உலகக் கிண்ண அரையிறுதி கடமையில் தர்மசேன மற்றும் மடுகல்ல

1838
©ICC

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ள நிலையில், அரையிறுதிச் சுற்று நாளை (09) ஆரம்பிக்கின்றது.

முதல் அரையிறுதிப் போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி, நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை மென்செஸ்டர் – ஓல்ட் ட்ரெப்போர்ட் மைதானத்தில் நாளை (09) எதிர்கொள்ளவுள்ளதுடன், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி எதிர்வரும் 11ம் திகதி பேர்மிங்கமில் வைத்து அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. 

அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் உஸ்மான் கவாஜா

2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் …….

இவ்வாறிருக்கையில், உலகக் கிண்ண அரையிறுதிகளுக்கான போட்டி மத்தியஸ்தர் மற்றும் நடுவர்களாக கடமையாற்றவுள்ளவர்களின் பெயர் விபரங்களை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. லீக் போட்டிகளுக்கான நடுவர் மற்றும் மத்தியஸ்தர்கள் குழாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அரையிறுதிக்கான நடுவர் மற்றும் மத்தியஸ்தர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இலங்கையைச் சேர்ந்த முன்னணி போட்டி நடுவரான குமார் தர்மசேன மற்றும் இலங்கையைச் சேர்ந்த முன்னணி போட்டி மத்தியஸ்தரான ரஞ்சன் மடுகல்ல ஆகியோர் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் இணைந்து செயற்படவுள்ளனர். 

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நாளை (09) நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் கள நடுவர்களாக இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ரிச்சர்ட் கெட்ல்பொரொக் ஆகியோர் செயற்படவுள்ளனர். மூன்றாவது நடுவராக அவுஸ்திரேலியாவின் ரொட் டக்கர் மற்றும் நான்காவது போட்டி அதிகாரியாக இங்கிலாந்தின் நைஜர் லொங் செயற்படவுள்ளதுடன், போட்டி மத்தியஸ்தராக அவுஸ்திரேலியாவின் டேவிட் பூன் செயற்படவுள்ளார்.

இதேவேளை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கள நடுவர்களாக இலங்கையின் குமார் தர்மசேன மற்றும் தென்னாபிரிக்காவின் மரைஷ் எரஸ்மஸ் ஆகியோர் செயற்படவுள்ளனர். மூன்றாவது நடுவராக நியூசிலாந்தின் க்ரிஸ் கெப்பனியும், நான்காவது போட்டி அதிகாரியாக பாகிஸ்தானின் அலிம் தாரும் செயற்படவுள்ளனர். இந்த அரையிறுதிக்கான போட்டி மத்தியஸ்தராக இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல செயற்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<