அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் உஸ்மான் கவாஜா

292
Image Courtesy - ICC

2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் தற்சமயம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டு அரையிறுதிப் போட்டிகள் மற்றும் சம்பியனை தீர்மானிக்கின்ற இறுதிப் போட்டி ஆகியன மாத்திரம் எஞ்சியுள்ளன.

இந்நிலையில் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள அணிகளிலிருந்து போட்டியில் விளையாடும் வீரர்களின் உபாதை அணிக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. 

உலகக் கிண்ணத்தில் அசத்திய மாலிங்க பந்துவீச்சாளர் தரவரிசையில் முன்னேற்றம்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள்…..

அவுஸ்திரேலிய அணியானது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்வரும் வியாழக்கிழமை (11) பேர்மிங்ஹமில் சந்திக்கவுள்ளது. இந்நிலையில் உலகக்கிண்ண தொடரின் லீக் போட்டிகளின் இறுதிப்போட்டி சனிக்கிழமை (06) அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. 

ஏற்கனவே அவுஸ்திரேலிய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், தென்னாபிரிக்க அணி ஆறுதல் வெற்றிக்காக அவுஸ்திரேலிய அணியை எதிர்த்தாடியது. இறுதி நேரம் வரை விறுவிறுப்பாக சென்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி 10 ஓட்டங்களினால் த்ரில் வெற்றி பெற்றது. 

இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி தோல்வியுற்றதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பெறும் வாய்ப்பை இழந்தது. இது ஒரு புறம் இருக்க அவுஸ்திரேலிய அணிக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. 326 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடும் போது மூன்றாமிலக்க துடுப்பாட்ட வீரராக இடது கை துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா களமிறங்கினார். 

அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 20 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஐந்து பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட நிலையில் கவாஜா தசைப்பிடிப்புக்கு உள்ளான நிலையில் மைதானத்திலிருந்து வெளியேறினார். இந்நிலையில் மீண்டும் எட்டாவது விக்கெட்டுக்காக துடுப்பெடுத்தாடுவதற்கு ஆடுகளம் நுழைந்தார். பின்னர் மேலும் ஒன்பது பந்துகளை எதிர்கொண்ட கவாஜாவால் தொடர்ந்தும் நிலைத்தாட முடியாமல் போக 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

உபாதைக்குள்ளான உஸ்மான் கவாஜா குறித்து ஆரோன் பின்ச்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு…..

இவ்வாறான நிலையில் மருத்துவ பரிசோதனையின் பின்னர் கிடைத்த முடிவுகளின்படி தசைப்பிடிப்பு உபாதையிலிருந்து உஸ்மான் கவாஜா மீளுவதற்கு மூன்று அல்லது நான்கு வாரங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் காரணமாக எஞ்சியுள்ள உலகக்கிண்ண தொடரின் போட்டிகளிலிருந்து உஸ்மான் கவாஜா வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நடப்பு உலகக்கிண்ண தொடரில் கவாஜா 9 போட்டிகளில் 316 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உஸ்மான் கவாஜாவின் இடத்தை நிரப்புவதற்காக விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான மெத்யூ வேட் அவுஸ்திரேலிய அணியின் குழாமில் பதில் வீரராக உள்வாங்கப்படவுள்ளார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இதற்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய அனுமதியை எதிர்பார்த்த வண்ணம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை உள்ளது. 

2012 ஆம் ஆண்டு ஒருநாள் அறிமுகம் பெற்ற 31 வயதுடைய இடதுகை துடுப்பாட்ட வீரரான மெத்யூ வேட் அவுஸ்திரேலிய அணிக்காக 94 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 10 அரைச்சதங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 1,777 ஓட்டங்களை குவித்துள்ளார்.      

மேலும், நேற்றைய போட்டியினூடாக சகலதுறை வீரரான மார்கஸ் ஸ்டொய்னிஸ் உடற்தகுதி பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார். ஆனால் அரையிறுதி போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டொய்னிஸ் விளையாடும் தகுதியை இழக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக மிட்செல் மார்ஷ் அணியில் இடம்பெறுவார்.

நாங்கள் உலகின் முன்னணி அணியாக மாறுவோம் – திமுத் கருணாரத்ன

இலங்கை அணியில் சங்கக்கார, மஹேல உள்ளிட்ட முன்னணி…..

மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஏற்கனவே உபாதை காரணமாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுடனான போட்டியில் விளையாடவில்லை. இதேவேளை உலகக்கிண்ண தொடர் ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய அணியிலிருந்து உபாதை காரணமாக துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஸ் வெளியேறி அவருக்கு பதிலாக பீட்டர் ஹேன்ஸ்கொம்ப் குழாமில் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<