NSL தொடரில் ஜொலித்த துடுப்பாட்ட வீரர்கள்

National Super League Four Day Tournament 2022

278

இலங்கை கிரிக்கெட் சபையினால் முதல் முறையாக ஏற்பாடு செய்த அங்குரார்ப்பண தேசிய சுபர் லீக் (NSL) நான்கு நாள் கிரிக்கெட் தொடரானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) நிறைவுக்கு வந்தது.

கொழும்பு, காலி, கண்டி, தம்புள்ள மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 5 அணிகள் பங்குகொண்ட இந்தப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் தனன்ஜய டி சில்வா தலைமையிலான யாழ்ப்பாண அணியை வீழ்த்தி கமிந்து மெண்டிஸ் தலைமையிலான கண்டி அணி சம்பியனாகத் தெரிவாகியது.

முன்னதாக இந்தப் போட்டித் தொடரின் முதல் வாரத்தில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் விளையாடியிருந்தாலும், அவுஸ்திரேலிய அணிக்கெதிரான T20 தொடர் மற்றும் இந்திய அணிக்கெதிரான T20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றதால் இடைநடுவில் அவர்கள் விலகிக்கொண்டனர். எனினும், குறித்த தொடர்கள் நிறைவடைந்த பிறகு தேசிய அணி வீரர்கள் தொடரின் கடைசி லீக் போட்டியில் மீண்டும் தத்தமது அணிகளுடன் இணைந்துகொண்டனர்.

>>NSL தொடரின் சம்பியனாக மகுடம் சூடியது கண்டி அணி

எவ்வாறாயினும், தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் அதிகளவான இளம் வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன்படி, 24 சதங்கள், 65 அரைச்சதங்கள், 82 சிக்ஸர்கள், 1,169 பௌண்டரிகள் என பல சாதனைகளும், ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளும் கடந்த 6 வாரங்களில் அரங்கேறின.

அதுமாத்திரமின்றி, இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த முதல் 10 வீரர்களில் 9 பேர் இலங்கை டெஸ்ட் அணிக்காக இதுவரை விளையாடாத வீரர்கள் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும். அதிலும், 8 வீரர்கள் முதல்தரப் போட்டிகளில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து அதிக ஓட்டங்களைக் குவித்த முதல் ஐந்து வீரர்கள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

கமிந்து மெண்டிஸ் (886 ஓட்டங்கள்)

அங்குரார்ப்பண தேசிய சுபர் லீக் நான்கு நாள் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக கண்டி அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் இடம்பிடித்தார்.

இம்முறை தேசிய சுபர் லீக்கில் ஆரம்பத்தில் இருந்து ஓட்டங்களைக் குவித்த அவர் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற பெருமையை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடர் நிறைவடையும் வரை தக்கவைத்துக் கொண்டார்.

அத்துடன் இத்தொடரில் நான்கு சதங்கள் மற்றும் நான்கு அரைச்சதங்களைக் குவித்த அவர், அதிக சிக்ஸர்கள் மற்றும் பௌண்டரிகள் அடித்த வீரராகவும் இடம்பிடித்தார்.

எதுஎவ்வாறாயினும், இம்முறை தேசிய லீக்கில் வெற்றிகரமான துடுப்பாட்ட வீரராக வலம்வந்த கமிந்து மெண்டிஸ், 6 போட்டிகள், 11 இன்னிங்ஸ்களில் 886 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அவரது ஓட்ட விகிதம் 80.54 ஆக காணப்படுகின்றது.

இதில், யாழ்ப்பாண அணிக்கெதிரான 4ஆவது லீக் போட்டியில் 137 ஓட்டங்களை அதிகபட்சமாக அவர் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, காலி அணிக்கெதிரான அரை இறுதிப் போட்டியில் சதமடித்து அசத்திய கமிந்து மெண்டிஸ், யாழ்ப்பாண அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் 87 ஓட்டங்களை எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை துரதிஷ்டவசமாக தவறவிட்டார்.

எனவே, இந்தத் தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் ஜொலித்த கமிந்து மெண்டிஸ், அங்குரார்ப்பண தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரின் தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் துடுப்பாட்டத்தைப் போல ஒரு தலைவராக கண்டி அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த 23 வயதான கமிந்து மெண்டிஸுக்கு மிக விரைவில் இலங்கை டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.

இலங்கைக்காக வெறும் 7 ஒருநாள் மற்றும் 5 T20 போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள கமிந்து மெண்டிஸ் அண்மைக்காலங்களில் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற திறமையான சகலதுறை வீரர். எனவே, இலங்கை டெஸ்ட் அணிக்குள் திறமையான வீரர்களை உள்ளீர்க்கும் நோக்கில் நடத்தப்பட்ட தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இடம்பிடித்த கமிந்து மெண்டிஸை அடுத்த மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை  குழாத்தில் இணைத்துக்கொள்ள தேர்வாளர்கள், இலங்கை அணியின் புதிய பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வூட் மற்றும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன ஆகியோர் கட்டாயம் கவனம் செலுத்துவர்.

ஓஷத பெர்னாண்டோ (721 ஓட்டங்கள்)

இலங்கை கிரிக்கெட் அணிக்காக மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகின்ற வீரர் தான் ஓஷத பெர்னாண்டோ. 30 வயதான இவர் இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அத்துடன், இந்தத் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதையும் தட்டிச் சென்றார்.

இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் கண்டி அணிக்காக 3ஆம் இலக்க வீரராக விளையாடிய ஓஷத, நான்கு சதங்கள், 3 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 721 ஓட்டங்களைக் குவித்தார்.

இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் முதல் சதத்தைப் பெற்றுக்கொண்ட வீரராக இடம்பிடித்த ஓஷத பெர்னாண்டா, 11 இன்னிங்ஸ்களில் 7 சிக்ஸர்கள், 77 பௌண்டரிகளை விளாசி அதிக சிக்ஸர்கள், பௌண்டரிகள் அடித்த வீரர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

கண்டி அணிக்காக முதல் போட்டியில் இருந்து தொடர்ச்சியாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த இவர், காலி அணிக்கெதிரான அரை இறுதிப் போட்டி மற்றும் யாழ்ப்பாண அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் சதங்களைக் குவித்து அசத்தியிருந்தார்.

எனவே, இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் கண்டி அணிக்கு சம்பியன் பட்டம் வென்று கொடுப்பத்தில் முக்கிய பங்கு வகித்த ஓஷதவுக்கு இலங்கை டெஸ்ட் குழாத்தில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, அண்மைக்காலங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளை எடுத்துக் கொண்டால் இலங்கை அணியில் 3ஆம் இலக்கத்தில் விளையாட நிரந்தர வீரர் ஒருவர் இன்றி தடுமாறியிருந்தமையை எம்மால் பார்க்க முடிந்தது. அந்தவகையில் ஏற்கனவே இலங்கை டெஸ்ட் அணியில் 3ஆம் இலக்க வீரராக களமிறங்கிய ஓஷத பெர்னாண்டோவுக்கு மீண்டும் அந்த வாய்ப்பை கொடுக்க வேண்டும்.

>>கண்டி அணிக்காக சதமடித்து அசத்திய ஓஷத பெர்னாண்டோ

குறிப்பாக, கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஓஷத பெர்னாண்டோ விளையாடியிருந்தாலும், அவரால் எதிர்பார்த்தளவு ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் போனது. முதல் போட்டியில் 18, 14 ஓட்டங்களையும், 2ஆவது போட்டியில் 3, 14 ஓட்டங்களையும் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

இதன்காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், தற்போது தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரின் மூலம் மீண்டும் போர்முக்கு திரும்பியுள்ள ஓஷத பெர்னாண்டோவுக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியில் வாய்ப்பு கொடுப்பதற்கு எமது தேர்வாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லஹிரு உதார (464 ஓட்டங்கள்)

இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற கண்டி அணிக்காக மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராக துடுப்பாட்டத்தில் பிரகாசித்தவர் தான் லஹிரு உதார. இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 464 ஓட்டங்களைக் குவித்த லஹிரு, 5 அரைச்சதங்களைப் பெற்றுக்கொண்டார்.

28 வயதான இவர், அண்மைக்காலமாக உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் தொடர்ச்சியாக ஓட்டங்களைக் குவித்து போர்மில் இருந்து வந்தாலும், துரதிஷ்டவசமாக அவருக்கு இதுவரை இலங்கை அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்பு கிட்டவில்லை. இலங்கை வளர்ந்து வரும் அணி மற்றும் இலங்கை A அணிக்காக விளையாடியுள்ள லஹிரு உதார, 2014 முதல் இதுவரை 60 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் மற்றும் 21 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 3,916 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதுள்ள நிலையில் லஹிரு உதாரவுக்கு இலங்கை அணியில் வாய்ப்பு கிடைப்பதென்பது மிக மிக அரிது என்றே கூறலாம்.

சமிந்த பெர்னாண்டோ (454 ஓட்டங்கள்)

இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் 454 ஓட்டங்களைக் குவித்த சமிந்த பெர்னாண்டோ, அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களுக்கான பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

யாழ்ப்பாண அணியின் விக்கெட் காப்பாளராகச் செயற்பட்ட சமிந்த பெர்னாண்டோ, 2 சதங்கள் மற்றும் 2 அரைச்சதங்களைப் பெற்று யாழ்ப்பாண அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இடம்பிடித்தார்.

25 வயதான வலதுகை துடுப்பாட்ட வீரரான சமிந்த, 2017 முதல் முதல்தரப் போட்டிகளில் விளையாடி வருவதுடன், இதுவரை 27 போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் மற்றும் 10 அரைச்சதங்களுடன் 1,692 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

பபசர வதுகே (421 ஓட்டங்கள்)

28 வயது வலதுகை துடுப்பாட்ட வீரரான பபசர வதுகே, தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் காலி அணிக்காக விளையாடியிருந்தார்.

காலி அணிக்காக மத்திய வரிசையில் களமிறங்கிய அவர் அந்த அணிக்காக 5 போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் ஒரு அரைச்சதம் உள்ளடங்கலாக 421 ஓட்டங்களைக் குவித்தார்.

இதில் கண்டி அணிக்கெதிரான முதல் போட்டியில் சதமடித்து அசத்திய அவர் அதே அணியுடனான அரை இறுதிப் போட்டியில் அரைச்சதம் அடித்திருந்தார்.

இந்தப் பட்டியலில் முறையே 6 முதல் 10 ஆகிய இடங்கள் வரை மினோத் பானுக (தம்புள்ளை – 418 ஓட்டங்கள்), நிஷான் மதுஷ்க (யாழ்ப்பாணம் – 394 ஓட்டங்கள்), சஹன் ஆரச்சிகே (கண்டி – 388 ஓட்டங்கள்), சங்கீத் குரே (காலி – 382 ஓட்டங்கள்), ஹஷான் துமிந்து (காலி – 377 ஓட்டங்கள்) ஆகிய வீரர்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<