கடற்படையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய இராணுவப்படை

192

பாதுகாப்பு சேவைகள் கால்பந்து சுற்றுத்தொடர் 2023 இன் ஆடவருக்கான இறுதி லீக் போட்டியில் இலங்கை கடற்படை அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட இலங்கை இராணுவப்படை அணியினர் இரண்டாவது அணியாக தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

தொடரின் முதல் போட்டியில் இலங்கை கடற்படை அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் விமானப்படை அணியை வீழ்த்தியிருந்தது. விமானப்படை மற்றும் இராணுவப்படை இடையிலான அடுத்த போட்டி தலா ஒரு கோலுடன் சமநிலையில் முடிவடைந்திருந்தது.

முன்னைய போட்டி முடிவுகளின்படி கடற்படை அணியினர் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர். எனவே, தொடரின் இறுதிப் போட்டி வாய்ப்பைப் பெறுவதற்காக கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் அரங்கில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற இந்தப் போட்டியில் இராணுவப்படை அணியினர் வெற்றி அல்லது ஒரு சமநிலையான முடிவை எதிர்பார்த்து களம்கண்டனர்.

போட்டியின் முதல் பாதியில் இராணுவப்படை வீரர்களுக்கு கோலுக்கான பல வாய்ப்புகள் கிடைத்த போதும் அவற்றை அவ்வணியின் முன்கள வீரர்களால் சிறப்பாக நிறைவு செய்ய முடியாமல் போனது.

எனினும், இரண்டாம் பாதி ஆரம்பமாகி முதல் சில நிமிடங்களில் மத்திய களத்தில் இருந்து இராணுவப்படை அணித் தலைவர் அசிகுர் ரஹ்மான் வழங்கிய பந்தைப் பெற்ற றிப்கான் அதனை எதிரணியின் கோல் எல்லைவரை எடுத்துச் சென்று எதிர்திசைக்கு செலுத்த, அதனை மதுஷான் டி சில்வா கம்பங்களுக்குள் செலுத்தி அணியை முன்னிலைப் படுத்தினார்.

தொடர்ந்து 60 நிமிடங்கள் கடந்த நிலையில் கோல் எல்லைக்கு வந்த பந்தை அசிகுர் ரஹ்மான் கோலுக்குள் செலுத்த எடுத்த முதல் முயற்சியின்போது எதிரணி வீரர் அதனை ஹெடர் செய்தார். மீண்டும் அந்தப் பந்தை அசிகுர் ஹெடர் செய்ய பந்து கம்பங்களுக்குள் சென்றது.

அதன் பின்னர் இரு அணிகளும் மாற்று வீரர்களை முழுமையாகப் பயன்படுத்தி அடுத்த கோலைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டாலும் இறுதி நிமிடம் வரை கோல்கள் பெறப்படவில்லை.

எனவே, 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற இராணுவப்படை அணி இரண்டாவது அணியாக தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

பாதுகாப்பு சேவைகள் கால்பந்து சுற்றுத்தொடர் 2023 இன் இறுதிப் போட்டி கடற்படை மற்றும் இராணுவப்படை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது. இறுதிப் போட்டிக்கான திகதி இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

முழு நேரம்: இலங்கை இராணுவப்படை வி.க 2 – 0 இலங்கை கடற்கடை வி.க

கோல் பெற்றவர்கள்

இலங்கை இராணுவப்படை வி.க –  மதுஷான் டி சில்வா, அசிகுர் ரஹ்மான்

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<