NSL தொடரில் சதமடித்து அசத்திய குசல், ஓஷத, கமிந்து

National Super League Four Day Tournament 2022

145
Dialog-SLC National Super League 2022

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (01) நிறைவுக்கு வந்தது.

இதில் யாழ்ப்பாண அணிக்கு எதிரான போட்டியில் கொழும்பு அணிக்காக குசல் மெண்டிஸும், காலி அணிக்கு எதிரான போட்டியில் கண்டி அணியின் ஓஷத பெர்னாண்டோவும், கமிந்து மெண்டிஸும் சதங்களைக் குவித்து பிரகாசித்திருந்தனர்.

அதேபோன்று, லஹிரு உதார கண்டி அணிக்காகவும், சமிந்த பெர்னாண்டோ யாழ்ப்பாண அணிக்காகவும் அமைரச்சதம் அடித்து வலுச்சேர்த்தனர்.

இதனிடையே, கொழும்பு அணிக்கு எதிரான போட்டியில் யாழ்ப்பாண அணியின் தனன்ஞய டி சில்வா 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், கொழும்பு அணியின் 22 வயதான இளம் வீரர் கவிக டில்ஷான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மிரட்டியிருந்தனர்.

கொழும்பு எதிர் யாழ்ப்பாணம்

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்தப் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று 224 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த கொழும்பு அணி, 110.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 272 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

அந்த அணிக்காக துடுப்பாட்டத்தில் பலம் சேர்த்த குசல் மெண்டிஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 114 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இம்முறை தேசிய சுபர் லீக்கில் அவரது முதல் சதம் இதுவாகும்.

யாழ்ப்பாண அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட தனன்ஞய டி சில்வா 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்த, திலும் சுதீர மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ்ப்பாண அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 70 ஓவர்களில் 204 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியிருந்தது.

யாழ்ப்பாண அணியின் துடுப்பாட்டத்தில் சமிந்த பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, கொழும்பு அணியின் பந்துவீச்சில் கவிக டில்ஷான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு அணி – 272 (110.5) – குசல் மெண்டிஸ் 114*, மாதவ வர்ணபுர 42, கிரிஷான் சன்ஜுல 39, திமுத் கருணாரத்ன 39, தனன்ஞய டி சில்வா 5/48, ஜெப்ரி வெண்டர்சே 2/59

யாழ்ப்பாணம் அணி – 204/8 (70) – சமிந்த பெர்னாண்டோ 76*, நவோத் பரணவிதான 42, சதீர சமரவிக்ரம 32, நிஷான் மதுஷ்க 24, கவிக டில்ஷான் 4/85, நளின் பிரியதர்ஷன 2/28

கண்டி எதிர் காலி

காலி அணிக்கெதிராக தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் கண்டி அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவின்போது 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 447 ஓட்டங்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸினைத் தொடர்ந்த கண்டி அணிக்கு ஓஷத பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸின் சதங்கள் மற்றும் லஹிரு உதாரவின் அரைச்சதங்களை குவித்து வலுச்சேர்த்தனர்.

கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் ஓஷத பெர்னாண்டோ சதம் கடந்து 127 ஓட்டங்களையும், அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் சதம் கடந்து 108 ஓட்டங்களையும், லஹிரு உதார ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இம்முறை தேசிய சுபர் லீக்கில் ஓஷத பெர்னாண்டோ தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்ய, கமிந்து மெண்டிஸ் 4ஆவது சதத்தைப் பெற்றார்.

காலி அணியின் பந்துவீச்சில் தனன்ஞய லக்ஷான், டில்ஷான் மதுஷங்க மற்றும் அகில தனன்ஞய ஆகிய வீரர்கள் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

இந்தப் போட்டியானது மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், தேநீர் இடைவேளையுடன் போட்டியை நிறைவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி – 447/8 (120.3) – ஓஷத பெர்னாண்டோ 127, கமிந்து மெண்டிஸ் 108, லஹிரு உதார 76*, கசுன் விதுர 45, தனன்ஞய லக்ஷான் 2/57, டில்ஷான் மதுஷங்க 2/77, அகில தனன்ஞய 2/85

இந்த இரண்டு போட்டிகளினதும் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.


>>
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<