யாழ்ப்பாண அணிக்கு சதம் அடித்து பலம் சேர்த்த சமிந்த

National Super League Four Day Tournament 2022

178

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டிகளின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (02) நிறைவுக்கு வந்தது.

இதில் யாழ்ப்பாணம் – கொழும்பு அணிகளுக்கு இடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண அணியின் சமிந்த பெர்னாண்டோ சதமடிக்க, அதே அணியின் நிபுன் மாலிங்க அரைச்சதத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதேபோன்று கொழும்பு அணியின் 22 வயது இளம் சுழல் பந்துவீச்சாளரான கவிக டில்ஷான் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் மிரட்டியிருந்தார்.

இதனிடையே, கண்டி – காலி அணிகளுக்கிடையில் பல்லேகலயில் நடைபெற்று வருகின்ற 2ஆவது அரை இறுதிப் போட்டிக்கு தொடர்ச்சியாக 2ஆவது நாளாக மழையினால் பாதிப்பு ஏற்பட்டது. எனினும், கண்டி அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 458 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

கொழும்பு எதிர் யாழ்ப்பாணம்

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இப்போட்டியில் சமிந்த பெர்னாண்டோவின் அபார சதம் மற்றும் நிபுன் மாலிங்கவின் அரைச்சதம் என்பவற்றின் உதவியுடன் கொழும்பு அணிக்கெதிரான போட்டியில் யாழ்ப்பாண அணி வலுவான ஓட்ட எண்ணிக்கைப் பெற்றுக்கொண்டது.

இந்தப்போட்டியின் மூன்றாவது நாளில் தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த யாழ்ப்பாண அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 339 ஓட்டங்களை எடுத்தது.

யாழ்ப்பாண அணியின் துடுப்பாட்டத்தில் 76 ஓட்டங்களுடன் இன்று துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த சமிந்த பெர்னாண்டோ சதம் கடந்து 123 ஓட்டங்களையும், பின்வரிசையில் களமிறங்கிய நிபுன் மாலிங்க அரைச்சதம் கடந்து 80 ஓட்டங்களையும் எடுத்து வலுச்சேர்த்தனர்.

இதில் சமிந்த பெர்னாண்டோ இம்முறை தேசிய சுபர் லீக்கில் 2ஆவது சதத்தைப் பூர்த்தி செய்ய, நிபுன் மாலிங்க முதல்தரப் போட்டிகளில் தனது முதலாவது அரைச்சதத்தைப் பெற்றுக்கொண்டார்.

கொழும்பு அணியின் பந்துவீச்சில் கவிக டில்ஷான் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து, 67 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு அணி, எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 158 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் பிரமோத் மதுவந்த 54 ஓட்டங்களையும், முதல் இன்னிங்ஸில் சதமடித்த குசல் மெண்டிஸ் 39 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

யாழ்ப்பாண  அணியின் பந்துவீச்சில் திலும் சுதீர 3 விக்கெட்டுகளையும், ஜெப்ரி வெண்டர்சே மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தினர்.

இதன்படி, 92 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகின்ற யாழ்ப்பாண அணி, இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

எனவே போட்டியின் கடைசி நாளான 4ஆம் திகதி யாழ்ப்பாண அணியின் வெற்றிக்கு இன்னும் 67 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்படுகின்றது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு அணி – 272 (110.5) – குசல் மெண்டிஸ் 114*, மாதவ வர்ணபுர 42, கிரிஷான் சன்ஜுல 39, திமுத் கருணாரத்ன 39, தனன்ஞய டி சில்வா 5/48, ஜெப்ரி வெண்டர்சே 2/59

யாழ்ப்பாண அணி – 339 (93.3) – சமிந்த பெர்னாண்டோ 123, நிபுன் மாலிங்க 80, நவோத் பரணவிதான 42, சதீர சமரவிக்ரம 32, நிஷான் மதுஷ்க 24, கவிக டில்ஷான் 6/124, நளின் பிரியதர்ஷன 2/68

கொழும்பு அணி – 158 (59.3) – பிரமோத் மதுவந்த 54*, குசல் மெண்டிஸ் 39, சிதார கிம்ஹான் 18, திலும் சுதீர 3/35, ஜெப்ரி வெண்டர்சே 2/22, தனன்ஞய டி சில்வா 2/55

யாழ்ப்பாண அணி – 25/0 (4) – நவோத் பரணவிதான 15*, நிஷான் மதுஷ்க 10*

கண்டி எதிர் காலி

கண்டி அணிக்கெதிராக தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் காலி அணி, இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவின்போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களைக் குவித்தது.

கண்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் இன்று தமது முதல் இன்னிங்ஸினைத் தொடர்ந்த கண்டி அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 458 ஓட்டங்களைக் குவித்தது.

கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் ஓஷத பெர்னாண்டோ (127), கமிந்து மெண்டிஸ் (108) சதமடித்து அசத்த, லஹிரு உதார அரைச்சதம் கடந்து 87 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தார்.

காலி அணியின் பந்துவீச்சில் தனன்ஞய லக்ஷான், டில்ஷான் மதுஷங்க மற்றும் அகில தனன்ஞய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கண்டி அணி, மழை காரணமாக மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவடையும் போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை எடுத்து காணப்படுகின்றது.

துடுப்பாட்டத்தில் பபசர வடுகே 68 ஓட்டங்களையும், சங்கீத் குரே 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி – 458 (125.3) – ஓஷத பெர்னாண்டோ 127, கமிந்து மெண்டிஸ் 108, லஹிரு உதார 87, கசுன் விதுர 45, சுமிந்த லக்ஷான் 3/65, தனன்ஞய லக்ஷான் 2/57, டில்ஷான் மதுஷங்க 2/83, அகில தனன்ஞய 2/85

காலி அணி – 147/1 (48.1) – பபசர வடுகே 68*, சங்கீத் குரே 44,

இதேவேளை, இலங்கை அரசாங்கத்தினால் நாளைய தினம் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால், இந்த இரண்டு போட்டிகளினதும் நான்காம் நாள் ஆட்டம் நாளை மறுதினம் (04) நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<