டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்பை இழக்குமா இந்தியா?

England tour of India 2021

173
Can India qualify for ICC Test Championship
@ICC Twitter

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று (09) சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்திய கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலிய அணியை அவர்களது சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்தி தொடரையும் கைப்பற்றிய நிலையில் நாடு திரும்பியது. இவ்வாறான ஒரு நிலையில், சொந்த மண்ணில், இந்திய அணியை ஒரு டெஸ்ட் போட்டியில் வீழ்த்துவது இலகுவான விடயமல்ல. 

>> இரண்டாவது டெஸ்டிலிருந்து வெளியேற்றப்படும் சகிப் அல் ஹசன்!

இந்திய கிரிக்கெட் அணியை 2011ம் ஆண்டுக்கு முதல், அவர்களுடைய சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில், தோற்கடிக்க பல அணிகளால் இயன்ற போதிலும், 2011ம் ஆண்டுக்கு பின்னர், இந்திய அணியை அவர்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது சுலபமாக அமையவில்லை. 

சொந்த மண்ணில், 2011ம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 43 டெஸ்ட்  போட்டிகளில் விளையடியுள்ளது. இதில், இன்றைய இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்வியுடன் வெறும் 4 போட்டிகளில் மாத்திரமே தோல்வியடைந்துள்ளது.

குறிப்பாக இதற்கு முன்னர் இங்கிலாந்து அணி கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என வெற்றிக்கொண்டிருந்தது. இதன்பின்னர், 2017ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணி மஹாராஸ்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கொண்டது.  அதன்படி, கடந்த 10 வருடங்களில் இந்திய அணி தங்களுடைய சொந்த மண்ணில் நான்காவது டெஸ்ட் தோல்வியை சந்தித்துள்ளது. எனினும், இதுவரையிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக மாத்திரமே சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரொன்றை இழந்துள்ளது.

இவற்றுக்கு மத்தியில், தற்போது ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மோதல் அதிகரித்துள்ளது. அவுஸ்திரேலிய அணியானது, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை ஒத்திவைத்துள்ள நிலையில், நியூசிலாந்து அணி, ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. 

இந்தநிலையில், நியூசிலாந்து அணியுடன், இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்பினை இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் பெற்றுள்ளன. குறிப்பாக, இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையிலான இந்த தொடர், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது அணியை தீர்மானிக்கும்.

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் அதிகமான வாய்ப்பை இந்திய அணி பெற்றிருந்தது. எனினும், முதல் போட்டியின் தோல்வி காரணமாக, இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், இங்கிலாந்து அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. எனவே, இந்திய அணி தொடரை 2-1 என வெற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், 3-1 என வெற்றிபெறவேண்டும். இப்படி, வெற்றிபெற்றால் மாத்திரமே இந்திய அணியால் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறமடியும்.  

இங்கிலாந்து அணியை பொருத்தவரை, தொடரை குறைந்தது 3-0 என வெற்றிக்கொள்ள வேண்டும். அதேநேரம், 3-1 மற்றும் 4-0 என தொடரை வெற்றிக்கொண்டாலும், இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுக்கொள்ளும். எவ்வாறாயினும், இந்திய அணி தங்களுடைய சொந்த மண்ணில் இலகுவாக தொடர் தோல்வியை பெற்றுக்கொள்ளும் அணி இல்லை. 

எனவே, இங்கிலாந்து அணி ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

>> இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட் தடுப்பூசி?

அவுஸ்திரேலிய அணியானது, தென்னாபிரிக்க தொடரை ஒத்திவைத்திருந்தாலும், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்புள்ளது. இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையிலான தொடர் சமனிலையில் முடியும் பட்சத்திலோ? அல்லது இங்கிலாந்து அணி தொடரை 1-0, 2-1 மற்றும் 2-0 என வெற்றிக்கொண்டால் அவுஸ்திரேலிய அணியால் இறுதிப் போட்டிக்கு முன்னேறமுடியும். 

இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை தவிர, ஏனைய அணிகளும் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இல்லை.

இதேவேளை, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 13ம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<