ஹிமேஷ், சந்திமாலின் பிரகாசிப்புடன் ரெட்ஸ் அணிக்கு 2வது வெற்றி

Dialog-SLC Invitational T20 League 2021

124

டயலொக் SLC அழைப்பு T20 லீக் தொடரில் இன்று (18) நடைபெற்ற SLC புளூஸ் அணிக்கு எதிரான போட்டியில், தினேஷ் சந்திமாலின் அரைச்சதம் மற்றும் ஹிமேஷ் ராமநாயக்கவின் சிறந்த பந்துவீச்சு பிரதியுடன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் SLC ரெட்ஸ் அணி வெற்றியை பதிவுசெய்தது.

தொடர் முழுவதும் நாணய சுழற்சியில் வெற்றிபெறும் அணித் தலைவர்கள் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த போதும், தினேஷ் சந்திமால் இந்தப்போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

ஆப்கானிஸ்தானின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகும் அவிஷ்க குணவர்தன

SLC ரெட்ஸ் அணி நிர்ணயித்ததன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய SLC புளூஸ்  அணி, ஆரம்பத்தில் சிறப்பாக ஓட்டங்களை குவித்தது. குறிப்பாக தனன்ஜய லக்ஷான் முதன்முறையாக புளூஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கப்பட்டிருந்தார்.

ஆரம்பத்தில் வேகமாக ஓட்டங்களை குவித்திருந்தாலும், பின்னர் ஹிமேஷ் ராமநாயக்கவின் அபார பந்துவீச்சின் காரணமாக, புளூஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

தனன்ஜய லக்ஷான் அதிகபட்சமாக 55 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், இறுதிநேரத்தில் களமிறங்கி வேகமாக ஓட்டங்களை குவித்த லஹிரு சமரகோன் 21 பந்துகளில் 35 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ரெட்ஸ் அணியின் பந்துவீச்சில் ஹிமேஷ் ராமநாயக்க 4 விக்கெட்டுகளையும், சாமிக்க கருணாரத்ன 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய ரெட்ஸ் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த அணித் தலைவர் தினேஷ் சந்திமால் அரைச்சதம் கடந்ததுடன் ஓசத பெர்னாண்டோ, அசேல குணரத்ன மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோரின் பங்களிப்புடன் ரெட்ஸ் அணி 19 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

தினேஷ் சந்திமால் அதிகபட்சமாக 59 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஓசத பெர்னாண்டோ 27 ஓட்டங்கள், அசேல குணரத்ன 23 ஓட்டங்கள் மற்றும் சாமிக்க கருணாரத்ன 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். புளூஸ் அணியின் பந்துவீச்சில் லஹிரு சமரகோன், பிரவீன் ஜயவிக்ரம, டில்ஷான் மதுஷங்க மற்றும் மஹீஸ் தீக்ஷன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

SLC ரெட்ஸ் அணியானது முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த போதும், கடந்த இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று, 4 புள்ளிகளுடன் 3வது இடத்தை தக்கவைத்துள்ளதுடன், புளூஸ் அணியானது, 4 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது.

அதேநேரம், புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் கிரேய்ஸ் அணி முதலிடத்தை தக்கவைத்துள்ளதுடன், இன்றைய தினம் தொடரில் எந்த வெற்றியையும் பெறாத, கிரீன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…