கண்டி அணிக்காக சதமடித்து அசத்திய ஓஷத பெர்னாண்டோ

National Super League Four Day Tournament 2022

187
Oshada Fernando

கண்டி – யாழ்ப்பாண அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற நெஷனல் சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் இரண்டாவது நாளில் ஓஷத பெர்னாண்டோ பெற்றுக்கொண்ட சதத்தின் உதவியுடன் யாழ்ப்பாண அணிக்கு எதிராக கண்டி அணி வலுவான ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் நெஷனல் சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (07) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது.

இந்த நிலையில், போட்டியின் இரண்டாவது நாளான இன்று 288 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த கண்டி அணி, 131.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 444 ஓட்டங்களை எடுத்தது.

கண்டி அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ஓஷத பெர்னாண்டோ சதம் கடந்து 107 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன், இம்முறை தேசிய சுபர் லீக்கில் தனது நான்காவது சதத்தைப் பதிவு செய்தார். அத்துடன், குறித்த சதத்தைப் பெற்றுக்கொள்ள 154 பந்துகளுக்கு முகங்கொடுத்து ஒரு சிக்ஸர் மற்றும் 12 பௌண்ட்ரிகளையும் அவர் விளாசியிருந்தார்.

அதேபோல, 56 ஓட்டங்களுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் சதத்தை நெருங்கியபோதும் 167 பந்துகளில் 86 ஓட்டங்களை பெற்ற நிலையில் திலும் சுதீரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்வரிசையில் களமிறங்கி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புலின தரங்க 42 ஓட்டங்களையும், நிரோஷன் டிக்வெல்ல 32 ஓட்டங்களையும் குவித்து கண்டி அணிக்கு வலுச்சேர்த்தனர்.

யாழ்ப்பாண அணியின் பந்துவீச்சில் 21 வயது இளம் சுழல்பந்து வீச்சாளரான திலும் சுதீர 4 விக்கெட்டுகளையும், தனன்ஞய டி சில்வர 3 விக்கெட்டுகளையும், ஜெப்ரி வெண்டர்சே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ்ப்பாண அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக நவோத் பரணவிதான மற்றும் நிஷான் மதுஷ்க ஆகிய இருவரும் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்காக 38 ஓட்டங்களை பெற்றிருந்த போது, லசித் எம்புல்தெனியவின் பந்துவீச்சில் நவோத் பரணவிதான 13 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

யாழ்ப்பாண அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 42 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட தேநீர் இடைவேளைக்காக போட்டி நிறுத்தப்பட்டது. எனினும், தொடர்ச்சியாக மழையினால் போட்டி தடைப்பட இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

யாழ்ப்பாண அணியின் துடுப்பாட்டத்தில் நிஷான் மதுஷ்க 24 ஓட்டங்களையும், சமிந்த பெர்னாண்டோ 2 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதேநேரம், கண்டி அணியின் பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார்.

நாளை (09) போட்டியின் மூன்றாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு அணி – 444/10 (131.2) – ஓஷத பெர்னாண்டோ 107, கமிந்து மெண்டிஸ் 87, கசுன் விதுர 71, கமில் மிஷார 56, புலின தரங்க 43, நிரோஷன் டிக்வெல்ல 32, திலும் சுதீர 4/86, தனன்ஞய டி சில்வா 3/96, ஜெப்ரி வெண்டர்சே 2/97

யாழ்ப்பாண அணி – 42/1(20) – நிஷான் மதுஷ்க 24*, நவோத் பரணவிதான 13, லசித் எம்புல்தெனிய 1/25

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<