உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில், வலிமைமிக்க இந்திய அணியை பாக்கர் சமான் மற்றும் மொஹமட் அமீர் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் பாகிஸ்தான் அணி துவம்சம் செய்து 180 ஓட்டங்களால் பாரிய வெற்றியீட்டியது.

போட்டி நடைபெறுவதற்கு முன்னரே பாகிஸ்தான் அணி, வலிமை மிக்க இந்திய அணியை வெல்வதற்கு பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றால் முதலில் துடுப்பாடி 300 ஓட்டங்களுக்கு மேல் பதிவு செய்து, பந்து வீச்சில் அழுத்தம் கொடுத்தால் வெற்றியீட்டலாம் என்ற பலரின் எதிர்வு கூறலுக்கு மத்தியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

அந்த வகையில் முதலில் துடுப்பாடக் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, சிறந்ததொரு திட்டமிடலுடன் துடுப்பாடக்கூடியதை காணக்கூடியதாக இருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அசார் அலி மற்றும் பாக்கர் சமான் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 23 ஓவர்களில் தங்களுக்கிடையே 128 ஓட்டங்களை பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்ததோடு இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர்.

தனது ஆரம்ப 5 ஓவர்களை சிறப்பாக வீசிய புவனேஷ்வர் குமார் இரண்டு ஓட்டமற்ற ஓவர்கள் உள்ளடங்கலாக ஓட்டங்களை கட்டுப்படுத்திய போதும் ஜஸ்பிரிட் பும்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரின் பந்து வீச்சை பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் துவம்சம் செய்ததோடு அணியின் ஓட்ட எண்ணிக்கையையும் விரைவாக உயர்த்தினர்.

பந்து வீச்சில் பல்வேறான மாற்றங்களை இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி ஏற்படுத்திய பொழுதிலும், சிறப்பாக துடுப்பாடிய பாக்கர் சமான் தனது கன்னி சதத்தினையும், அசார் அலி சம்பியன்ஸ் கிண்ணத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது அரைச் சதத்தினையும் பதிவு செய்தனர்.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 128 ஆக இருந்தபோது முதலாவது விக்கெட்டாக அசார் அலி 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 59 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ரன் அவுட் முறை மூலம் ஆட்டமிழந்து சென்றார்.

அதனை தொடர்ந்து பாக்கர் சமானுடன் இணைந்து கொண்ட பாபர் அசாம் மேலும் 72 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை மேலும் வலுப்படுத்தினார்.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 200 ஆக காணப்பட்ட நிலையில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 114 ஓட்டங்களைக் குவித்திருந்த பாக்கர் சமான் ஹர்திக் பாண்டியாவின் பந்து வீச்சில் ஜடேஜாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து துடுப்பாடக் களமிறங்கிய சொஹைப் மாலிக் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் ஓட்டங்களை வேகமாகப் பெற முயன்ற நிலையில், பாபர் அசாம் 46 ஓட்டங்களுக்கும் சொஹைப் மாலிக் 12 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்து சென்றனர்.

எனினும், அதனையடுத்து களமிறங்கிய மொஹமத் ஹபீஸ் மற்றும் இமாத் வசிம் ஆகியோர் 7.3 ஓவர்களில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டதோடு 50 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 338 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்கு பங்களிப்பு செய்தனர்.

அதிரடியாக துடுப்பாடிய மொஹமத் ஹபீஸ் 37 பந்துகளில் 57 ஓட்டங்களையும் இமாத் வசிம் 25 ஓட்டங்களையும் பதிவு செய்தனர். பந்து வீச்சில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு பாகிஸ்தான் அணியினர் இடமளிக்கவில்லை. புவனேஷ்வர் குமார், கேதர் ஜாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.    

அதனையடுத்து கடின வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய, சிறந்த துடுப்பாட்ட வரிசையை கொண்ட இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே பாகிஸ்தான் அணி, பந்து வீச்சில் அதிர்ச்சியளித்தது. முதலாவது ஓவரிலேயே ரோஹித் ஷர்மா ஓட்டமெதுவும் பெறாமலே மொஹமட் அமீரின் பந்து வீச்சில் LBW முறையில் ஆடுகளத்திலிருந்து வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் துடுப்பாடக் களமிறங்கிய இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி வெறும் 5 ஓட்டங்களுடன் மொஹமட் அமீரின் சிறந்த பந்து வீச்சுக்கு இலக்காகி ஓய்வறை திரும்பினார்.

ஷிக்கர் தவானுடன் இணைந்து கொண்ட யுவராஜ் சிங் நிதான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவிக்க முயற்சித்த போதிலும் வெறும் 27 ஓட்டங்களை மாத்திரமே இணைப்பாட்டமாக பெற்ற நிலையில் தவான் 21 ஓட்டங்களுடனும் பின்னர் யுவராஜ் சிங் 22 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

அதனையடுத்து துடுப்பாடக் களமிறங்கிய முன்னாள் அணித் தலைவர் MS தோணி உள்ளடங்கலாக ஏனைய வீரர்கள் ஒற்றை ஓட்ட இலக்கங்களுடன் வெளியேறிய போதிலும், அதிரடியாக துடுப்பாடிய ஹர்திக் பாண்டியா 43 பந்துகளில் 76 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரன் அவுட் மூலம் களத்திலிருந்து வெளியேற இந்திய அணியின் தோல்வி உறுதியானது. எனினும், அதிரடியாக துடுப்பாடிய ஹர்திக் பாண்டியா சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் வேகமான அரைச் சதத்தினை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.   

இறுதியில் இந்திய அணி 30.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று 180 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

அதேநேரம் பாகிஸ்தான் அணி சார்பாக இன்றைய தினம் சிறப்பாக பந்து வீசிய மொஹமட் அமீர் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்  

பாகிஸ்தான் – 338/4 (50) – பாக்கர் சமான் 114, அசார் அலி 59, மொஹமட் ஹபீஸ் 57*, பாபர் அசாம் 46, இமாத் வசிம் 25*, புவனேஷ்வர் குமார் 44/1, கேதர் ஜாதவ் 27/1, ஹர்திக் பாண்டியா 53/1

இந்தியா – 158 (30.3) – ஹர்திக் பாண்டியா 76, ஷிக்கர் தவான் 21, யுவராஜ் சிங் 22, மொஹமட் அமீர் 16/3, ஹசன் அலி 19/3, சடாப் கான் 60/2

முடிவு – பாகிஸ்தான் அணி 180 ஓட்டங்களால் வெற்றி.

போட்டியின் ஆட்ட நாயகன் – பாக்கர் சமான் (பாகிஸ்தான்)
தொடரின் ஆட்ட நாயகன் – ஹசன் அலி (பாகிஸ்தான்)
தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரர் – சிக்கர் தவான் (இந்தியா)
தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் – ஹசன் அலி (பாகிஸ்தான்)