அதிகமாக மடிவதால் ஐ.சி.சியின் கழுகுப் பார்வை இந்த பந்துவீச்சாளர்கள் மீது அதிகம் செலுத்தப்படுகின்றது. இதனால் தூஸ்ரா பந்துவீசுபவர்கள் பந்தை வீசி எறிவதாக குற்றம் சுமத்தப்படுகின்றர். இதனால்தான் பெரும்பாலான சுழல் பந்துவீச்சாளர்கள் தூஸ்ரா பந்துவீசுவதில்லை. ஆனாலும், இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் போன்ற இயற்கையாகவே சுழல் பந்துவீசுகின்ற திறமையைக் கொண்ட வீரர்கள், தூஸ்ரா பந்துகளை வீசுவதில் எந்தவொரு விதிமுறை மீறல்களும் இடம்பெறுவது அரிது என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<