கடற்படையை வீழ்த்தி சம்பியன் கிண்ணம் வென்ற இராணுவப்படை

270

இந்த வருடத்திற்கான பாதுகாப்பு சேவைகள் கால்பந்து சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழக அணியை 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழக வீரர்கள் தொடரின் சம்பியனாகத் தெரிவாகியுள்ளனர்.

ஏற்கனவே இடம்பெற்ற லீக் சுற்றின் நிறைவில் ஒரு வெற்றி மற்றும் ஒரு சமநிலையான முடிவைப் பெற்ற இராணுவப்படை அணியும் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்த கடற்படை அணியும் கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் அரங்கில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

போட்டி ஆரம்பமாகி 10 நிமிடங்கள் கடந்த நிலையில் கடற்படை வீரர் ஷதுர பொண்ணம்பெரும ஒரு திசையில் இருந்து உள்ளனுப்பிய பந்தை இராணுவப்படை பின்கள வீரர் ரொஷான் அப்புஹாமி தடுக்க முயற்சிக்கையில், அவரது காலில் பட்ட பந்து கோலுக்குள் செல்ல, ஓன் கோல் முறையில் கடற்படை அணி போட்டியின் முதல் கோலைப் பெற்றுக்கொண்டது.

இதன் பின்னர் இரு அணிகளுக்கும் கோலுக்கான சிறந்த முயற்சிகள் பல வந்த போதும் அவை எதுவும் கோலாக்கப்படாமையினால் முதல் பாதி கடற்படையினரின் முன்னிலையுடன் நிறைவு பெற்றது.

இரண்டாம் பாதியில், 79ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து இராணுவப்படை வீரர் நதீக புஷ்பகுமார வழங்கிய பந்தைப் பெற்ற சஜித் குமார அதனை கோல் நோக்கி செலுத்த, கடற்படை கோல் காப்பாளர் உதயங்க பெரேரா பந்தை தடுப்பதற்கு கீழே பாய்ந்தார். எனினும், அவரது உண்ணிப்பு பிழையாக இருந்தமையினால் பந்து அவருக்கு மேலால் கோலுக்குள் செல்ல, ஆட்டம் தலா ஒரு கோலுடன் சமநிலையடைந்தது.

மீண்டும் 89ஆவது நிமிடத்தில் றிப்கான் மொஹமட்டிடம் இருந்து பெற்ற பந்தை சஜித் குமார ஒரு திசையில் இருந்து உள்ளனுப்ப, கோலுக்கு அண்மையில் இருந்த அணித் தலைவர் அசிகுர் ரஹ்மான் அதனை கம்பங்களுக்குள் ஹெடர் செய்து இராணுவப்படை அணிக்கான இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.

போட்டியின் உபாதையீடு நேரத்தில் பல வீரர்களுக்கு உபாதைக்கான உதவிகள் வழங்கப்பட, ஆட்ட நிறைவில் 2-1 என்ற கோல் கணக்கில் இராணுவப்படை அணியினர் வெற்றி பெற்று இந்த வருடத்திற்கான பாதுகாப்பு சேவைகள் கால்பந்து சுற்றுத்தொடரின் சம்பியன்களாக மகுடம் சூடிக்கொண்டனர்.

முழு நேரம்: இலங்கை கடற்படை வி.க 1 – 2 இலங்கை இராணுவப்படை வி.க

கோல் பெற்றவர்கள்

இலங்கை கடற்படை வி.க – ரொஷான் அப்புஹாமி (OG)

இலங்கை இராணுவப்படை வி.க – சஜித் குமார, அசிகுர் ரஹ்மான்

   மகளிர் இறுதிப்போட்டி

தொடரின் மகளிர் பிரிவின் இறுதிப் போட்டியிலும் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை இராணுவப்படை அணிகள் மோதின. முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றிருந்த கடற்படை வீராங்கனைகள் போட்டி நிறைவடையும்போது 5-0 என இலகு வெற்றியைப் பதிவு செய்து சம்பியனாக முடிசூடிக்கொண்டனர்.

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<