இலங்கையை ஒருநாள் தொடரில் வைட்வொஷ் செய்த பாகிஸ்தான் கட்புலனற்றோர் அணி

22

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி, தமது சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணியுடன் 40 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடியுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்டதாக அமைந்திருந்த இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி கொழும்பு MCA மைதானத்திலும், இரண்டாவது போட்டி BRC மைதானத்திலும், மூன்றாவது போட்டி புளூம்பீல்ட் மைதானத்திலும் இடம்பெற்று முடிந்திருக்கின்றது.  

இலங்கை கட்புலனற்றோர் அணியை வைட்-வொஷ் செய்த இந்திய கட்புலனற்றோர் அணி

இந்திய …

இதேநேரம், நடைபெற்று முடிந்திருக்கும் இந்த ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி, தொடரை 3-0 என வைட்வொஷ் செய்திருக்கின்றது.

முதலாவது ஒருநாள் போட்டி

கடந்த வியாழக்கிழமை (21) ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கியது.

இதன்படி முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணியினர் 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 216 ஓட்டங்களை மட்டுமே குவித்தனர். இலங்கை கட்புலனற்றோர் அணியின் துடுப்பாட்டத்தில் தாபன் குமார 42 ஓட்டங்களையும், கே.. சில்வா 26 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இதேநேரம், பாகிஸ்தான் அணியில் பகார் அப்பாஸ் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், பதார் முனி மற்றும் ஷஹ்சேப் கைதர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 217 ஓட்டங்களை அடைய பதிலுக்கு தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி, 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Photo Album : Sri lanka vs Pakistan Blind Cricket Tournament 2019 – 3rd ODI

பாகிஸ்தான் கட்புலனற்றோர் அணியின் துடுப்பாட்டத்தில் அதன் வெற்றிக்கு உதவிய மொஹ்சின் கான் 40 பந்துகளில் 69 ஓட்டங்களை குவித்ததுடன்,  பதார் முனீர் வெறும் 25 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் நிற்க, அயூப் கானும் 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார்.

இலங்கை கட்புலனற்றோர் அணியின் பந்துவீச்சில் K.A. சில்வா ஒரு விக்கெட்டினை சாய்த்திருந்த போதிலும் அது வீணாகியிருந்தது. இந்த வெற்றியுடன் பாகிஸ்தான் கட்புலனற்றோர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 216 (31.5) தாபன் குமார 42, பகார் அப்பாஸ் 3/35, பதார் முனீர் 2/40, சஹ்ஷேப் ஹைதர் 2/44

பாகிஸ்தான் – 217/2 (18.3) மொஹ்சின் கான் 69, பதார் மூனீர் 64*, அயூப் கான் 55*, கே.. சில்வா 1/44

முடிவுபாகிஸ்தான் 8 விக்கெட்டுகளால் வெற்றி

இரண்டாவது ஒருநாள் போட்டி

ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி முன்னிலை பெற்றிருக்க, இரண்டாவது ஒரு நாள் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமானது.

இப்போட்டியின் நாணய சுழற்சியிலும் வெற்றி பெற்றுக் கொண்ட பாகிஸ்தான் கட்புலனற்றோர் அணி இலங்கை கட்புலனற்றோர் அணியினை முதலில் துடுப்பாட அழைத்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 383 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

இலங்கை கட்புலனற்றோர் அணியின் துடுப்பாட்டத்தில் சமிந்த தேஷப்பிரிய சதமொன்றுடன் 138 ஓட்டங்களை குவித்ததோடு, பாகிஸ்தான் கட்புலனற்றோர் அணியின் பந்துவீச்சில் மொஹ்சின் கான் 2 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 384 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி, 33.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. பாகிஸ்தான் கட்புலனற்றோர் அணியின் வெற்றிக்கு சதம் கடந்த நிசார் அலி 121 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் நின்று உதவ, மொஹமட் றிசித் (83) மற்றும் றியாசத் கான் (50) ஆகியோர்  அரைச்சதங்களுடன் பங்களிப்புச் செய்திருந்தனர்.

இப்போட்டியின் வெற்றியோடு பாகிஸ்தான் கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை 2-0 என கைப்பற்றிக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 383/8 (40) சமிந்த தேஷப்பிரிய 138, தினிஷ் மதுவந்த 38, மொஹ்சின் கான் 2/29

பாகிஸ்தான் – 384/4 (33.4) நிசார் அலி 121*, மொஹமட் றிசித் 83, றியாசத் கான் 50, தமித் சந்தருவன் 1/38

போட்டி முடிவுபாகிஸ்தான் கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி

மூன்றாவது ஒருநாள் போட்டி

நேற்று (25) இடம்பெற்ற ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில், ஆறுதல் வெற்றி ஒன்றினை எதிர்பார்த்த வண்ணம் இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி தமது விருந்தாளி அணியினரை எதிர்கொண்டது.  

Photo Album : Sri Lanka vs Pakistan Blind Cricket Tournament 2019 – 2nd ODI

இம்முறை போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 448 ஓட்டங்களை குவித்துக் கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் மொஹமட் ராசிட் (179*) மற்றும் றியாசத் கான் (100) ஆகியோர் அபார சதங்கள் பெற, இலங்கை கட்புலனற்றோர் அணியின் பந்துவீச்சில் உபுல் சஞ்சீவ மற்றும் சுரங்க சம்பத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர்.  

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவால் நிறைந்த 449 ஓட்டங்களை அடைய பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 9 விக்கெட்டுகளுக்கு 342 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் சதம் பெற்ற தமித் சந்தருவன் 107 ஓட்டங்களுடன் போராட்டம் காட்டியிருக்க, ஏனைய வீரர்கள் சோபிக்க தவறியிருந்தனர்.  

பாகிஸ்தான் கட்புலனற்றோர் அணியின் பந்துவீச்சில் மஹ்தி வானா, மொஹ்சின் கான் மற்றும் பகார் அப்பாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்ததோடு, இலங்கை கட்புலனற்றோர் அணியினையும் ஒரு நாள் தொடரில் 3-0 என வைட்வொஷ் செய்யவும் பங்களிப்புச் செய்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 448/7 (40) மொஹமட் றசீட் 179*, றியாசத் கான் 100, உபுல் சஞ்சீவ 2/68, சுரங்க சம்பத் 2/51

இலங்கை – 342/9 (40) தமித் சந்தருவன் 107, மஹ்தி வானா 2/58, மொஹ்சின் கான் 2/47, பகார் அப்பாஸ் 2/56

முடிவுபாகிஸ்தான் கட்புலனற்றோர் அணி 116 ஓட்டங்களால் வெற்றி